Rama VIjaya- Chapter-56
ராம விஜயம் -- 56
பச்சிளம் பாலகனாகத் தெரிந்த லவனைப் பார்த்து, அவனிடம் நயமாகப் பேசி,அந்தக் குதிரையை அவிழ்க்க முனைந்தனர். அப்போது, உரத்த குரலில்,' நான்தான் இந்தக் குதிரையைக் கட்டிப் போட்டேன். இதோ நான் இங்கே உங்களுடன் போரிடத் தயாராக நிற்கிறேன். யார் அந்த ராமன்? போய் நான் அவனுடனும் சண்டைபோடத் தயாராக இருக்கிறேன் எனச் சொல்லுங்கள். என்னைப் பாலகன் எனச் சொல்கிறீர்கள். ஆனால், நான் உங்கள் அனைவரையும் கொல்லுவேன். உங்களது பெருமையையும் அழிப்பேன்' என லவன் அவர்களைப் பார்த்துச் சொன்னான்.
அதைக் கேட்ட வீரர்கள் ' இந்தச் சிறுவனுடன் சண்டையிட்டால், அது நமக்குத்தான் இழுக்கு. அதுமட்டுமில்லாமல், இங்கே எம்முடன் வந்திருக்கும் ஏனைய மன்னர்களும் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள். இப்போதே இந்தக் குதிரையை அவிழ்த்துக்கொண்டு, சத்தமில்லாமல் நகர்ந்து விடுவதே நல்லது' என நினைத்து, அந்தக் குதிரையைக் கட்டவிழ்க்கச் சென்றனர். அப்படிச் சென்றவரின் கைகளை வெட்டினான் லவன். மொத்த சேனையும் அவன் மீது கோபத்துடன் பாய, லவனோ, தனது அம்புகளை விட்டு, அவர்களைத் தாக்கிப் பேரழிவை உண்டுபண்ணினான்.
வீழ்ந்து கிடந்த படைகளின் நடுவே தன்னுடைய தேர் செல்ல வழியின்றி, சத்ருக்னன் மாட்டிக் கொண்டான். ஆயினும், இறந்து கிடந்த உடல்களைத் தள்ளி, வழி ஏற்படுத்திக்கொண்டு, லவனின் முன் சென்று நின்றான். ராமனைப் போலவே உடல் தோற்றத்தில் காணப்பட்ட அந்தப் பாலகனைப் பார்த்து, 'நீ யாருடைய குழந்தை? எனது வீரர்களையெல்லாம் அழித்த உன்னை நான் இப்போது கடுமையாகத் தண்டிக்கப் போகிறேன்.' என்றான்.
'அப்படியா? நல்லது. இப்போது நீர் எப்படி உமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறீரென நான் பார்க்கிறேன்' என லவன் அலட்சியமாகப் பதில் சொல்ல, அதனால் ஆத்திரமடைந்த சத்ருக்னன், அந்தச் சிறுவனை நோக்கி ஒரு அம்பினை எய்தான். அந்தக் கணமே அந்த அம்பை லவன் எதிர்கொண்டு முறியடித்தான். மீண்டும் லவன் மீது பல அம்புகளை சத்ருக்னன் செலுத்த அவையனைத்தையுமே முறியடித்தான். கடைசியாக, அபாயகரமான நேரத்தில் உபயோகிக்கவென ராமன் கொடுத்திருந்த ஒரு வலிய அஸ்திரத்தை அந்தப் பாலகன் மீது ஏவ, 'அடடா, இந்த அஸ்திரத்தை எப்படி முறியடிப்பதென எனக்குத் தெரியவில்லையே. குசன் மட்டும் இங்கிருந்திருந்தால், அவனுக்கு இது தெரிந்திருக்கக்கூடும். ஆனால், அவனோ இப்போது கிழங்குகள் கொண்டுவருவதற்காகக் காட்டுக்குச் சென்றிருக்கிறானே' என நினைத்துக்கொண்டே, தனக்குத் தெரிந்த ஒரு அஸ்திரத்தால் அதனை எதிர்கொண்டான். ஆனால், அது ராமாஸ்திரத்தைச் சிறிதளவே எதிர்கொண்டது. சீறிவந்த அஸ்திரம் லவனைத் தாக்க, லவன் மூர்ர்ச்சையாகிக் கீழே விழுந்தான்.
மனங்கலங்கிய சத்ருக்னன், சுயநினைவின்றி விழுந்து கிடந்த சிறுவனிடம் சென்று, அவனை உற்றுப் பார்த்தான். லவன் ராமனைப் போலவே காட்சியளித்தான். அவன் மீது சிறிது நீர் தெளித்து, அவனை மயக்கத்திலிருந்து எழுப்பி, ராமனிடம் இந்தப் பாலகனைக் காட்ட வேண்டுமென நினைத்துத் தனது தேரில் கிடத்தி, ஷ்யாமகர்ணாவையும் அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
மற்ற சிறுவர்களெல்லாம் ஸீதையிடம் சென்று, லவனுக்கு நிகழ்ந்ததைச் சொல்லினர். அதைக் கேட்டதும் ஸீதை மயக்கமுற்றாள். சற்று நேரத்தில் கண் விழித்த ஸீதை, 'நான் தீனமானவள்; துர்பாக்கியவதி. எந்த ஒரு இதயமற்ற பாவி என் மகனைக் கொண்டு போனான்? என் மகனே! நீதான் எவ்வளவு மென்மையானவன்! உனக்குக் காயம் ஏதும் பட்டதோ? எதிரியின் அம்புகளால் கண்ணில் அடிபட்டதோ? என் குழந்தைகள் மிகவும் சிறியவர்களாயிற்றே! கிழங்குகளைத் தின்று வாழும் அவர்களால் எப்படி வீரர்களோடு சண்டையிட முடியும்? ஒரு குழந்தையின் மீது அம்பெய்பவர்கள் க்ஷத்ரியர்களா? அதெப்படி எவருமே அந்தப் பாலகன் மீது கருணை கொள்ளவில்லை? யார் என்னுடைய செல்வத்தைக் கொண்டுபோனது? குருடும், முடமுமான ஒரு அபலையின் கைத்தடியைப் பிடுங்கிக்கொண்டு போனவன் எவன்? எனது தந்தை வால்மீகி மட்டும் இப்போது இங்கிருந்திருந்தால், அவர் கண்டிப்பாக என் குழந்தையை மீட்டுவந்து கொடுத்திருப்பார். ஆனால், அவரோ பாதாள லோகத்துக்குப் போயிருக்கிறார். குசனும் இங்கில்லாமல், காட்டுக்குப் போயிருக்கிறான். இப்போது நான் செய்வது? யார் என் மகனைத் திரும்பவும் கொண்டு வருவார்கள்?' எனப் பலவாறும் புலம்பி அழுதாள்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment