Monday, February 20, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 31

ஷீரடி சாயிபாபாவின் அனுபவங்கள்-31

அன்புள்ளோரே,
இனிய பாபா நாள் வாழ்த்து.
எவருடைய கருணா கடாக்ஷத்தால் நம் பாவங்கள் எல்லாம் தொலைந்து போய், இவ்வுலக ஈர்ர்ப்புகளிலிருந்து நம்மையெல்லாம் விலக்கிக் கரை சேர்க்கிறதோ, அப்படிப்பட்ட, நம் எல்லாருக்கும் கருணைத் தாயான ஷீர்டி ஸாயியை நாமனைவரும் வணங்குவோம். இங்கு வெளியாகும் அனுபவங்கள் அனைத்துமே இதற்கான நேரடி சாட்சியங்கள். அடியவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்துவதோடு மட்டுமன்றி, தமது வாழ்க்கையில் ஒரு இருண்ட பகுதியில் பயணிக்கும் பலருக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இவை அமைகின்றன. பாபாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டால்,துன்பங்களைத் தரும் நமது கெட்ட நேரங்கள் எல்லாம் தானாகவே விலகிப் போகின்றன என்பது உண்மை மட்டுமல்லாமல், பலராலும் உணரப்பட்டும் இருக்கிறது. மேலும் சில அத்தகைய அனுபவங்கள் இங்கே கீழே கொடுக்கப் பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வியாழக் கிழமையன்றும், 'ஸாயி மொழிகள்' தளத்தின் மூலம் இந்த அற்புதமான, பொருள் பொதிந்த லீலைகளை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் பெயர் அறிவிக்காத அனைத்து அடியார்களுக்கும் எனது மனமார்ந்த வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜெய் ஸாயி ராம்.
மனிஷா


ஸாயி மீதான நம்பிக்கை:

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு ஸாயி அடியவர் எழுதுகிறார்:
எனது பெயரையோ, மின்னஞ்சல் முகவரியையோ வெளியிட வேண்டாமெனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்களது தளத்திற்கு அடிக்கடி வருபவள் நான். பாபாவின் லீலைகளை இங்கே அளிப்பதற்கு எனது வந்தனங்களைச் சொல்லிக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் அதிகப் பரிச்சயம் இல்லாதவள் என்பதால், தேவையான இடங்களில் திருத்தங்களைச் செய்யவும் வேண்டுகிறேன்.

அன்புள்ள ஸாயி பக்தர்களே,
பாபாவுடனான எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்சி அடைகிறேன். முதலாவதாக, பாபாவின் தாமரைப் பாதங்களுக்கு அடியேனின் பணிவன்பான வணக்கம்.
இரு ஆண்டுகளுக்கு முன்னர், எனது பெற்றோர் எனக்கான வரனைத் தேடினர். ஆனால், ஒன்றும் சரியாக அமையவில்லை. பாபாவின் ஆலயத்துக்குச் சென்று, 'உமது அடியார்களில் ஒருவராக இருக்கும் தகுதியான ஒருவரையே எனக்கு மணாளனாகத் தாருங்கள்' என அவரிடம் வேண்டிக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக, எனது பிரார்த்தனைக்கிணங்கவே, ஒரு நல்ல வரனை எனக்குக் காட்டினார். எனது கணவரும் ஒரு தீவிர பாபா பக்தர். 2010-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எனக்குத் திருமணமாயிற்று. அந்தச் சமயத்தில் எனது கணவர் அமெரிக்காவில் பணி புரிந்து கொண்டிருந்தார். எனவே, நாங்கள் இருவரும் அமெரிக்காவுக்கு வந்தோம். அவரது பணியிட மேலாளர் என் கணவரிடம் பிப்ரவரி மாதம் வரை மட்டுமே பணியில் தொடர இயலும் எனக் கூறிவிட்டார்.
