Saturday, May 5, 2012

Rama Vijaya - Chapter- 37

ராம விஜயம் --37


சமாதானத் தூது இவ்வாறு தோல்வியடைந்ததும், ஸுஸேனன் என்னும் வானரன், இருபது கோடி வானரங்களைக் கொண்ட பெரும் படைக்குத் தலமையேற்று, போருக்குக் கிளம்பினான். தர்மரக்ஷன் என்னும் தளபதி, ராவணனின் அசுரப்படையுடன் அவனை எதிர்கொண்டான். மாருதி அவர்களை எல்லாம் தனது வலிமையினால் கொன்று குவித்தான். எஞ்சியிருந்த அசுரப் படைகள் தோற்றோடியன. இந்தச் செய்தியறிந்து கோபமடைந்த ராவணன், வஜ்ரதம்ஷ்டி, ஸுக்பனா என்னும் இரு தளபதிகளுடன் மேலும் ஒரு படையை அனுப்ப அவர்களுக்கும் அதே கதி நேர்ந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் ராவணன் திகைத்துப் போனான்.
இதற்குள், ஜம்புமாலி, வித்யும்னன் என்னும் இரு படைத் தளபதிகளுடன், இந்திரஜித் போர்க்களம் சென்று, எதிரிகளின் மீது தனது அம்புகளை எய்தான். ஆனால், ராமன் தனது பாணங்களால் அந்த அம்புகளைத் தடுத்து, அவ்விரு தளபதிகளையும் கொன்று வீழ்த்தினான். இந்திரஜித் தனது தேரிலிருந்து குதித்து, மேகங்களுக்குள் தன்னை மாயமாக மறைத்துக்கொண்டு, நாகாஸ்திரத்தை எய்ய, பலவிதமான ஸர்ப்பங்கள் சீறிப் பாய்ந்து வானரப் படையைத் தாக்கின. ஸர்ப்பங்களின் கொடூரமான தாக்குதலால், ராம, லக்ஷ்மணர்களும் ஏனைய குரங்குகளும் உயிரிழந்து தரையில் வீழ்ந்தனர். அழியா வரம் பெற்ற மாருதியும், விபீஷணனும் மட்டும் இவற்றால் பாதிக்கப்படமால் உயிர் தப்பினர்.
ராமனைத் தோற்கடித்துவிட்ட மகிழ்ச்சியில் வெற்றியுடன் இந்திரஜித் நகரம் திரும்பினான். அவனது இந்த வெற்றியைக் கண்டு மிகவும் மன மகிழ்ந்த ராவணன், தனது தங்கை திரிஜடையைப் பார்த்து, 'தங்கையே, என் மகனின் வீரச் செயலைக் கண்டாயா? எப்படி அவன் வானரப் படைகளைக் கொன்று, ராமனைத் தோற்கடித்தான் எனப் பார்த்தாயா? இப்போது, யாராலுமே என்னை இப்பூவுலகில் வெற்றி கொள்ள இயலாது. இப்போது நீ என்ன செய்ய வேண்டுமென்றால், உடனே ஸீதையிடம் சென்று இங்கு நிகழ்ந்ததைக் கூறு. உயிரற்றுப் போர்க்களத்தில் வீழ்ந்து கிடக்கும் ராம, லக்ஷ்மணர்களின், மற்ற வானரங்களின் உடல்களை அவளுக்குக் காட்டி, இனி அவளைக் காப்பாற்ற யாருமே இல்லை என்பதையும், நான் ஒருவனே அவளுக்கு இனி ஆதாரம் எனவும் உணர்த்து. அவளை, என்னை மணந்துகொள்ளச் சம்மதிக்கச் செய். என் அன்புத் தங்கையே, நான் அவளை மிகவும் நேசிக்கிறேன்' என்று சொல்லி அனுப்பினான்.
திரிஜடையும் அவ்வாறே ஸீதையிடம் சென்று, அவளை அழைத்துக்கொண்டுபோய், உயிரற்று வீழ்ந்து கிடக்கும் அந்த உடல்களைக் காட்டி, ராவணன் சொல்லியனுப்பிய செய்தியையும் கூறினாள். அந்தக் கோரக் காட்சியைக் கண்ட ஸீதை ஓவென அலறி, அழுது, தனக்கு இனி யாருமே துணைக்கு இல்லையே என அரற்றினாள்.
மாருதியும், விபீஷணனும் இதிலிருந்து மீண்டு, ராம,லக்ஷ்மணர்களைக் காப்பாற்ற என்ன வழி என்று ஆலோசித்தனர். அவர்கள் ஒரு முடிவுக்கு வருவதற்குள், வாயு அங்கே வந்து ராமனின் காதுகளில் ஒரு கருட மந்திரத்தை ஓத, உடனே அங்கே கருடன்களும், கழுகளும் பல்லாயிரக் கணக்கில் தோன்றி, அங்கிருந்த ஸர்ப்பங்களை எல்லாம் கொன்றழித்து, ராம, லக்ஷ்மணர்களையும், மற்றுமிருந்த அனைவரையும் உயிர்ப்பித்தன. மீண்டும் கடும் போர் துவங்கியது.
ராவணனின் மந்திரியான ப்ரவஸ்தன் என்பவன் தீரமுடன் போரிட்டு, பல வானரங்களைக் கொன்றான். அதைக் கண்டு வெகுண்ட நளன், ப்ரவஸ்தன் மீது பல்லாயிரக்கணக்கில் பாறைகளை எறிய, அவற்றையெல்லாம் தனது அம்புகளால் நொறுக்கிவிட்டு, பிரவஸ்தன் தொடர்ந்து சண்டையிட்டான். உடனே, நளன் 'தடா' என்னும் ஒரு மிகப் பெரிய [நூறு யோஜனை அளவு உயரமுள்ள] மரத்தைப் பிடுங்கி அதனால் பிரவஸ்தனை அடித்துக் கொன்றான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.