Wednesday, April 18, 2012

Rama Vijaya - Chapter - 20

ராம விஜயம் -- 20



லக்ஷ்மணனின் காலடித் தடயங்களை அடையாளம் பார்த்துச் சென்று, இவன்தான் சபரியைக் கொன்றான் எனத் தெரிந்து கொண்டனர். தனது மகனைக் கொன்றவனைப் பழி வாங்க வேண்டுமென எண்ணி, தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, தன்னுடன் வந்த நான்கு அரக்கிகளையும் அழகிய பணிப்பெண்களாக்கி கொண்டு, லக்ஷ்மணன் இருக்குமிடம் சென்றாள்.
'இந்த உலகம் முழுவதும் நான் தேடியலைந்தும், எனக்குத் தகுந்த மணாளன் கிடைக்கவில்லை; உன்னைப் போல அழகான ஒருவனைக் காணவுமில்லை. நான் உன்மீது பைத்தியமாகி விட்டேன். நீ என்னை மணக்க சம்மதித்தாலன்றி, நான் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே, நீ என்னை உன் மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன், பார்த்தாயா? என்னை விடவும் அழகானவள் உனக்குக் கிடைப்பாளா?' என ஆசை வார்த்தைகள் பேசினாள்.
அவளது அழகில் துளியும் மயங்காத லக்ஷ்மணன் எவ்வளவோ மறுத்தும், தனக்கு ஒரு பதிலை அளிக்க வேண்டுமென அவள் திரும்பத் திரும்பக் கேட்டதால், அவளைப் பார்த்து, 'எனக்கு ஒரு அண்ணணும், அண்ணியும் என்னுடன் இருக்கிறார்கள். அவர்களது அனுமதி இல்லாமல் நான் எதுவும் செய்வதற்கில்லை' எனச் சொன்னான். 'அப்படியானால், நான் உன் அண்ணனிடமே சென்று, அவனிடமிருந்தே அனுமதிப் பத்திரத்தைப் பெற்று வருகிறேன்.' எனச் சொல்லிவிட்டு, தனது சேடிப் பெண்களுடன் பஞ்சவடியில் ராமன் இருக்குமிடத்துக்குப் போனாள்.
'நான் உனது தம்பியை மனமார நேசிக்கிறேன். அவனையே மணம் செய்து கொள்ளவும் தீர்மானித்து விட்டேன். நீ மட்டும் இந்த ஜோடிப் பொருத்தத்துக்குச் சம்மதித்து விட்டால், என்னை மனந்துகொள்ளத் தனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை என அவன் எனக்கு வாக்களித்திருக்கிறான். ஆகவே, நீ என் மீது இரக்கம் வைத்து, எங்களது திருமணத்துக்குச் சம்மதித்து ஒரு கடிதமோ அல்லது ஏதாவது ஒரு அடையாளத்தையாவது கொடுக்க வேண்டும் என உன்னை வேண்டிக் கொள்கிறேன்' என ஸூர்ப்பனகை ராமனிடம் கெஞ்சினாள். அவள் இப்படிக் கெஞ்சிக் கேட்டதில் மனமுருகிய ஸீதை, ஸூர்ப்பனகையின் வேண்டுகோளுக்கு இரங்குமாறு ராமனைக் கேட்டுக் கொண்டாள்.
ராமன் ஸூர்ப்பனகையைத் தலை முதல் கால் வரை ஒரு நோட்டம் விட்டான். அவளது கண் விழிகள் தலைகீழாக இருப்பதைப் பார்த்து, இவள் மனித உருவில் வந்த அர்க்கி ஸூர்ப்பனகை எனப் புரிந்து கொண்டான். அவளைப் பார்த்து, 'உனக்கு சம்மதம் அளிப்பதில் எனக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால், நான் அதனை உன் முதுகில்தான் எழுதுவேன்' என்றான் ராமன். 'அதெப்படி முடியும்? உனக்கு முதுகைக் காட்ட, ஒரு பெண்ணாகிய எனக்கு வெட்கமாயிராதா?' என்ற ஸூர்ப்பனகையைப் பார்த்து, 'அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை; ஏனெனில், இங்கே வேறு யாரும் இல்லையே' என ராமன் சொன்னான். வேறு வழியில்லாமல், ஸூர்ப்பனகையும் அதற்குச் சம்மதிக்க, ராமனும் அவள் முதுகில் ஏதோ எழுதி அவளை அனுப்பி வைத்தான்.
அவசர அவசரமாக அங்கிருந்து லக்ஷ்மணனிடம் சென்று, 'இதோ பார், உனது தமையன் நமது திருமணத்துக்கு மகிழ்வுடன் சம்மதித்து விட்டான். உனக்கு வேண்டுமானால் நீயே போய் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம். நானொன்றும் பொய்க்காரி அல்லள், தெரியுமா? அவன் கடிதமோ, அல்லது வேறெந்த அடையாளமோ கொடுக்கவில்லை. ஆனால் நீதான் என்னை மணந்துகொள்ள வேண்டும் எனச் சொல்லிவிட்டான்' என்றாள்.
'அதெல்லாம் நடக்காது. என் அண்ணனிடமிருந்து கடிதமோ, அல்லது ஏதாவதொரு அடையாளமோ இல்லாமல், நான் உன்னை மணக்க இயலாது' என லக்ஷ்மணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான். அவன் இப்படித்தான் சொல்லுவான் என நன்கறிந்திருந்த ஸூர்ப்பனகை, உடனே ராமன் தனது முதுகில் எழுதியிருந்ததை அவனுக்குக் காட்டினாள்.
'இதைப் படித்த மறு கணமே, இந்த ராக்ஷஸியின் மூக்கையும், காதுகளையும் வெட்டிவிடு' என அந்த முதுகில் எழுதியிருந்தது. அதைப் படித்த லக்ஷ்மணன், அந்த அரக்கியின் தலைமயிரைப் பற்றியிழுத்து, அவளைக் கீழே தள்ளி, அவளது மூக்கையும், காதுகளையும் அரிந்தான். அப்படி நிகழ்ந்த அந்தக் க்ஷணமே, ஸூர்ப்பனகையும், அவளுடனிருந்த நான்கு அரக்கிகளும் தங்களது சுய உருவை அடைந்து, இன்னமும் அங்கேயே இருந்தால், தங்களது உயிருக்கு உத்திரவாதமில்லையெனப் பயந்து, அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
[தொடரும்]

(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )


To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.