எனது கணவர் மிகவும் மனமுடைந்து போனார். ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க ஆரம்பித்து, நான் அதை ஒரு வாரத்துக்குள் முடித்து விட்டேன். அதற்கு முன்னதாக, அவர் மற்றொரு பணியிடத்தின் வேலைக்கான அனுமதிப் பத்திரமும் [Work permit] வைத்திருந்தார். வேலை தேடி, அந்த இடத்துக்கு அவர் விண்ணப்பித்தார். ஆனால், விடுமுறை நாட்கள் என்பதால் அங்கிருந்தும் ஒரு பதிலும் வரவில்லை. என்ன செய்வதெனப் புரியாமல் நாங்கள் இருவரும் மன உளைச்சல் பட்டோம். ஒவ்வொரு கணமும் பாபாவிடம் தீவிரமாக வேண்டிக் கொள்வது ஒன்று மட்டுமே அப்போது எங்கள் கைகளில் இருந்தது.
ஜனவரி மாதத்தில், அந்த மற்றொரு பணியிடத்திலிருந்து வேறொரு மாநிலத்தில் இருக்கும் ஒரு பணியிடத்துக்கான நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லி அழைப்பு வந்தது. முதல் சுற்றுத் தேர்வை வெற்றிகரமாக முடித்து, வாடிக்கையாளருடனான தேர்வுக்கு அழைத்தனர். அந்தச் சுற்றையும் சரியாக முடித்தாலும், அந்தப் பணியின் மேலாளருடன் மேலும் ஒரு சுற்று நேர்முகத் தேர்வுக்கு வரச் சொன்னார்கள். ஆனால், நேரமோ, காலமோ குறிப்பிடவில்லை. தற்போது செய்து வரும் வேலை முடிய இன்னும் ஒரு மாத காலமே இருந்ததால், நாங்கள் மிகவும் பதட்டமடைந்தோம்.
அதிசயமாக, புதுப் பணியிடத்திலிருந்து அழைப்பு வந்து, அவர் தேர்வு செய்யப்பட்டு, பிப்ரவரி மாதம் முதல் வாரமே வேலையில் சேரச் சொல்லி விட்டார்கள். நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைந்தோம். அப்போதிருந்த வேலையை ராஜிநாமா செய்யக் கடிதம் கொடுத்துவிட்டு, இந்தப் புது வேலைக்கான அழைப்பை எனது கணவர் ஏற்றுக் கொண்டார். புது ஊருக்குச் செல்வதற்கான ஆயத்தங்களில் இறங்கினோம். அதுவரையில் நாங்கள் எங்களது உறவினர்களுடன் தங்கி இருந்தோம். இது புது இடம் என்றாலும், வீடு தேடுவது, கார் வாங்குவது, இன்னும் மற்றெல்லாவற்றிலுமே பாபா ஒவ்வொரு கணமும் எங்கள் கூடவே இருந்து அனைத்தையும் சுமுகமாக முடித்துத் தந்தார்.
பிப்ரவரி மாதம் இந்தப் புது ஊருக்கு வந்து படிப்படியாக நாங்கள் வாழத் தொடங்கினோம். இந்த சமயத்தில் நான் கருவுற்றேன். தகுந்த மருத்துவரைத் தேடுவது கடினமாக இருந்தது. பல இடங்களைக் கூப்பிட்டுப் பார்த்தும், எங்களது காப்புரிமை[Insurance] சரியாக இல்லை, அது, இது, என மறுத்து விட்டனர். இப்படிப் பல இடங்களில் தேடியும் ஒன்றும் கிடைக்காமல் இருந்த நேரத்தில், ஒரு இடத்தில் என்னுடன் பேசியவர் ஒரு மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, இது பெண்களுக்கான விசேஷ மருத்துவமனை என்றும், அங்கு நான் முயற்சி செய்து பார்க்கலாம் எனவும் கூறினார். உடனடியாக இணையத்தில் அந்த மருத்துமனையையும், அங்கு பணி புரியும் மருத்துவர்களின் பெயர்களையும் தேடி, ஒரு இந்தியப் பெண் மருத்துவரின் பெயரைக் கண்டு பிடித்தேன். இவர் என்னை மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டார். ஆனால், மூன்று மாதங்களிலேயே எனக்குக் குறைப் பிரசவம் ஆகிவிட்டது. ஆனால், எப்படியோ பாபா எனக்கு ஒரு நல்ல மருத்துவரைக் காட்டி என்னைக் காப்பாற்றினார். இப்போது நான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன். ஒவ்வொரு கணமும் பாபா எங்களுடனேயே இருக்கிறார் . நல்ல ஒரு ஆரோக்கியமான குழந்தையை பாபாவின் அருளால் பெறுவேன் என நிச்சயமாக நம்புகிறேன்.
இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்னர், தனது மார்பகத்துக்குப் பக்கத்தில் ஒரு கட்டி இருப்பதை உணர்ந்த என் தாய், உடனடியாக மருத்துவரிடம் சென்றார். எல்லாப் பரிசோதனைகளும் செய்த பின்னர், அது புற்றுநோய் எனக் கண்டறியப் பட்டது. ஆனால், அது ஆரம்ப கட்டத்திலேயே இருந்ததைப் பார்த்து மருத்துவர் மிகவும் ஆச்சரியப் பட்டார். ஏனெனில், அவ்வளவு சீக்கிரமாக அந்த நோயை கண்டு பிடிப்பது மிகவும் கடினமாம். இரு வாரங்களுக்குள்ளேயே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அந்த மருத்துவர் அறுவை சிகிச்சையும் செய்தார். அதற்கு முன்பு, உத்தேசமாக இவ்வளவு செலவாகும் என ஒரு தொகையையும் சொல்லியிருந்தார். ஆனால், வீட்டுக்கு அனுப்பிம் போது, அதில் பாதியே அவர் வசூலித்தார். இதிலும் கூட பாபா எங்களுக்கு உதவி செய்தார். மருத்துவச் சிகிச்சையும் முடித்து, இப்போது என் அன்னை நலமாகத் தேறி வருகிறார். பாபாவின் அருளால், அவர் விரைவிலேயே குணமடைவார். இந்தச் சிகிச்சையின் போதெல்லாம் எங்களது ஒரே நம்பிக்கையான பாபா அவளுடன் இருந்து, சரியான தருணத்தில் அவளைக் குணப் படுத்தவும் செய்தார்.
மேலும் சில அனுபவங்களைப் பகிர விரும்புகிறேன். விரைவில் அனுப்பி வைக்கிறேன்.
ஜெய் ஸாயி ராம்.

 
ஸாயி எனக்கு தரிசனமும், கூடவே
ஒரு நிகழ்ச்சி பற்றிய சமிக்ஞையும் தந்தார்

மதிப்பிற்குரிய மனிஷா தீதிஜி,
இந்த மடல் உங்களைப் பூரண ஆரோக்கியத்துடன் காணுமென நம்புகிறேன். நான் உங்களுடன் வெகு நாட்களாகத் தொடர்பு கொள்ளவில்லையெனினும், ஸாயி அனுபவங்களைப் பற்றிய மடல்கள் வரும்போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன். தினசரி அதிகாலை 4.30 மணிக்கு நான் விழித்தெழும் போதோ அல்லது ஐந்து மணிக்கு நான் ஸாயி ஸத் சரிதம் படிக்கத் துவங்கும் போதோ, எனது அலைபேசிக்கு அவை வந்து சேரும். நான் எப்போதும் உங்கள் நலனைக் கோருவேன். ஸாயிபாபாவின் வழிகள் எப்போதுமே விசித்திரமானவை. ஸாயிபாபாஜியின் நேரடித் தரிசனம் எனக்கு கடந்த டிசம்பர் மாதம் 31-ந் தேதியன்று இரவு 8.30 மணியளவில் எனது அறையிலேயே கிடைத்தது. உங்களது நேரத்தை நான் அதிகம் எடுத்துக் கொள்ளவில்லை என நீங்கள் நினைத்தால், தயவு செய்து இந்த லீலையைப் பற்றி நான் கீழே எழுதியிருப்பதைப் படியுங்கள். இது உங்களது வலைதளத்திலும் இடம் பெற்றால் நான் மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்.

