Rama Vijaya - Chapter-8
ராம விஜயம்- 8
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, கௌஸல்யா, ஸுமித்ரை, கைகேயி மூவரும் ஆண் மகவுகளை ஈன்றெடுத்தனர். ராமன், கௌஸலைக்கும், லக்ஷ்மணன் ஸுமித்ரைக்கும், பரத, சத்ருக்னன் என இரு மகவுகள் கைகேயிக்கும் பிறந்தனர். நல்ல முறையில் வளர்ந்த அவர்களுக்கு உரிய காலத்தில் உபநயனமும் நிகழ்ந்தது. வஸிஷ்டர் அவர்களுக்கு வேதங்களையும், மந்திரங்களையும் போதித்தார்.
ஒருநாள், தனது யாத்திரையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரர் எனும் முனிவர் அயோத்திக்கு வந்தார். அன்புடன் அவரை வரவேற்ற தஸரதன் அவருக்கு உரிய மரியாதைகளைச் செய்தான். அவனுக்கு ஆசி கூறிய விஸ்வாமித்ரர் அவனைப் பார்த்து, 'தஸரதா! நான் இப்போது உன்னிடம் கேட்கப்போவதை நீ எனக்கு மறுக்காமல் தருவேன் எனச் சத்தியம் செய்து தரவேண்டும்' என்றார். அப்படியே தருவதாக தஸரதன் வாக்களித்தபின், 'மாரீசன், ஸுபாஹு என்னும் இரு அரக்கர்களின் தொல்லையால் நானும், சக ரிஷிகளும் காட்டில் மிகவும் துன்பப் படுகிறோம். நாங்கள் செய்யும் யாகங்களை அவர்கள் அழிக்கின்றனர். அதனால் எங்களால் முறையாக யாகம் செய்ய இயலவில்லை. ராமனைத் தவிர வேறு யாராலும் அவர்களை அழிக்க முடியாது. எனவே, நீ இப்போதே அந்த அசுரர்களைக் கொல்வதற்காக, ராமனை என்னுடன் அனுப்பிவைக்க வேண்டும்' எனக் கேட்டார்.
அதைக்கேட்டுத் திடுக்கிட்ட தஸரதன், 'முனிவரே! இந்தப் பச்சிளம் பாலகனை நான் எப்படி அனுப்ப முடியும்? மலை போன்ற உருவமுடைய அசுரர்களை இவனால் எப்படிக் கொல்ல முடியும்? ராமனைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள், தருகிறேன்' என மன்றாடினான்.
'விஸ்வாமித்ரர் மிகவும் வெகுண்டு, 'இதையெல்லாம் நீ எனக்கு வாக்குக் கொடுப்பதற்கு முன்னர் யோசித்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் நான் ராமனை அழைத்துக்கொண்டுதான் செல்வேன்' எனப் பிடிவாதமாகச் சொன்னார். அப்போது, வஸிஷ்டர் குறுக்கிட்டு, தஸரதனைப் பார்த்து, 'முன்கோபியான விஸ்வாமித்ரர் சொல்லுக்குக் கட்டுப்படுவதே தர்மம். இல்லாவிடில் அவர் உன்னைக் கொடுமையாகச் சபித்துவிடுவார். எனவே, ராமனை அவரோடு அனுப்பி வை' என அறிவுறுத்தினார். அதைக் கேட்ட தஸரதன், ராமனுக்குத் துணையாக லக்ஷ்மணனையும் அனுப்ப இசைந்து, இருவரையும் முனிவரிடம் ஒப்படைத்தான்.
ராம, லக்ஷ்மணர் இருவரையும் அழைத்துக்கொண்டு விஸ்வாமித்ர முனிவர் காடு நோக்கி நடந்தார். செல்லும் வழியில், மறைந்திருந்து தாக்குவதில் வல்லவளும், கொடுமையே உருவினளுமான தாடகை என்னும் அரக்கி எதிர்பட்டாள். பத்தாயிரம் யானைகளின் வலிமையும், மலை போன்ற பலம் பொருந்திய மார்பையும் உடைய அரக்கி இந்தத் தாடகை. அவளது தலைமயிரும், உடையும் ரத்தத்தில் தோய்ந்திருக்கும். இறந்த உடல்களை மாலையாக அணிந்திருப்பாள். நெற்றியில் பரந்த குங்குமம் துலங்கும். இவர்கள் மூவரையும் பார்த்ததுமே, தனது வாயை 'ஆ'வெனத் திறந்துகொண்டு, கூட சில அரக்கிகளையும் அழைத்துக்கொண்டு, இவர்களைக் கபளீகரம் செய்யவென ஓடி வந்தாள். கொஞ்சம் கூடத் தாமதிக்காமல், முனிவரின் கட்டளைப்படி ஒரு பாணத்தால் தாடகையைக் கொன்றழித்தான் ராமன். இதற்குப் பழி வாங்கவென இருபது கோடி அசுரர்களைக் கூட்டிக்கொண்டு போரிட வந்த பாணாஸுரன் என்னும் அரக்கனையும், அவனது படைகளையும் மிகுந்த சேதம் உண்டாக்கி விரட்டியடித்தார்கள் ராம,லக்ஷ்மணர்கள்.
ராக்ஷஸர்களின் தோல்விக்குப் பின்னர், பயணம் தொடர்ந்தது. வழியிலிருந்த ஒரு பெரிய கல்லின் மீது ராமனின் பாததூளி பட்டதும்,அது அதிரத் தொடங்கியது. ராமனின் பாதம் அதன் மீது பட்ட அந்தக் கணமே அது ஒரு அழகிய பெண்ணாக மாறி, ராமனைப் பணிந்து வணங்கியதும், தனது கணவனிடம் சென்றடைந்தாள். இந்தப் பெண் எப்படி ஒரு கல்லாக மாறினாள் என்னும் கதை பின்வருமாறு::-
[தொடரும்]
Loading
0 comments:
Post a Comment