Rama Vijaya- Chapter-13
ராம விஜயம் -- 13
அப்போது விரஞ்சி [பிரம்மாவின் இன்னொரு பெயர்] விகல்பா என்னும் தேவனை அயோத்திக்கு அனுப்பி, கைகேயியையும், அயோத்தி மக்களையும் ராமனுக்கு எதிராகத் திருப்பி விடுமாறு செய்யப் பணித்தார். அதன் மூலம், ராமன் கானகம் சென்று, அசுரர்களை அழிப்பான் என்பது அவரது எண்ணம். விகல்பா எவ்வளவோ முயற்சித்தும் அவனால் இதைச் செய்ய இயலவில்லை. ராமன் மீது அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்ட அயோத்தி மக்களிடம் விகல்பனின் ஜாலம் எடுபடவில்லை. ஆனால், கைகேயிக்கு மிகவும் நம்பிக்கையான மந்தரை என்னும் பணிப்பெண்ணை மட்டும் அவனால் ராமன்பால் வெறுப்பு உண்டாகுமாறு செய்ய முடிந்தது.
ஏற்கெனவே ராமன் மீது வெறுப்புற்றிருந்த மந்தரை, இப்போது மேலும் அதிக வெறுப்புடன் ராமனை அரியணை ஏறவிடாமல் செய்ய வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு கைகேயியின் இருப்பிடத்துக்குச் சென்றாள். அங்கு போனதுமே, தனது மார்பில் அறைந்துகொண்டு, கண்களில் நீரை வரவழைத்துக்கொண்டு, தரையில் புரண்டு 'ஓ'வென ஓலமிட்டு அழத் தொடங்கினாள்.
அதைக் கண்டு பதறிய கைகேயி, 'என்ன காரணமாய் நீ இவ்வாறு அழுகிறாய்?' எனக் கேட்டாள். 'அடி துரதிர்ஷ்டம் பிடித்த பெண்ணே! உனது கணவன் ராமனை அரியணையில் அமர்த்தப் போகிறான். அப்படி அமர்ந்த மறு கணமே ராமன் உனது இரு பிள்ளைகளையும் கொன்றுவிடப் போகிறான். இதைத் தடுக்க வேண்டுமென்றால், உடனே உனது பிள்ளை பரதனுக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் நான் மகிழ்வேன்' என மந்தரை அழுது புலம்பியபடியே நீலிக் கண்ணீர் வடித்தாள்.
அதைக் கேட்ட கைகேயி, சிரித்தபடியே, 'நான் நேசிக்கும் ராமனுக்கு மகுடம் சூட்டுவதில் எனக்கு எவ்வித ஆக்ஷேபணையும் இல்லை. அவனும் பரதனைப் போலவே என் மகன்தானே' என்றவுடன், மந்தரை மேலும் ஆத்திரமடைந்து, இன்னமும் பலமாகச் சத்தமிட்டு அழத் தொடங்கினாள். அவளைச் சாந்தப்படுத்த கைகேயி அவளருகே சென்றால். அங்கு மறைந்திருந்த விகல்பனும் தனது பங்குக்கு ராமனைப் பற்றி அவதூறு பேசி கைகேயியின் மனத்தைக் கெடுத்தான்.
அதனால் கைகேயி முகத்தில் தெரிந்த குழப்பத்தைக் கண்டதும், மனமகிழ்ந்த மந்தரை அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டாள். 'ராமனை அகற்ற இப்போது நான் என்ன செய்ய வேண்டுமெனச் சொல்லடி, என் பிரியமான மந்தரையே' எனக் கைகேயி விசனத்துடன் கேட்டாள்.
ஏதோ யோசிப்பவளைப் போல முகத்தை வைத்துக்கொண்டு, 'எது எப்படியானாலும் சரி; ராமனை வெளியே துரத்திவிட்டு, பரதனை நாம் அரியணையில் அமர்த்த வேண்டும். அதற்காக, உன்னைப் பார்ப்பதற்கு மன்னர் வரும்போது, அசுரர்களுடனான யுத்தத்தின்போது அவர் உனக்களித்த வரங்களை இப்போது தர வேண்டுமெனக் கேள். நீ அப்போது செய்த பேருதவிக்காக, 'நீ என்ன கேட்டாலும் தருகிறேன்' என அவர் வாக்களித்தது உனக்கு நினைவிருக்கிறதுதானே? அதன்படி, அசுரர்கள் வாழும் காட்டுக்கு ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டுமென்றும், பரதன் நாடாள வேண்டுமென்றும் இப்போது வரம் கேள். ராமன் அப்படிக் காட்டுக்குச் சென்றால், அந்தச் சோகத்திலேயே மன்னரும் மாண்டு விடுவார். அதனால், அது உனக்கும், உன் பிள்ளைகளுக்கும் நன்மையாகவே அமையும் என்பதையும் மனதில் எண்ணிக்கொள்' என மந்தரை துர்ப்போதனை செய்தாள்.
Loading
0 comments:
Post a Comment