அன்பார்ந்த ஸாயி நேயர்களே,
ஸாயி ராம். ஸாயி பாபவுக்கு வெற்றி உண்டாகட்டும்.
என் பெயர் கமல் பிரசாத் மஸ்கே. நான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபின், ஒரு தனியார் அலுவலகத்தில் பணி புரிகிறேன். "ஸாயி பாபாவின் அன்பு எல்லையற்றது" என்னும் தலைப்பில் நான் முன்னர் எனது அனுபவத்தை இங்கே பதிந்திருக்கிறேன். பாபாஜியின் தரிசனம் மீண்டும் எனக்கு சென்ற டிசம்பர் மாதம் 31-ந் தேதியன்று இரவு 8.30 மணிக்குக் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் படுக்கையில் படுத்துக் கொண்டு, மறுநாள் ஞாயிற்றுக் கிழமையன்று பிறக்கப் போகும் புத்தாண்டைக் குறித்து சிந்தித்திருந்தேன். திடீரென பாபாஜி என் கண்ணெதிரே தோன்றினார். மசூதி அருகில் இருக்கும் சுவற்றில் தனது காலை மடித்தபடி, சிரித்த முகத்துடன், வெண்ணிற ஆடையில் அவர் இருந்தார். மராத்தி மொழியில் என்னிடம், 'பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் உன்னை நான் சந்திக்கிறேன்' எனச் சொன்னார். அப்படிச் சிரிக்கும்போது, அவர் கீழே நோக்கினார். நானும் அவரது பாதங்களை நோக்கி என் பார்வையைச் செலுத்தினேன். அங்கே ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னிடம் சுருட்டிய ஒரு பத்திரிகையையும், ஒரு பொட்டலத்தையும் கொடுக்க முனைந்தார். அவற்றை நான் பெற்றுக் கொண்டதும் தரிசனம் முடிவடைந்தது.
அதன் பிறகு நான் தூங்கி விட்டேன். மறுநாள் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நான் சற்றுத் தாமதமாகவே எழுந்தேன். காலைக் கடன்களை முடித்த பிறகு பூஜை செய்யத் தொடங்கினேன். பாபா தரிசனத்தைச் சுத்தமாக மறந்து போனேன். ஜனவரி மாதம் 2-ம் தேதியன்று காலை 9 மணிக்கு எனது அலுவலகம் சென்றேன். 9.30 மணியளவில் எனது நண்பரும், சக பணியாளருமான திரு. சுனில் கதரே என்பவர் ஷீர்டி ஸாயி ஸன்ஸ்தானத்தாரால் பிரசுரிக்கப்பட்ட பாபாஜியின் நாள்காட்டியுடன் என்னைச் சந்தித்தார். கூடவே, புனே, பிம்ப்ரி, மஹேஷ் நகரில் வசிக்கும் திரு. இனாம்தார் என்னும் ஸாயி அடியவரிடமிருந்து வந்த ஒரு அழைப்பிதழையும் என்னிடம் தந்தார்.
அவ்விரண்டையும் நான் பெற்றுக் கொண்டபின், அவர் எனது இடத்தை விட்டு அகன்றார். அவர் சென்று அரை மணி நேரத்துக்குப் பின், திடீரென இரு நாட்களுக்கு முன்னர் நான் கண்ட காட்சி நினைவுக்கு வர, நாட்காட்டியையும், அழைப்பிதழையும் திறந்து பார்த்தேன். ஆண்டுதோறும் திரு இனாம்தார் அவர்களால் நிகழ்த்தப்படும் ஸாயி ஸேவா ப்ரதிஷ்டான் என்னும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் அது. நாடு முழுவதுமிருந்தும் பல ஸாயி பக்தர்கள் இதற்கு வருவர். ஸாயி ஸன்ஸ்தானத்தின் முன்னாள் தலைவராகவும் இவர் இருந்திருக்கிறார்.
