Rama Vijaya - Chapter- 29
ராம விஜயம் -- 29
பானைகளில் அவர்கள் தண்ணீர் கொண்டுவரும்போது, தனது வாலால் அவற்றை உடைத்தான். வீதிகளில் சென்ற இளவரசர்களின் தேர்களை உடைத்து நொறுக்கினான். ஒரு நாள், நாவிதன் ஒருவன் ராவணனுக்கு முகக்ஷவரம் செய்யும்போது, தனது வாலை அந்த நாவிதனின் மூக்கில் மாருதி நுழைத்தான். தடுமாறிப் போன நாவிதன், தவறுதலாக ராவணனின் மீசையை வெட்டி விட்டான். ஆத்திரமடைந்த ராவணன் நாவிதனின் முகத்தில் ஓங்கி அறைந்தான். அந்த சமயத்தில் மாருதியும் ராவணனுக்கு ஒரு அறை கொடுத்தான். ராக்ஷஸர்கள் குடியிருந்த வீடுகளை, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, தனது வாலால் நாசமாக்கினான். ஒரு சமயம், இலங்கை முழுவதும் இருந்த விளக்குகளை எல்லாம் அணைத்து, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தினான். 'ராவணனால் கொண்டுவரப்பட்ட ஸீதைதான் இப்படி ஒரு கொடிய மிருகத்தை அனுப்பி நம்மையெல்லாம் இப்படி வருத்துகிறாள்' என இலங்கைவாழ் அசுரர்களெல்லாம் பேசிக் கொண்டனர்.
இறுதியாக, ராவணன் அரண்மனைக்கு மாருதி வந்து சேர்ந்தான். ராவணனும், அவனது மனைவி மண்டோதரியும் அங்கே உறங்கிக் கொண்டிருந்தனர். மண்டோதரியைக் கண்ட அனுமான் அவளைச் ஸீதையென நினைத்து, ராவணன் மேல் மையல் கொண்டு விட்டாளோ என ஐயம் கொண்டான். அவர்கள் இருவரையுமே தூக்கிக்கொண்டு ராம, லக்ஷ்மணர்கள் இருக்குமிடத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டுமெனக் கோபத்தால் துடித்தான்.
அப்போது, மண்டோதரி சட்டெனக் கண்விழித்து, தன் கணவனை எழுப்பி, 'நீயும், நம் மகனும் கொல்லப்படுவது போலவும், அசோக வனம் அழிந்து போவது போலவும், இலங்கை தீக்கிரையாவது போலவும் ஒரு கெட்ட கனவு கண்டேன். எனவே, இப்போதே ஸீதையை அவளது கணவனிடம் ஒப்படைத்து விடு' எனச் சொன்னாள்.
'அதைப் பற்றி நீ கொஞ்சம் கூடக் கவலைப்படத் தேவையில்லை. ஐந்து கோடி அரக்கர், அரக்கியரைக் காவலுக்கென அசோக வனத்தில் வைத்திருக்கிறேன். அவர்களைத் தாண்டி எவரும் வந்து அந்த வனத்தை அழிக்க முடியாது' என ராவணன் அவளுக்குத் தைரியம் சொல்லிவிட்டு, உடனே ஒரு காவலனை அனுப்பி, ஸீதை பத்திரமாக இருக்கிறாளா எனப் பார்த்துவர அனுப்பினான். அனுமனும் தன்னை மறைத்துக்கொண்டு அந்தக் காவலனைப் பின்தொடர்ந்து சென்றான். ஸீதை அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டான். ஸீதை நலமாக இருக்கும் செய்தியைத் தெரிவிக்கக் காவலன் திரும்பினான். மாருதி அசோக வனத்திலேயே தங்கினான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)
To Read the earlier Chapters Click on the nos given below
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42
Loading
0 comments:
Post a Comment