Monday, April 23, 2012

Rama Vijaya - Chapter- 25

ராம விஜயம்  -- 25

 

ஒருநாள், பிரம்மதேவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தபோது, அவரது கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு, அவரது கையில் விழுந்தது. அதிலிருந்து ரக்ஷராஜன் என்னும் வானரக் குழந்தை உருவானது. காடுகளில் தாவித் திரிந்துகொண்டிருந்த சமயம், ரக்ஷராஜன் சிவனின் இருப்பிடமான கைலாஸத்துக்கு வந்தான். அங்கிருந்த தடாகத்தில் குளித்து எழுந்தபோது, அவன் ஒரு அழகிய பெண்ணாக மாறினான். அந்தத் தடாகத்தில் குளிக்கும் எந்த ஒரு ஆண் மகனும் இப்படிப் பெண்ணாக மாறிடுவர் என்பது பார்வதி விதித்த ஒரு கட்டளை.
இந்தப் பெண்ணின் அழகைக் கண்ட இந்திரனும், சூரியனும், அவளை மோஹித்தனர். இந்திரன் மூலமாக வாலியும், சூரியன் மூலமாக சுக்ரீவனும் இவளுக்குப் பிறந்தனர். தனது பிள்ளை ஒரு பெண்ணாக மாறியதை அறிந்த பிரம்ம தேவர், பார்வதியிடம் சென்று, தன் மகனைத் தனக்குத் திருப்பி அளிக்குமாறு வேண்டினார். பிரம்மனின் வேண்டுதலைக் கேட்டு இரங்கிய பார்வதி தேவி, அந்தப் பெண்ணை மீண்டும் ரக்ஷராஜனாக மாற்றி அருளினாள்.
பிரம்மதேவன் கிஷ்கிந்தை என்னும் வனத்தை உருவாக்கி அந்த நாட்டுக்கு ரக்ஷராஜனை அரசனாக்கினார்.சில காலம் அரசாட்சி செய்த பின்னர், தனது மூத்த மகனான வாலியை கிஷ்கிந்தைக்கு அரசனாக அரியணையில் அமர்த்திவிட்டு, ரக்ஷராஜன் வானுலகம் சென்றான். வாலியும், சுக்ரீவனும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி, நேசமுடன் வாழ்ந்து வந்தனர். வாலி மிகவும் பலவானாக யாராலும் வெல்ல முடியாதவனாக இருந்தான். இந்திரன் அவனது வீரத்தை மெச்சி, அவனுக்கு 'விஜய மாலை' ஒன்றைப் பரிசளித்தான். இந்த மாலையைக் கழுத்தில் அணிந்துகொண்டு போரிட்டால், அவனை எவராலும் வெல்ல முடியாது.
சில காலத்துக்குப் பின்னர், வாலியும், சுக்ரீவனும் ஜென்ம வைரிகளாக மாறி விட்டனர். சுக்ரீவனின் மனைவியான் ருமையை, வாலி தனது பலத்தால் கவர்ந்து சென்றான். தனது தமையனுக்கு அஞ்சி, சுக்ரீவன் அருகிலிருந்த ரிஷ்யமுகம் என்னும் மலைப் பகுதியில் ஒளிந்து வாழத் தொடங்கினான். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை சுக்ரீவன் வாலியுடன் சண்டையிடச் செல்வான். ஆனால், ஒவ்வொரு முறையும் தோற்றுத்தான் திரும்புவான்' என மாருதி சுக்ரீவனின் கதையைச் சொன்னான்.
சுக்ரீவனிடம் சென்று, வாலியைக் கொன்று, அவன் இழந்த ராஜ்ஜியத்தையும், அவனது மனைவியையும் தான் மீட்டுத் தருவதாகச் சொல்லுமாறு மாருதியிடம் ராமன் சொல்லியனுப்பினான். அப்படியே, உடனே சுக்ரீவனிடம் சென்று, 'நீ உன் மனைவியை இழந்த வருத்தத்தில் இருக்கிறாய்; ராமனும் அப்படியே தன் மனைவியான ஸீதையைப் பிரிந்த சோகத்தில்தான் இருக்கிறார். உனது மனைவியை உனக்கு மீட்டுத் தருவதாக ராமன் வாக்களித்திருக்கிறார். நீயும் அதே போல அவரது மனைவியைக் கண்டுபிடிக்க உதவ வேண்டும்' என மாருதி சொன்னான்.
அதைக் கேட்டு மகிழ்ந்த சுக்ரீவன், தனது வானரப் படைகளுடன் ராமனை நோக்கிச் சென்றான். அவனை அன்புடன் வரவேற்ற ராமன், தனது மனைவி ஸீதை பற்றிய முழு விவரங்களையும் கூறினான். 'சமீபத்தில் ஒரு பெண்ணின் ஓலக் குரல் கேட்டதாகச் சொன்ன சுக்ரீவன், தனது வானரங்கள் கண்டெடுத்த நகைகளை ராமனிடம் காட்டினான். தனது அன்பு மனைவியின் நகைகளே அவை என அறிந்த ராமன், அவற்றைப் பார்த்துக் கண்ணீர் விட்டான்.
அவனைத் தேற்றிய சுக்ரீவன், 'வருத்தப் படாதே, ராமா. எனது வலிமை மிக்க மந்திரிகளான் நளன், நீலன், ஜாம்பவான் இவர்களின் உதவியுடன், உனது மனைவியை நாங்கள் ராவணனிடமிருந்து மீட்டுத் தருகிறோம்' என ஆறுதல் சொன்னான். இந்த சொற்களைக் கேட்ட மறு கணமே, [வாலியைக் கொல்வதற்காக] ராமன் தனது வில்லையும், அம்பையும் கையிலெடுத்தான். அவனைத் தடுத்த சுக்ரீவன், 'அவசரம் வேண்டாம், ராமா. எனது ஜென்மவைரி வாலி மிகவும் பலவான்; தனது கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கும் வரையிலும் போரிடும் தீரன்' என அஞ்சினான். அப்போது ராமன், 'உங்கள் இருவருக்குமிடையே அப்படியென்ன நடந்தது? ஏனிந்த விரோதம்? அதைச் சொல்' என்றான். சுக்ரீவன் சொல்லலானான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)




To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.