டிசம்பர், 31 அன்று நான் கண்ட காட்சியை நினைவு கூர்ந்த நான், உடனே எனது நண்பரை அலைபேசியில் அழைத்து, இந்த இனாம்தார் என்பவர் எப்படி இருப்பார் எனக் கேட்டேன். எனது காட்சியில் பாபாவின் காலடியில் அமர்ந்திருந்தவரும் இவரும் ஒருவர்தானா என உறுதிப் படுத்திக் கொள்ளவே கேட்டேன். இவர் சற்று வயதானவர் என நண்பர் கூறினார். தலையில் குல்லாய் அணிந்திருப்பாரா எனக் கேட்டேன். காட்சியில் கண்டவரும் [பழங்காலத் திரைப்படங்களில், நீதிபதிகள் தங்கள் தலைகளில் அணிந்திருப்பது போல] குல்லாய் அணிந்திருந்தார். அப்படி ஒன்றும் அவர் அணிவதில்லை என நண்பர் சொன்னார். 2012,ஜனவரி மாதம் 22-ம் தேதியன்று, இந்த விழா நடக்கவிருப்பதாக அழைப்பிதழ் காட்டியது.
அன்றைய தினம் நான் அந்த விழாவுக்குச் சென்று, மஹா பிரசாதம் பெற்றுக் கொண்டேன். நானும் ஒரு ஸாயி பக்தன் என்பதை அறிந்த எனது நண்பர் கூறியதன் பேரில் இந்த தீவிரமான ஸாயி அடியவரான திரு. இனாம்தார் என்னையும் இந்த விழாவுக்கு அழைத்தாரே என நான் மனதுக்குள் அழுதேன். நான் இதுவரையில் சந்தித்திராத திரு. இனாம்தார் எனக்கு அழைப்பு அனுப்பியதும், அது பற்றிய குறிப்பினை அதற்கும் முன்னரே எனக்குத் தந்ததும்தான் இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. அது மட்டுமல்ல.... இந்த இனாம்தாரைத்தான் நான் அந்தத் தரிசனக் காட்சியின் போதும் பாபாவுடன் இருக்கக் கண்டேன்.
பாபாவின் லீலைகள் விசித்திரமானவை. இதைப் பற்றி அந்த விழாவிலேயே கூற வேண்டுமென நினைத்தேன். ஆனல், நிகழ்ச்சியில் ஆழ்ந்து போனதால் சொல்லாமல் மறந்து விட்டேன்.
ஒருவேளை நான் மீண்டும் திரு. இனாம்தாரை ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்க நேர்ந்தால், இது பற்றி கூறுவேன். ஆனால், நமது ஸாயி அன்பர்களுடன் இந்த லீலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்பினேன்.
எனதன்பு ஸாயி அடியவர்களே, ஸாயி ஸமாதி அடைந்து விட்டார் என்றாலும், இப்போதும் இருந்துகொண்டு நம் அனைவரையும் வழி நடத்துகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, ஸாயி காட்டிய வழியிலேயே செல்லுங்கள்; தவறான வழியில் செல்ல முயலாதீர்கள். ஸாயி மாதா உங்களை உண்மையின் வழிக்குக் கொண்டுவர எப்போதும் இருக்கிறார்.
அனந்த கோடி பிரம்மாண்ட நாயக மஹாராஜாதிராஜ, ஸ்ரீ ஸச்சிதானந்த ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய்!ஷீர்டி யாத்திரையின் போது
ஸாயி பாபாவுடனான அனுபவங்கள்

அன்புள்ள மனிஷா'ஜி,
நீங்கள் நலமென நினைக்கிறேன். எனது இந்த ஸாயி லீலை அனுபவத்தை தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில், உங்களது வலைதளத்தில் பிரசுரிக்குமாறு வேண்டுகிறேன்.
