Monday, April 2, 2012

Rama Vijaya - Chapter- 7


ராம விஜயம் - 7

கைகேயிடமிருந்து கழுகால் கவரப்பட்ட பிண்டம், காற்றின் வேகத்தால் கீழே விழுந்து கேஸரி என்னும் ஒரு வானரத்தின் மனைவியான அஞ்சனை என்பவள் கைகளில் விழுந்தது. அவளும் அந்தப் பாயஸத்தை உண்ண, அவளும் கருத் தரித்தாள்.
அஞ்சனைக்குப் பிறந்த மகனின் கதை பின்வருமாறு:
கேஸரியின் மனைவியான அஞ்சனை ரிஷிபர்வதம் என்னும் மலையில், தனக்கு ஒரு மங்காப் புகழ் வாய்ந்த ஒரு புத்திரன் பிறக்க வேண்டுமெனச் சிவனைக் குறித்து ஏழாண்டுகள் கடுந்தவம் இயற்றினாள்.அவளது தவத்தால் மகிழ்ந்த பரமசிவன், 'நீ விரும்பிய வண்ணமே உனக்கு ஒரு சிரஞ்சீவியான மகன் பிறப்பான். அவன் எனது அம்சமாகவும் விளங்குவான். உனது இந்த விருப்பம் நிறைவேறுவதற்காக, நீ இங்கேயே இன்னும் சில காலம் தவம் செய்து கொண்டிரு. உனது கைகளில் ஏதேனும் விழுந்தால், அதனை உடனே சாப்பிடு.' என அருளி மறைந்தார். கழுகு ஒன்று பறந்துவரும்போது, காற்றின் வேகத்தால் விழுந்த அந்தப் பிண்டம் அஞ்சனையின் கைகளில் விழ, பரமசிவன் சொல்லியவாறே, அவள் அதை உட்கொண்டாள்.
அப்படிப் பறந்துவந்த அந்தக் கழுகு ஒரு தேவமகள். இந்திரன் இட்ட சாபத்தால் அவள் ஒரு கழுகாகிப் போனாள். சரியாக ஆடவில்லை என்னும் காரணத்தால் கோபமுற்ற இந்திரன் அவளை இப்படிச் சபித்தான். கழுகு கவர்ந்துவரும் ஒரு பிண்டம் அஞ்சனை என்பவளின் கையில் விழும்போது அவளது சாபவிமோசனம் நிகழும் என பிரமன் அவளை ஆசீர்வதித்திருந்தார். அது போலவே, அந்தக் கழுகும் அப்ஸரஸாக மாறி, மீண்டும் தேவசபைக்குச் சென்றாள்.
ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, அஞ்சனை நீண்ட வாலுடன் கூடிய 'மாருதி' என்னும் வானரத்தைப் பெற்றெடுத்தாள். பிறந்த உடனேயே, வெளிச்சத்தைப் பார்த்ததும் மாருதிக்கு மிகுந்த பசி ஏற்பட்டது. அக்கம்பக்கம் பார்த்து, எதுவும் கிடைக்காமல், அந்தச் சூரியனைப் பார்த்து, அதை ஒரு பழம் என்று நினைத்து, அதைப் பிடிக்க அந்தக் குழந்தை பாய்ந்தது. அந்த நேரத்தில் ராஹுவும் சூரியனைப் பிடிக்க வந்து கொண்டிருந்தது. 'யார் நீ? நான்தான் இங்கே முதலில் வந்தேன். நீ யார் எனக்குப் போட்டியாக?' எனக் கேட்ட மாருதி, ராஹுவின் தலையைத் தன் வாலால் உடைத்து அதைச் சுழற்றியடித்தது. உதவிக்கு வந்த கேதுவுக்கும் அதே கதி நிகழ்ந்தது. இதற்குள்ளாக, மாருதியின் தந்தையான [காற்றின் வேகத்தால் அந்தப் பிண்டம் கிடைத்ததால்] வாயுதேவன் தனது வலிமையால், மாருதியை மீண்டும் பூமிக்குக் கொண்டுவந்தார்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.