Monday, May 14, 2012

Rama Vijaya -Chapter-46

ராம விஜயம் --46


இப்படி மஹிராவணர்கள் வந்துகொண்டே இருக்க, என்ன செய்வதனத் தெரியாமல் ராமன்
குழம்பினான். மாருதி, மகரி[சுவர்ச்சலா தேவி],யிடம் சென்று, இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது என வினவினான். அவள் மாருதியை அஹிராவணனின் மனைவியான சந்திரஸேனை என்பவளைக் கேட்டால் இதற்கு விடை கிடைக்கலாமென ஆலோசனை சொன்னாள். அதன்படியே அனுமனும் சந்திரஸேனையைச் சென்று
பார்த்து, இதற்கான காரணத்தைக் கேட்டான்.
'நீ கேட்க விரும்பும் காரணத்தை நான் சொல்கிறேன். ஆனால், ராமன் என்னை மணக்கச் சம்மதிக்க வேண்டும். அப்போதுதான் சொல்லுவேன். நான் ராமனின அழகில் மயங்கிப் போய்விட்டேன். நீ மட்டும் அவனை என்னை மணந்துகொள்ளச் சம்மதிக்க வைத்தால், இந்தப் பிரச்சினைக்கான விடையை நான் சொல்லத் தயார்' எனச் சந்திரஸேனை சொன்னாள். 'ப்பூ, இவ்வளவுதானா? நான் ராமனை வெகு எளிதில் இதற்குச் சம்மதிக்க வைக்க முடியும்' என மாருதி சொல்ல, 'அப்படியானால், நீ எனக்கு சத்தியம் செய்து கொடு' எனச் சந்திரஸேனை கேட்டாள். மாருதியும்
அப்படியே சத்தியம் செய்து கொடுத்தான்.
அதனால் மகிழ்ந்த சந்திரஸேனை, ' அஹிராவணன் ஒரு சமயம் கடும் தவம் செய்தான். அதனால் மகிழ்ந்த சிவன், அவனுக்கு ஒரு வரம் அளித்தார். அதன்படி அவனது சகோதரனின் உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு ரத்தத் துளியும், பாதாளத்தில் அவன் செய்த யாகத்திலிருக்கும் குண்டத்தில் நிரம்பியிருக்கும் அமிர்தத்துடன் கலந்து ஒரு மஹிராவணனை உருவாக்கும்' எனச் சொல்லி, ஒரு தேனடையில் அடைந்திருக்கும் தேனீக்களையும் அளித்து, இந்தத் தேனீக்கள், அவன் யுத்தம் செய்யும்போது, அமிர்தத்தை உருவாக்கும் எனவும் அருள் பாலித்தார். இந்தத் தேனீக்கள் ஒவ்வொன்றும் ஒரு மலையளவு பெரியவை. இவைதான் அமிர்தமாகிய தேனை உருவாக்கி, அவற்றை மஹிராவணனின் ஒவ்வொரு துளி ரத்தத்துடனும் கலந்து அநேக மஹிராவணர்களை உருவாக்கி வருகின்றன. எனவே, நீ இப்போதே பாதாளத்துக்குச் சென்று, அந்தத் தேனீக்களை அழித்தால், அமிர்தம் வருவது தடைப்பட்டுப் போகும். அப்போதுதான் ராமனால் மஹிராவணனைக் கொல்ல முடியும்' என உரைத்தாள்.
இதைக் கேட்டதுமே, மாருதி உடனே பாதாள லோகத்துக்குச் என்று, அங்கிருந்த அனைத்து தேனீக்களையும் கொன்றழித்தான். அந்தத் தேனீக்களின் தலைவன், மாருதியை வணங்கித் 'தன்னை மட்டுமாவது உயிர் பிழைக்கச் செய்தால், தான் பிற்சமயத்தில் உதவியாக இருப்பேன்' எனக் கேட்டுக் கொண்டதால், அதை மட்டும் கொல்லாமல் விட்டான். தேனீக்களைக் கொன்றதும், ராமனிடம் சென்று, 'இப்போது மஹிராவணன் மீது பாணமெய்து அவனைக் கொல்' எனச் சொன்னான். அதன்படியே ராமன் விட்ட பாணத்தால் மஹிராவணன் மாண்டு போனான்.
இந்த வெற்றிக்குப் பின், மாருதி தான் சந்திரஸேனைக்குக் கொடுத்த சத்தியத்தை நினைவு கூர்ந்தான். 'நான் இப்போது என்ன செய்வதென எனக்குப் புரியவில்லை. சந்திரஸேனையை மணக்குமாறு ராமனிடம் சொன்னால், அவர் கேட்கப் போவதில்லை. ஏனெனில், அவர் தனது மனைவி ஸீதையைத் தவிர வேறெவரையும் நினைத்துக்கூடப் பார்க்க மாட்டார். ஆனால், நான் சந்திரஸேனைக்குக் கொடுத்த வாக்கை மீறினால், அவள் சாபத்தால் நான் அழிந்து விடுவேனே' எனக் குழம்பினான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ராமனிடம் சென்று, நடந்ததனைத்தையும் விவரித்து வேண்டினான்.
'நான் எனது உறுதியிலிருந்து பிறழ மாட்டேன். ஆனால், நீ விரும்பினால், சந்திரஸேனையைச் சந்தித்து, அவளை ஆசீர்வதிக்க நான் தயார்' என ராமன் சொல்ல, ' அடடா! அதுவே போதும்' என மாருதி மன மகிழ்ந்தான். உடனே சந்திரஸேனையிடம் சென்று, 'ராமன் இன்றிரவு உனது அந்தப்புரத்துக்கு வருவார். நீ மஞ்சத்தைத் தயாராக வைத்திரு. ஆனால், அவரது உடல் பளுவால், அந்த மஞ்சம் உடைந்துபோனால், அதன் பின்னர், அவர் உன்னை மணக்கச் சம்மதிக்க மாட்டார். அதன் பிறகு, நீ உனது இருப்பிடமான பாதாள லோகத்துக்குத்தான் திரும்பிச் செல்ல வேண்டும். எனவே நீ ஒரு வலிமையான, உறுதியான மஞ்சத்தைத் தயார் செய்' என அறிவுறுத்தினான்.
மாருதி சொன்னதைக் கேட்ட சந்திரஸேனையும், ஒரு உறுதியான மஞ்சத்தைத் தயார் செய்து, அதன் மீது அமர்ந்து, ராமனின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தாள். அப்போது,மாருதி, அந்தத் தலைவன் தேனீயை அனுப்பி, அவள் அறியாவண்ணம், அந்த மஞ்சத்தைக் குடைந்து, ராமன் அமர்ந்ததுமே அது நொறுங்கிப் போகுமாறு செய்யச் சொல்லி அனுப்பினான். தேனீயும் தன் வாக்கை நிறைவேற்ற அங்கு சென்று, எவரும் அறியாவண்ணம் அந்த மஞ்சத்தைக் குடைந்து உளுத்துப் போகச் செய்து திரும்பியது.
மாலை நேரம். மாருதி ராமனை அழைத்துக்கொண்டு சந்திரஸேனை இருக்கும் இடத்துக்கு வந்தான். ராமன் வரவில் மகிழ்ந்த சந்திரஸேனை அவனை வரவேற்று, மஞ்சத்தில் அமரச் செய்தாள். அவன் அதில் உட்கார்ந்த மறுகணமே, அந்த மஞ்சம் பொடிப்பொடியாகி நொறுங்கியது. உடனே, ராமன் அங்கிருந்து எழுந்து மாருதியுடன் தான் இருந்த இடத்துக்குச் செல்லத் தொடங்க, சந்திரஸேனை கோபத்துடன் மாருதியைப் பார்த்து,' ஏ, குரங்கே, நீ ஒரு திறமையான போக்கிரி. இதெல்லாம் உனது சூழ்ச்சியே. நீ இப்போதே அழிந்து போவாயென உன்னைச் சபிக்கிறேன்' எனக் கூச்சலிட்டாள். அதைக் கேட்ட மாருதி மிகவும் கலவரமடைந்தான். உடனே ராமன் அவளிடம் சென்று, தனது அடுத்த அவதாரத்தில் அவள் ஸத்தியபாமாவாகப் பிறப்பாள் என்றும், அப்போது கண்டிப்பாக அவளை மணப்பதாகவும் உறுதி சொல்லி, அவளைச் சமாதானப் படுத்தினான். எல்லா அசுரர்களையும் கொன்ற பின்னர், மஹிகாவதியை மகரத்வஜனுக்கு அளித்துவிட்டு, மாருதியுடனும், மற்ற வானரர்களுடனும், ராம, லக்ஷ்மணர்கள் ஸுவேலாவுக்குத் திரும்பினர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.