எனது மின்னஞ்சலை வெளியிட வேண்டாம். உங்களது இந்த உதவிக்கு எனது வந்தனங்கள். பாபா உங்களையும், உங்களது குடும்பத்தினரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் ஸாயி ராம்.
அன்பான நண்பர்களே, 'பாபா பகவான் விஷ்ணு ரூபத்தில் என் முன் தோன்றினார்' என்னும் தலைப்பில் ஏற்கெனவே நான், பாபா என்னை ஷீர்டிக்கு அழைத்த அனுபவத்தை இங்கே பதிந்திருக்கிறேன். இருப்பினும், வாசகர்களின் வசதிக்காக, இதைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்துடன் நான் இந்த மடலைத் துவக்குகிறேன். எனது வர்ணனையில் ஏதேனும் தவறுகள் இருப்பின், அவற்றை மன்னிக்கக் கோருகிறேன்.
'எனது பெற்றோர்களுக்கு பாபா விடுத்த அழைப்பு':
சென்ற ஆண்டு, மே - ஜூன் மாதத்தில் அதிர்ஷ்டவசமாக ஷீர்டி வருமாறு பாபா விடுத்த அழைப்பு எனக்குக் கிடைத்தது. எனது பெற்றோர்களையும் உடனழைத்துச் செல்ல விரும்பினேன். ஷீர்டி மந்திருக்கும், த்வாரகாமாயிக்கும் அவர்கள் சென்று வந்தால், அவர்களது கவலைகள் எல்லாம் மறைந்து, அவர்களுக்குத் தேவையான அமைதியைப் பெறுவர் என நான் கருதினேன். எனக்கும், என் தந்தைக்குமாக புகைவண்டியில் முன் பதிவுகள் செய்தேன். நோய்வாய்ப் பட்டிருந்த எனது பாட்டியைக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால், எனது தாயாருக்கு நான் பயணச் சீட்டு வாங்கவில்லை. ஆனால், எனது தாயையும் அழைக்குமறு நான் பாபாவை வேண்டினேன். நான் இல்லம் திரும்பியபோது, எனது அண்னியார் எங்களது வீட்டுக்கு வந்து, எனது தாயையும் உடனழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஆச்சரியமடைந்த நான் மிகவும் மன மகிழ்ந்தேன்.
முன்பதிவு செய்திருந்த பயணச் சீட்டுகளைத் திரும்பக் கொடுத்துவிட்டு, வேறொரு நாளில் எங்கள் மூவருக்கும் பயணச் சீட்டு தேடினேன். கோடை விடுமுறைக் காலம் என்பதால், எல்லா விசேஷ புகை வண்டிகளும் நிரம்பியிருந்தன. வேறு வழியில்லாமல், 'காத்திருப்போர் பட்டியலில்' டிக்கெட்டுகளைப் பதிவு செய்தேன். ஷீர்டி வருமாறு பாபாவே அழைத்திருந்ததால் நிச்சயம் அவர் இதைக் கவனித்துக் கொள்வார் என நம்பினேன். 'அவர் மீது நம்பிக்கை வைத்து, வீட்டை விட்டுக் கிளம்புவோம். அவர் பார்த்துக் கொள்வார்' என என் தாயிடம் சொன்னேன். அப்படியே நிகழ்ந்தது. மாலை கிளம்ப வேண்டிய வண்டிக்கான எங்களது டிக்கெட்டுகள் மதியமே உறுதி செய்யப்பட்டது. எங்களது பயணத்தின் போதும் அவர் எங்களை எல்லாம் மிக நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

கோபெர்காங்வில் பாபாவின் தரிசனம்

ஷீர்டி செல்லும் முன்னர், நாங்கள் பயணித்த புனிதத் தலங்கள பற்றிய செய்தியை இங்கே நான் சொல்ல வேண்டும். நான் சொல்லப்போகும் லீலைக்கு அது மிகவும் முக்கியம். சென்னை அடைந்ததும், பாபாவின் அருளால், காஞ்சீபுரம், திருப்பதி, காளஹஸ்தி, ஸிம்மாசலம் [விசாகப்பட்டினம்] பூரி, ஆகிய தலங்களுக்கு நாங்கள் சென்றோம். அதன் பிறகு, ஷீர்டி நோக்கி எங்களது பயணம் துவங்கியது. இந்தப் பயணத்தின் போதெல்லாம் பாபாவின் தரிசனத்தை நான் ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தேன்.
