Sunday, May 6, 2012

Rama Vijaya - Chapter - 38

ராம விஜயம் --38


பிரவஸ்தனின் மறைவால் மனம் நொந்து கோபமடைந்த ராவணன், தானே நேரில் சென்று போரிடக் கிளம்பினான். அப்போது மண்டோதரி அவனைப் பார்த்து, 'என் பிரியமானவனே, ராமனுடன் போரிடும் எண்ணத்தை இப்போதாவது நீ கைவிட வேண்டும். உனக்கெதற்கு மாற்றானின் மனைவி? என் அன்பே, இப்போதே அவளை ராமனிடம் ஒப்படைத்துவிடு. நாம் எல்லாரும் மகிழ்வுடனும், அமைதியுடனும் வாழ்வோம்' எனச் சொல்லிப் பார்த்தாள். அதற்கு ராவணன், 'என் உயிரினும் மேலான மண்டோதரி, உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்யச் சித்தமாயிருக்கிறேன். ஆனால், ஸீதையை ராமனிடம் ஒப்படைத்துவிடு என மட்டும் சொல்லாதே. நான் அவனுடன் சண்டையிட்டு அவனது படைகளுடன் சேர்த்து அவனையும் கொல்லத் தயாராக இருக்கிறேன்' என்றபடி சென்றான். ராவணன் இப்படி மறுத்துப் பேசியதும் வருத்தத்துடன் மண்டோதரி உள்ளே சென்றுவிட்டாள்.
அதையடுத்து, ராவணன் தனது மகன், பேரப் பிள்ளைகள், மந்திரிகள், சேனாபதிகளுடன் ஒரு பெரிய படையைத் திரட்டி, போருக்கான ஏற்பாடுகளைச் செய்தான். அப்போது, சுக்ரீவன் ஒரு பெரிய மலையை அவன் மீது எறிய, அதைத் தனது அம்பினால் பொடியாக்கினான். இதர வானரங்களும் கையில் கிடைத்த மலை, பாறாங்கல், மரங்கள் மற்றும் பல ஆயுதங்களுடன் வந்து ராவணனைத் தாக்கினர். அவை எல்லாவற்றையும் ராவணன் தனது அம்புகளால் முறியடித்தான். மாருதியும் ஒரு பெரிய கல்லை எடுத்து அவன் மீது எறிய, அதையும் நொறுக்கிவிட்டு, மாருதியையும் தாக்கலானான். ராவணன் கொடுத்த அடிகளால் தடுமாறிப்போய் சற்றே மயங்கிய மாருதி, தன்னைச் சமாளித்துக்கொண்டு, ராவணனைப் பலமாகத் தாக்கி, அவனது பத்துத் தலைகளிலுமிருந்த மகுடங்களையும், அவனது குடையையும் கீழே தள்ளிச் சாய்த்தான். ராவணன் அதைக் கண்டு சற்றும் கலங்காமல், மேலும் ஆக்ரோஷத்துடன் போரிடத் தொடங்கினான்.
அதைக் கண்ட நளன், ஒரு மந்திரத்தைப் பிரயோகித்துத் தன்னைப் போலவே பல நளன்களை உருவாக்க, அவர்கள் எல்லாருமே ராவணன் மீது கற்கள், மரங்கள் எனப் பலவற்றையும் எறிந்து தாக்கலாயினர். பிரம்மாஸ்திரத்தைப் பிரயோகித்து, அந்த மந்திர சக்தியை முறியடித்து, அவை அனைத்தையும் எதிர்கொண்டு ராவணன் அழித்துவிட்டான். லக்ஷ்மணன் தானும் ஒரு பிரம்மாஸ்திரத்தை எய்ய, அதை இரு கூறாகப் பிளந்தான் ராவணன். அதில் ஒரு பகுதி கீழே பூமியில் விழ, மறு பகுதி சென்று லக்ஷ்மணனைத் தாக்கியது. லக்ஷ்மணன் மயங்கிக் கீழே விழுந்தான். அதைக் கண்டு ஆத்திரமுற்ற மாருதி, ராவணன் மீது பாய்ந்து அவனைக் கடுமையாகத் தாக்க ராவணன் ரத்த வாந்தி எடுத்து, அவசரமாகப் பின்வாங்கி இலங்கைக்குத் திரும்பினான்.
இப்படித் தோல்வியுற்றுத் திரும்பிய ராவணன் அசுர வீரர்களை அழைத்து, நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும் தனது தம்பி கும்பகர்ணனை எழுப்பச் சொல்லி உத்தரவிட்டான். வீரர்கள் சென்று கும்பகர்ணனைப் பலமாக உலுக்கியும் அவன் எழுந்திருக்கவில்லை. அதனால், அவர்கள் அவன் மீது பாறைகளை எறிந்தும், கூரான ஆயுதஙளால் குத்தியும், தங்களது நீண்ட நகங்களால் பிராண்டியும் முயற்சி செய்தனர். ஆனால் அவற்றால் எந்தப் பயனும் விளையவில்லை. உரத்த குறட்டை விட்டுக்கொண்டு, ஒவ்வொரு முறை மூச்சு விடும்போதும், தன்னெதிரே இருந்த ராக்ஷஸர்கள், யானைகள், எருமைகள் என அனைத்தையும் உள்ளிழுத்து, அவர்களை நீண்ட மூச்சின் மூலம் வெளித் தள்ளிக் கொண்டிருந்தான். இவற்றால் களைத்துப்போன அசுரர்கள் இரு தேவ கன்னிகைகளைக் கூட்டிவந்து அவன் முன்னமர்ந்து பாடச் செய்தனர். அவர்களது இனிய தேவ கானத்தைக் கேட்டு, கும்பகர்ணன் மெல்லக் கண் விழித்தான்.
ஆறு மாதங்களாக எதுவும் உண்ணாமல் நீண்ட நித்திரையில் ஆழ்ந்திருந்ததால், மிகவும் பசியோடிருந்த கும்பகர்ணன், கணக்கற்ற எருதுகள், பெண் எருமைகள், பசுக்கள், அசுரர்கள் என அனைவரையும் விழுங்கி, குடம் குடமாக நெய்யையும், கள்ளையும் குடித்துப் பெரியதொரு ஏப்பம் விட்டான். சஹஜ நிலைக்கு அவன் வந்ததும், அசுர வீரர்கள் ராவணனுக்கும், இலங்கைக்கும் நிகழ்ந்த சம்பவங்களை எடுத்துரைத்து, ராவணன் அவனை அழைத்துவரச் சொன்ன செய்தியையும் சொன்னார்கள். அதைக் கேட்டு ஆவேசத்துடன் எழுந்த கும்பகர்ணன் தன் மிகப் பெரிய உருவுடன் அரண்மனை நோக்கிப் புறப்பட்டான். அவனது பிரம்மாண்டமான உருவத்தைப் பார்த்து, வானரர்கள் அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர். அதைக் கண்ட மாருதி, அங்கே சென்று, அவனை மூன்று முறை தன் கைகளால் தூக்கி இறக்கிக் காட்டி, அவர்களது அச்சத்தைத் தீர்த்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.