Monday, April 2, 2012

Rama Vijaya - Chapter-11

ராம விஜயம் -- 11


 ஒருநாள் பரசுராமர் ஜனகரின் அரண்மனைக்கு வந்தார். இவர் பூமியிலிருந்த க்ஷத்ரியர்களையெல்லாம் கொல்லச் சபதம் செய்து, அப்படியே பலரையும் அழித்தவர். வந்தவரை வரவேற்று விருந்து கொடுத்தார் ஜனகர். சாப்பிட்டு முடித்து வெளியே வந்த பரசுராமர் தான் அங்கே வெளியில் வைத்துவிட்டுப் போன தனது வில்லைக் காணாமல் திடுக்குற்றார். கோபம் கொப்பளிக்க, 'ஆயிரக்கணக்கான‌ யானைகள் சேர்ந்தும்கூடத் தூக்க இயலாத அத்தனை வலிமையான என்னுடைய தனுஸை யார் எடுத்துக்கொண்டு சென்றது?' என‌க் கர்ஜித்தபடியே ஜனகருடன் சேர்ந்து வெளியே வந்து தேடினார். ஆனால், அவர்கள் இருவரும் ஆச்சரியப்படும் வகையில் ஜனகரின் மகள் அந்த வில்லை வைத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டனர்.  தந்தையைக் கண்டதும் வில்லைக் கீழே போட்டுவிட்டு, உடனே அங்கிருந்து ஓடி விட்டாள்.
இதைக் கண்ட பரசுராமர் ஜனகரைப் பார்த்து,'என்னுடைய அவதாரப் பணி இத்துடன் முடிந்தது. இனி இந்த வில் இங்கேயே இருக்கட்டும். உடனடியாக உமது மகளுக்கு ஒரு சுயம்வரம் ஏற்பாடு செய்து, இந்த வில்லை எவர் தூக்கி அதை நாணேற்றுகிறாரோ அவருக்கே மணம் செய்து வை' எனக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார். விரைவிலேயே ஜனகரும் ஸீதைக்குச் சுயம்வரம் என அறிவித்து எல்லா தேச மன்னர்களுக்கும், ரிஷிகளுக்கும் அழைப்பு விடுத்தார். அங்குதான் நாமும் போகிறோம்' என விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார்.
அனைவரும் கூடிய அந்த சுயம்வரத்துக்கு அழைப்பு இல்லாமலேயே ராவணனும் வந்தான். வில்லைத் தூக்கி நாணேற்றுபவ‌ருக்கே தன் மகள் என்னும் நிபந்தனையை ஜனகர் அறிவித்ததும், அனைவரும் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு வந்து வில்லைத் தூக்கக்கூட முடியாமல் தோற்றுப் போயினர்.
இறுதியாக ராவணன் முன்வந்து, 'இந்த வில்லைத் தூக்குவது என்பது எனக்கு மிகவும் அற்பமானது. இதை ஒரு நொடியில் நான் உடைத்தெறிவேன். பலவீனமான ரிஷிக்களும், மன்னர்களுமாகிய உங்களால் இதைத் தூக்கக்கூட முடியாது என என‌க்கு நன்றாகத் தெரியும். என் ஒருவனால் மட்டுமே இதைத் தூக்கவும், உடைக்கவும் முடியும். ஸீதை எனக்கே மணமகள் ஆவாள். நானே அவளை மணப்பேன்' என ஆணவத்துடன் பெருமை பேசிக்கொண்டே தனது பலமனைத்தையும் திரட்டி, அந்த தனுஸைத் தூக்க முற்பட்டான்.
சற்று அசைந்து கொடுத்த அந்த தனுஸு அவன் மார்பின் மீதே விழுந்து அவனை அழுத்தி மூச்சு முட்டச் செய்தது. பரிதாபமாக ஓலமிட்டபடியே அங்கிருந்தவர்களைத் தனக்கு உதவி செய்யுமாறு அலறினான். சபையிலிருந்த ராமன் உடனே சென்று அந்த வில்லை அநாயஸமாகத் தூக்கினான். விஸ்வாமித்ரர் கண்ஜாடை காட்ட, அந்த வில்லை இரண்டாக முறிக்கவும் செய்தான். ஒரு யானையின் மீது அமர்ந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஸீதை தன் கையிலிருந்த மாலையை ராமனின் கழுத்தில் சூடினாள். ராவணன் குழப்பத்துடனும், அவமானத்துடனும் அரச சபையை விட்டு வெளியேறி இலங்கை நோக்கிச் சென்றான்.
ஜனகர் உடனடியாக இந்த நல்ல செய்தியை தஸரதனுக்குத் தெரிவித்து, மிதிலைக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்தான். மிகுந்த மகிழ்ச்சியடைந்த தஸரதன் தன் மனைவிமார்கள், புதல்வர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மிதிலைக்குச் சென்றான். திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. ராமனை ஸீதைக்கும், ஊர்மிளா, மாலதி, ஷ்ருதகீர்த்தி என்னும் தனது மற்ற மூன்று புதல்வியரை, முறையே லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னனுக்கும் மணமுடித்து வைத்தான்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.