வயதானவர், பெண்மணி, ஸாது, குழந்தை என எந்த வடிவினில் வேண்டுமானாலும் அவர் வரலாம் என மனதுக்குள் தோன்றியது. பிற அடியவர்களின் அனுபவங்களைப் படித்ததிலிருந்து, ஏதேனும் ஒரு சமிக்ஞையை பாபா தருவார் எனவும் புரிந்தது. சுமார் 10 - 15 நாட்கள் இதை எதிர்பார்த்து நான் காத்திருந்தேன். யார் என்னிடம் பொருளுதவி கேட்டு வந்தாலும், அவர்களுக்கு சிறிது பணம் கொடுத்து, மிகவும் முன் ஜாக்கிரதையாக இருந்தேன். ஆனால், எனக்கு அவரது தரிசனம் கிட்டவில்லை. ஷீர்டிக்கு புகைவண்டியில், எனது பெற்றோர்களுடன் எனது பயணத்தைத் தொடங்கினேன். 'எனக்கு ஒரு திருப்தியான தரிசனம் தாருங்கள் பாபா. என்னை எந்த விதத்திலும் ஏமாற்றி விடாதீர்கள்' என வேண்டிக்கொண்டே இருந்தேன்.
அநேகமாக ஒவ்வொரு நிலையத்திலும் எங்களது வண்டி நின்றது. ஆனால், கோபெர்காவ் நிலையத்தில் ஒரு நடுவயது மனிதர் எங்களது வண்டியில் ஏறினார். காவி நிற உடையை [கஃப்னி] அவர் அணிந்திருந்தார். கொஞ்சம் நரைத்திருந்த தாடியும் இருந்தது. உடனே, 'இவர்தான் 'அவர்' என என் உள்ளுணர்வு சொல்லியது. ஏதேனும் ஒரு அடையாளம் தேடி அவரை நோட்டமிட்டேன். நினைத்தது போலவே, அவரது சட்டையில், பாபவின் படம் பொருத்திய ஒரு 'பொத்தான்'[] இருந்தது. எனது சட்டைப் பையிலிருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து, அவரிடம் கொடுத்தேன். அவரது கண்களையும் அப்போது நான் கவனித்தேன். தனது இரு கைகளையும் உயர்த்தி என்னை அவர் ஆசீர்வதித்தார். 'இவர் பாபாவேதான்' என எனக்குத் தெளிவாயிற்று. நான் மிகவும் சந்தோஷமடைந்தேன்.
அவருக்கு மேலும் கொஞ்சம் பணம் கொடுக்க எண்ணினேன். ஆனால், எனது பெற்றோர் என்னருகில் இருந்ததால், அதற்கு மேல் கொடுக்க எனக்கு தைரியம் வரவில்லை. பிறகு அந்தப் பெரியவர் வேறொரு பெட்டிக்குச் சென்றுவிட்டார். அவரைப் பின்தொடர்ந்து சென்று, நான் அவருக்கு இன்னும் கொஞ்சம் பணம் அளித்தேன். அவர் என்னைத் தட்டிக் கொடுத்து ஆசீர்வதித்தார். எனது மனம் லேசாகி,, தனது தரிசனத்தை எனக்குத் தந்தமைக்காக பாபாவுக்கு எனது வந்தனங்களைச் சொல்லிக்கொண்டு எனது இருக்கைக்குத் திரும்பினேன்.

