Wednesday, April 11, 2012

Rama Vijaya Chapter-15


ராம விஜயம் -- 15
 

கைகேயியை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, தன் தாய் கௌஸல்யாவிடம் சென்று, நடந்ததைக் கூறினான் ராமன். கௌஸலை கலங்கிப் போனாள். 'நீ என்னை விட்டுப் பிரியக்கூடாது ராமா; நான் உன்னை இங்கேயே, எனது அரண்மனையிலேயே பத்திரமாக ஒளித்துவைத்து விடுகிறேன். இதை நான் மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்கிறேன். நீ இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது, ராமா' என வருந்தினாள். 'அம்மா, நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. நான் இப்போது என் தாய் கைகேயிக்குக் கொடுத்த வரத்தினால் கட்டுப்பட்டு நிற்கிறேன். நான் வனவாஸம் சென்றுதான் தீர வேண்டும்' எனச் சொல்லி, அவள் பாதங்களில் வீழ்ந்து பணிந்து அவளை சம்மதிக்க வைத்தான்.
பிறகு, லக்ஷ்மணனிடம் சென்று, நடந்தவற்றைக் கூற, 'நானும் உன்னோடு வருவேன். நீ இல்லாமல் நான் உயிர் வாழ மாட்டேன், ராமா. என்னை விட்டுவிட்டு நீ மட்டும் கானகம் சென்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்' எனக் கதறினான் லக்ஷ்மணன். தன்னுடன் லக்ஷ்மணனும் வரச் சம்மதம் தந்த ராமன், அடுத்ததாக, ஸீதையைக் காணச் சென்றான். அவளிடம், 'நானும், லக்ஷ்மணனும் பதினான்கு ஆண்டுகள் வனவாஸம் போகிறோம். நான் திரும்பி வரும்வரைக்கும், அன்னை கௌஸல்யாவை நீதான் நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். நீ மிகவும் மென்மையானவள் என்பதால், வனவாஸத் துன்பங்களை உன்னால் தாங்க முடியாது. எனவே, நான் உன்னை உடன் அழைத்துச் செல்ல இயலாது' என்றான்.
அதைக் கேட்ட ஸீதை, 'நான் உங்களையே பின்தொடர்வேன். உங்களுக்கு வரும் துன்பங்கள் அனைத்திலும் பங்கு கொள்வேன் என நான் வாக்களித்திருக்கிறேன். எனவே என்னை விட்டுவிட்டு நீங்கள் மட்டும் செல்லக்கூடாது என மண்டியிட்டு வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டாள். இதைக் கேட்ட ராமன், வஸிஷ்டரிடம் இதுபற்றி ஆலோசித்து, அவரது அறிவுரைப்படியே, ஸீதையை உடன் கூட்டிச் செல்ல முடிவெடுத்தான்.
புறப்படும்முன், தனது தந்தையிடம் விடைபெற்றுக் கொள்வதற்காக ராமன் சென்றான். கண்களில் நீர் மல்க தஸரதன் அவனைப் பார்த்து, 'நான் உனக்காக மிகவும் வருந்துகிறேன், ராமா. இந்தக் கொடியவள்தான் இதையெல்லாம் செய்துவிட்டாள். நீ அயோத்திக்குத் திரும்பி வரும்வரையில் நான் உயிரோடிருப்பேன் என நான் நினைக்கவில்லை. இந்த சோகத்திலேயே நான் இறந்து விடுவேன். என் பொருட்டு நீ செய்த இந்தச் சபதத்தினால், இப்போது உன்னைக் காட்டுக்குப் போகாதே எனக்கூட என்னால் கேட்க முடியாது. எனவே, எனது சம்மதத்தையும், ஆசிகளையும் உங்களுக்கு அளிக்கிறேன். உனக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு உன் வனவாஸத்தை நீ மகிழ்சியுடன் கழிப்பாயாக' எனப் பலவாறும் புலம்பினான்.
'தந்தையே, எனக்கு எதுவும் தேவையில்லை. நான் மரவுரி மட்டுமே அணிந்து, எஞ்சிய நாட்களைத் தியானத்தில் கழிப்பேன்' என ராமன் பணிவுடன் கூறினான். இதைக் கேட்ட உடனேயே கைகேயி ஓடிச் சென்று மரவுரிகளைக் கொண்டுவந்து ராமன், லக்ஷ்மணன், ஸீதை முன் வைத்தாள். அவற்றைப் பணிவுடன் எடுத்து அணிந்துகொண்டு, ஸுமந்தரனுடன் மூவரும் கானகம் நோக்கிக் கிளம்பினர்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )
To Read the earlier Chapters Click on the nos given below
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1    2    3    4    5
     6   7     8   9  10   11   12
13   14   15   16   17   18   19   20   21   22
23   24    25   26   27   28   29   30  31   32

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.