Tuesday, May 15, 2012

Rama Vijaya- Chapter -47


ராம விஜயம் -- 47


ஸுவேலாவுக்கு ராமன் பத்திரமாகத் திரும்பிய செய்தியைக் கேட்ட ராவணன் தனது மந்திராலோசனைக் கூட்டத்தைக் கூட்டி, 'எனது அன்புமகன் இந்திரஜித் இறந்த பின்னர், இனி நான் இவ்வுலகில் உயிர் வாழ்வதில் அர்த்தமே இல்லை. ஒன்று நான் மடிய வேண்டும் அல்லது ராமன் கொல்லப்பட வேண்டும்' எனச் சொல்லிவிட்டுப் போருக்குக் கிளம்பினான். 
ராம சேனையின் மீது பல அம்புகளை எய்தான். ராமன் அவற்றையெல்லாம் தனது பாணங்களால் முறியடித்தான். ஆனாலும், ராவணன் விட்ட ஒரு பாணம் ராமனைத் தாக்க, அதைக் கண்டு கோபமுற்ற விபீஷணன் தனது அண்ணன் மீது பாணங்களை விட்டான். தனது தம்பியின் இந்தச் செயலால் ஆத்திரமடைந்த ராவணன், அவன் மீது பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்தான். அந்த வலிய அஸ்திரத்தை லக்ஷ்மணனின் பாணம் எதிர்கொண்டு, செயலிழக்கச் செய்தது. ராவணன் மற்றுமொரு பாணத்தை லக்ஷ்மணன் மீதுஏவ, அது சென்று இளவரசனைத் தாக்கும் முன்னரே, மாருதி அதைத் தன் கைகளால் பிடித்தான்.
அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் அந்தப் பாணம் ஒரு அழகிய பெண்ணாக மாறி, மாருதியைப் பார்த்து, 'ஓ மாருதி, நீ உன்னை ஒரு பிரம்மச்சாரி எனச் சொல்லிக் கொள்கிறாய். நீ எப்படி ஒரு பெண்ணை உன் கைகளால் தொடலாயிற்று? நீ மட்டும் என்னை இப்போதே விடுவிக்கவில்லை என்றால், பெரும் பாவம் உன்னைச் சேரும்' என்றது.
இப்படி ஒரு பெண் தன் கைகளில் இருப்பதைப் பார்த்த மாருதி அதிசயத்தில் ஆழ்ந்து, அவள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டதுமே, அந்தப் பெண்ணைத் தரையில் இறக்கி விட்டான். மறு கணமே அது மீண்டும் ஒரு பாணமாக மாறி, லக்ஷ்மணனைத் தலையிலும் மார்பிலுமாகப் பலமாகத் தாக்கி, அவனை உயிரற்றவனாய்ப் பூமியில் விழச் செய்தது. அதைக் கண்ட ராமனும், மற்ற வானரங்களும் மிகவும் துக்கத்தில் ஆழ்ந்தனர். தனது வெற்றியில் மகிழ்ந்து ராவணன் அரண்மனைக்குத் திரும்பினான். ராமனும், ஏனைய வானரர்களும் என்ன செய்வதெனப் புரியாமல், ஸுவேலாவை விட்டுச் சென்றுவிடலாமா எனக் குழப்பத்தில் ஆழ்ந்தனர். சற்று நேரத்தில் ராவணன் மீண்டும் வந்து அம்புகளைப் பொழிய, ஆத்திரமுற்ற
ராமன் அவன் மீது சரமாரியாக அம்புகளை எய்து தாக்கிப் பல அசுரர்களைக் கொன்று குவித்தான். ராமனின் போர்த்திறனைக் கண்டு ராவணன் அதனைச் சமாளிக்க முடியாமல் திக்குமுக்காடிப் போய், கால் முதல் தலை வரை நடுங்கலானான். அவன் திரும்பிய இடங்களைல் எல்லாம் ராமனின் திருவுருவே தெரியலாயிற்று. மிகவும் பயந்துபோன ராவணன் உடனேயே இலங்கைக்குத் திரும்பி, தன் மனைவி மண்டோதரியைப் பார்த்து நடந்ததைச் சொன்னான். அப்போது மண்டோதரி, 'என் பிரியமான கணவனே, இப்போதாவது ஸீதையை ராமனிடம் ஒப்படைத்து, அவனை நண்பனாக்கிக் கொள்' என வேண்டினாள்.
ஆனால், ராமன் அவள் சொன்னதைப் பொருட்படுத்தாமல், 'இல்லை; இல்லை...அது மட்டும் நடவாது. ஒன்று நான் இறப்பேன்; அல்லது ராமன் மாண்டு போவான்' எனச் சொல்ல வேதனையுடன் மண்டோதரி தன் அந்தப்புரம் திரும்பிச் சென்றாள். தனது வீரர்களை அழைத்து ஒரு பெரிய பள்ளம் தோண்டச் சொல்லி, அதில் அமர்ந்து அக்னி தேவனைக் குறித்து சர்வ வல்லமை பொருந்திய ஒரு திவ்ய ரதத்தை பெற வேண்டி, ஒரு பெரிய யாகத்தைச் செய்யத் தொடங்கி, ஆழ்ந்த தியானத்தில் ராவணன் அமைந்தான்.
இதற்கிடையில், லக்ஷ்மணனின் நிலையைக் கண்டு, ராமனும், வானரர்களும் வருத்தத்தில் மூழ்கினர். அப்போது ஸுசேனன் என்னும் அவர்களின் மருத்துவன், லக்ஷ்மணனின் நாடி பிடித்துப் பார்த்து,' லக்ஷ்மணன் இன்னும் சாகவில்லை; உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் காலையில் சூரியன் வரும்வரை இது தாங்காது. இன்றிரவுக்குள்ளாக துரோணகிரியில் இருக்கும் அமிர்தச் செடியைக் கொண்டு வந்தால் மட்டுமே அவன் பிழைக்க இயலும். 400 லட்சம் யோஜனைத் தொலைவில் இருக்கும் அந்த மலைக்குச் சென்று, அந்த மூலிகைச் செடியைக் கண்டுபிடித்துக் கொண்டுவரக்கூடிய தீரன் எவனாவது இங்கு இருக்கிறானா?' எனக் கேட்டான். அதைக் கேட்டதுமே மாருதி உடனே எழுந்து நின்று, 'இப்போதே சென்று மூன்று மணி நேரத்துக்குள் அந்த மூலிகையைக் கொண்டு வருகிறேன்' எனச் சொல்லிவிட்டு, ராமனை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, ஸுவேலாவிலிருந்து விண்ணில் பாய்ந்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.