ஒரு நாய் ரூபத்தில் பாபாவின் தரிசனம்

ஷீர்டி வந்தடைந்தும், எனது பெற்றோருடன் ஸமாதி மந்திருக்கு, மாலையில் சென்றேன். இந்தியாவுக்குப் புறப்படுகையில், எனது நண்பர் ஒருவர் என்னிடம் கொஞ்சம் பணம் கொடுத்து, பேடா வாங்கி பாபாவுக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். எனவே, நான் மூன்று பேடா பொட்டலங்கள் [எங்களுக்கென இரண்டு, அவருக்கென ஒன்று] வாங்கினேன். அவற்றை ஸமாதி மந்திரில் நான் சமர்ப்பிக்கும்போது, இரண்டு கீழே விழுந்தன; ஒன்று என்னிடம் திருப்பி அளிக்கப்பட்டது. நாங்கள் அளித்ததை பாபா ஏற்றுக் கொண்டார் என மகிழ்ந்தேன். மந்திரிலிருந்து வெளியே வந்ததும், எனது தந்தைக்கு உள்ளேயிருந்த ஒரு காவலர் ஒரு முழுத் தேங்காயைக் கொடுத்து, பூஜையறையில் வைத்துக் கொள்ளுமாறு சொன்னதாக அறிந்தேன். பாபாவின் இந்த ஆசிகளுக்கு நான் இன்னமும் மகிழ்ந்தேன். மந்திரை விட்டு வெளியே வந்து அதனருகிலேயே ஒரு ஓரத்தில் உட்கார்ந்தோம்.
பேடாப் பொட்டலத்தை நான் திறக்கும்போது, ஒரு நாய் என்னருகில் வந்தது. 'அவரே'தான் இந்த வடிவில் வந்திருக்கிறார் என எனக்குத் தெளிவாயிற்று. ஒன்றன்பின் ஒன்றாக பேடாக்களை அந்த நாய்க்குக் கொடுத்தேன். ஒரு சில துண்டுகளைச் சாப்பிட்டதும், அது அங்கிருந்து அகன்றது. ஒரு அல்பமான சந்தேகம் என்னுள் இப்போது பிறந்தது. ‘எனது பிரசாதத்தையா அல்லது எனது நண்பர் கொடுத்ததையா பாபா ஏற்றுக் கொண்டார் ?’ என அறிய நினைத்தேன். சட்டென, இன்னொரு நாய் [இது வேறு ஒரு நாய்] எங்களருகில் வந்து, அதுவும் சில பேடா துண்டுகளைத் தின்றுவிட்டுச் சென்றது. தமது அடியவரின் மனதில் கிளம்பும் ஒவ்வொரு சின்னச் சின்ன எண்ணங்களையும் , ஆசைகளையும் பாபா நிறைவேற்றுகிறார் என்பது புரிந்தது. அப்படி ஏதேனும் ஆசைகள் பூர்த்தியாகவில்லை என்றால், அதற்கான நேரம் இன்னும் வாய்க்கவில்லை என்றே பொருள்.
மொத்தத்தில், எனது ஷீர்டி பயணம் பாபாவின் ஆசீர்வாதத்தால், மிகச் சிறப்பாக அமைந்தது. எனது பெற்றோருக்கும் அவர் விடுத்த அழைப்புக்கு எனது மனமார்ந்த வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியே, ஒவ்வொரு அடியவருக்கும் அவரது தரிசனம் கிட்டவேண்டும் என்னும் அவரவர்களின் ஆசைகளையும் பாபா நிறைவேற்ற வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன்.
பாபா, அடிக்கடி நான் ஷீர்டிக்கு வர அழைப்பு விடுங்கள்.
இந்த நீளமான மடலுக்காக மன்னிக்க வேண்டுகிறேன். அவரது தரிசனம் கிடைக்க வேண்டுமெனக் காத்திருக்கும் அடியவர்களுக்கு இது ஒரு நம்பிக்கையைக் கொடுக்குமென நினைக்கிறேன்.
ஓம் ஸாயிநாத் மஹராஜ் கீ ஜெய்.
ஓம் ஸாயி ராம்.
சிவா.
(Translated Into Tamil By Sankarkumar )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.