Rama Vijaya- Chapter-52
ராம விஜயம் - 52
அந்த நந்தவனத்துக்குச் செல்லும் சில தினங்களுக்கு முன், தனது அதிகாரிகளை அழைத்து, ராமன், தனது ஆட்சியைப் பற்றி மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என அறிய வேண்டி, இரவில் அவர்களை மாறுவேடத்தில் சென்று, கேட்டுவருமாறு அனுப்பியிருந்தான். அவனது உத்தரவின்படிச் சென்ற அவர்கள், 'நாங்கள் ஒவ்வொரு நாள் இரவிலும் சென்று மக்கள் என்ன சொல்கிறார்கள் என ஒற்றுக் கேட்டோம். பொதுவாக எல்லாருமே உங்களைப் பற்றி நல்லவிதமாகவே பேசினார்கள். ரஜகன் என்னும் ஒரு வண்ணானைத் தவிர. அவன் உங்களைத் தூஷணையாகப் பேசினான். ஒருநாள் இந்த ரஜகன் ஏதோ கோபத்தில் தனது மனைவியை அடித்துவிட்டான். அதனால் கோபித்த அவன் மனைவி, அவனுக்குத் தெரியாமல், அவளது பெற்றோர்கள் வீட்டுக்குச் சென்று விட்டாள். அவளது தந்தை, அவளைத் தனது மருமகனின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்து, அவளை மீண்டும் அவனது வீட்டுக்குள் அனுமதிக்கச் சொல்லி, சமாதானம் செய்ய முனைந்தான். அப்போது அந்த ரஜகன், 'இவளை ஒருபோதும் என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன். நானொன்றும், ஸீதை பல காலம் ராவணனின் இருப்பிடத்தில் வாழ்ந்தாலும் அவளை தன்னுடன் வாழச் சம்மதித்த அந்த ராமனைப் போல மானம் கெட்டவன் இல்லை. நான் ஒரு சுத்தமான வண்ணான். மக்கள் என்னிடம் தரும் அடைகளில் இருக்கும் கறையைச் சுத்தம் செய்து அவர்களுக்குக் கொடுப்பவன். [களைய முடியாத] அழுக்குடன் இங்கே வந்திருக்கும் இவளை ஏற்றுக் கொள்வேன் என நினைத்தாயா? நீர் அவளை உமது வீட்டுக்கே கூட்டிச் செல்லுங்கள். அவள் முகத்தைப் பார்க்கக் கூட நான் விரும்பவில்லை.' எனச் சொல்லிவிட்டான். இந்த ஒருவன் மட்டுமே தங்களைப் பற்றி அவதூறாகப் பேசினான்' எனத் தெரிவித்தனர்.
தனது அதிகாரிகளிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன் மிகவும் வருத்தமடைந்தான். உடனே தனது தம்பி லக்ஷ்மணனை அழைத்து, 'இதோ பார், லக்ஷ்மணா, ரஜகன் என்பவன் என்னை அவதூறாகப் பேசிவிட்டான். ஸீதை நல்லவள், அப்பழுக்கு அற்றவள் என எனக்குத் தெரியும்.ஆனாலும், அவளை நான் மீண்டும் என்னுடன் சேர்த்துக் கொண்டதால் அவன் இப்படிப் பேசி விட்டான். இதை என்னால் தாங்க இயலாது. எனவே, நீ இப்போதே ஸீதையைக் கூட்டிச் சென்று, அவளைக் கானகத்தில் விட்டுவிட்டு, உடனே திரும்ப வேண்டும்' எனக் கட்டளையிட்டான்.
அதைக் கேட்டு அதிர்ச்சியுற்ற லக்ஷ்மணன், 'ரஜகன் சொன்னதை நீ மனதில் கொள்ள வேண்டாம். இது போல பலர் மற்றவரைப் பற்றித் தூஷணையாகப் பேச இருக்கிறார்கள். ஒரு உத்தமமான, நியாயவானான நீ இதைப் பொருட்படுத்தக் கூடாது. சொல்பவர் என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளட்டும். நீ ஏன் இந்த முட்டாளின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு அளிக்க வேண்டும்? நான் இப்போதே சென்று இப்படிப் பேசியவனின் நாக்கை அறுத்துவிட்டு வருகிறேன்' எனக் கிளம்பினான்.
'நீ சொல்வது சரியே. ஆனால், நீ சென்று அவன் நாக்கை அறுத்தால், நாம் குற்றவாளிகள் என்பதால்தான் அப்படிச் செய்தோம் என மக்கள் பேசுவர். அதை விடவும், இப்போதே ஸீதையை நாம் அனுப்பி விட்டால், பிறகு வேறெவரும் நம்மைக் குறை சொல்ல மாட்டார்கள்' என ராமன் பதிலிறுத்தான். அவனது சொற்களை நிறைவேற்ற லக்ஷ்மணன் சற்றுத் தயங்கியதைப் பார்த்த ராமன், ' நீ மட்டும் இந்த எனது ஆணையை நிறைவேற்றவில்லையென்றால், நான் இப்போதே, இந்த இடத்திலேயே என்னை மாய்த்துக் கொள்வேன்' என உறுதியாகச் சொன்னான்.
இந்த விஷயத்தில் ராமன் இவ்வளவு உறுதியாக இருப்பதைக் கண்ட லக்ஷ்மணன், உடனே அங்கிருந்து எழுந்து ஸீதை இருக்குமிடம் சென்றான். 'ராமன் உன்னை இப்போதே ஒரு வனத்துக்கு அழைத்துச் செல்லுமாறு உத்தரவிட்டிருக்கிறான். எனவே அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்து என்னுடன் கிளம்பத் தயாராகு' எனச் சொன்னான். 'என்ன? ராமன் என்னை காட்டுக்குச் செல்லச் சொல்லி அனுப்பியிருக்கிறாரா? ஆ! நான்தான் எவ்வளவு பாக்கியம் செய்தவள்! சில தினங்களுக்கு முன்தான், எனக்கு என்ன பிடிக்குமெனச் சொன்னேன். ஒரு நாலைந்து நாட்கள் காட்டுக்குச் சென்று, கிழங்குகளை உண்டு, புற்களாலான படுக்கையில் படுத்து மகிழ ஆசை எனச் சொல்லியிருந்தேன். அதற்காகத்தான், இப்படி ஒரு ஏற்பாடை அவர் உன் மூலம் செய்யச் சொல்லியிருக்கிறார் போலும்! இப்போதே கிளம்புவோம். நான் தயாரகவே இருக்கிறேன்' என ஸீதை மகிழ்ச்சியுடன் கூவினாள். அவள் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்ட லக்ஷ்மணனால் அவனது கண்களிலிருந்து வழிந்த நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment