Saturday, May 19, 2012

Rama Vijaya- Chapter- 51

ராம விஜயம்-- 51

முடிசூடிய பட்டாபிராமன், வந்திருந்த அரசர்களுக்கும், சுக்ரீவன், விபீஷணன் முதலானோர்க்கும் வெகுமதிகள் தந்து கௌரவித்தான். மாருதியின் முறை வந்தபோது, ராமன் கொடுத்த பரிசை அவன் ஏற்கவில்லை. ராமன் அளித்த வெகுமதியை நீ ஏன் ஏற்க மறுத்தாயென வானரர்கள் அவனைக் கேட்டனர். 'ராமனிடமிருந்து எனக்கு என்ன பரிசு அளிக்க முடியும். அவர்தான் எப்போதும் என் உள்ளத்திலேயே இருக்கிறாரே' என மாருதி சொல்ல, அதை நம்பாத சில வானரர்கள்,'அப்படியாயின் ராமன் உனது நெஞ்சுக்குள் இருப்பதைக் காட்டு, பார்க்கலாம், எனச் சவால் விட, மாருதி சட்டென்று தனது மார்பைப் பிளந்து ராமன் தன் அகத்துள் குடிகொண்டிருக்கும் காட்சியைக் காட்டினான். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்த வானரர்கள் மாருதியின் பாதங்களில் வீழ்ந்து பணிந்தனர்.
அரியணையில் ராமன் அமர்ந்திருக்கும் காட்சியை ஒரு சாளரம் வழியாகக் கண்ட கைகேயி, 'என் மகனின் துரதிர்ஷ்டம். ராமனைப் பாருங்கள். எவ்வளவு மகிழ்சியுடன் இருக்கிறான். என் மகனை அரியாசனத்தில் அமர்த்த நான் எவ்வளவோ முயற்சி செய்தும், பரதன் என் பேச்சைக் கேட்கவில்லை. இப்போது அவன் ராமனின் அடிமையாகி விட்டான்' எனப் புலம்பினாள். அதைக் கேட்ட வஸிஷ்டர், அவளைப் பார்த்து, 'நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நீ எதையுமே கேட்கவில்லை. உனது தவற்றின் காரணமாகவே, உனது பொறாமைக் குணத்தாலேயே ராமன் காட்டுக்குச் செல்ல நேரிட்டது. நீதான் உன் கணவன் தஸரதனின் மறைவுக்கும் காரணம். பரத, சத்ருக்னர்களை நேசிப்பது போலவே, ராம, லக்ஷ்மணர்களையும் நீ அதே அளவில் நேசிக்க வேண்டுமென நான் உனக்கு புத்திமதி கூறுகிறேன்' என நல்ல வார்த்தைகள் சொல்லித் தேற்றினார்.
சில நாட்களுக்குப் பிறகு, சுக்ரீவன், விபீஷணன், அங்கதன் முதலானோர் ராமனிடம் விடை பெற்றுக்கொண்டு, தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினர். மாருதி மட்டும் ராமனை விட்டகலாது அவனுடனேயே தங்கினான். பதினோறாயிரம் ஆண்டுகள் ராமன் நல்லாட்சி செய்தான். அவனது குடிமக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடனும், சீலமாகவும் வாழ்ந்தனர்.
இதற்கிடையில் ஸீதை கர்ப்பமுற்றாள். ஆறாம் மாதத்தில், ராமன் ஒருமுறை ராமன் அவளைத் தனக்கு மிகவும் பிரியமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றான். சிறிது காலம் உல்லாசமாகக் களித்த பின்னர், ஸீதையைப் பார்த்து, 'என் அன்பான மனைவியே, நீ இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறாய். உனக்கு எது பிடித்தமானது எனச் சொல்வாயாக. நீ எதைக் கேட்டாலும் அதைத் தர சித்தமாக இருக்கிறேன்' என ராமன் அன்புடன் உரைத்தான். அதைக் கேட்ட ஸீதை, ராமனைப் பார்த்து,' என் பிரியமானவரே, நீயும், நானுமாய் முனிவர்கள் வசிக்கும் வனத்துக்குச் சென்று, அங்கிருக்கும் காய்,கிழங்குகளை உண்டு, தர்ப்பைகளாலான படுக்கையில் படுத்து சிறிது காலம் கழிக்க வேண்டும் என விரும்புகிறேன்' எனச் சொன்னாள். அதைக் கேட்ட ராமன்,' இத்தனைக் காலம் வனவாசம் செய்து துன்பங்களை அனுபவித்திருந்தும், இவளது மனம் இன்னமும் அதையே விரும்புகிறதே' என மனதுக்குள் வியந்தபடியே அவளை அழைத்துக்கொண்டு அரண்மனைக்குத் திரும்பினான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.