Monday, May 7, 2012

Rama Vijay - Chapter- 39

ராம விஜயம் --39


அவனைப் பார்த்ததும் மகிழ்ந்த ராவணன், அவனை அன்புடன் அணைத்து, 'கும்பகர்ணா, இப்போது நான் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். ராமனின் மனைவி ஸீதாவை, அவள் மேல் மையல் கொண்டு, அவளை மணக்கவென இங்கே கொண்டுவந்து விட்டேன். அவளை என்னிடமிருந்து பிரித்துத் தன்னுடன் கொண்டுசெல்வதற்காக, ராமன் ஒரு பெரிய வானரப் படையுடன் இங்கே வந்திருக்கிறான். அவர்கள் பல அசுரர்களைக் கொன்று, இலங்கையின் பெரும் பகுதியையும் அழித்து விட்டார்கள்.இந்த நேரத்தில் நீ எனக்கு உதவ வேண்டும்' என வேண்டினான்.
'ஒரு அபலைப் பெண்னை அவளது கணவனிடமிருந்து பிரித்தது சரியல்ல' எனச் சொன்ன கும்பகர்ணன், ' இன்னொருவனின் மனைவியைக் கவர்ந்து கொண்டுவருவது மிகப் பெரிய பாவம். அவளை நீ அவளது கணவனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அவளது விருப்பத்துக்கு மாறாக இங்கே கொண்டு வந்ததன் மூலம் உனது ஆசைகள் நிறைவேறியதா? இல்லையெனில், உன்னை ராமனாக மாற்றிக் கொண்டு, உடனே சென்று அவளை அடை'எனச் சொன்னான்.
'அது மட்டும் என்னால் முடியாது. நான் ராமனின் உருவை எடுத்துக் கொண்டால், அவனது நற்குணங்கள் அனைத்தும் என்னுள்ளும் வந்து, நான் எந்கவொரு தீய செயலும் செய்ய முடியாமல் போய்விடும். நீ ராமனைக் கொன்றாலொழிய, எனது ஆசைகளைப் பூர்த்தி செய்ய இயலாது' என ராவணன் பதிலிறுத்தான்.
'நீ எனது சகோதரன் ஆனபடியால், உனக்கு உதவி செய்வது என் கடமை. தைரியமாயிரு. ராம, லக்ஷ்மணர்கள் உட்பட அனைத்து வானரர்களையும் நான் கொன்று தின்று விடுகிறேன்' எனச் சொல்லி, அங்கிருந்து கிளம்பினான்.
ராமனின் சேனையை அவன் தாக்கத் தொடங்கியதும், ஷரபன், கோவக்ஷன் என்பவருடன் நான்கு வானரர்கள், அவன் மீது பெரிய மலைக் கற்களை எறிந்தனர். அவற்றையெல்லாம் தனது அம்புகளால் தூளாக்கி, அந்த வானரர்களை ஆகாயத்தில் வீசி எறிந்தான். கையில் அகப்பட்ட வானரங்களை எல்லாம் பிடித்துத் தன் வாய்க்குள் இட்டு, விழுங்கினான். அவர்களில் ஒரு சிலர் அவனது காதுகள், மூக்கு வழியே தப்பிப் பிழைத்து ஓடினர்.
சுக்ரீவன் ஒரு பெரிய மலையை அவன் மீது எறிய, அதையும் கும்பகர்ணன் உடைத்து நொறுக்கினான். சுக்ரீவனைத் தனது கால்களுக்குள் அழுத்தி நெறுக்கி, அவனைப் பம்பரம் போல் சுழற்றினான். சுக்ரீவனை பொடிப் பொடியாக்கப் போகும் நேரத்தில், அவன் தந்திரமாகத் தப்பி, வானத்தில் பறந்து விட்டான். ஆனால், தனது பெரிய கைகளை ஆகாயம் முழுவதுமாகப் பரப்பி, சுக்ரீவனை மீண்டும் கீழே இழுத்து தனது குதத்துக்குள் அடைத்தான். அதிலிருந்து கிளம்பிய துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல், எப்படியோ மீண்டும் தப்பி கும்பகர்ணனின் மூக்கையும், காதுகளையும் அரிந்துவிட்டு, அவன் அறியா வண்ணம் வானத்தில் பறந்து மறைந்தான். உடலளவில் மிகவும் சேதப்பட்டு, ரத்தம் வழிய நின்ற கும்பகர்ணன், அன்றையப் போரில் வென்று விட்டோம் என நினைத்து, ராவணனின் அரண்மனைக்குத் திரும்பினான்.
கும்பகர்ணன் திரும்பிவந்த நிலை கண்டு ராவணன் மிகவும் மனம் வெதும்பினான். அவனைப் பார்க்க விரும்பாமல், ஒரு நாவிதனை அழைத்து, ஒரு கண்ணாடியை கும்பகர்ணன் முன் காட்டச் சொன்னான். அப்படியே அந்த நாவிதன் கண்ணாடியைக் காட்ட, அதில் தெரிந்த தனது சிதைந்த உருவைக் கண்டு வெகுண்ட கும்பகர்ணன், உடனடியாக அந்தக் குரங்குகளுடன் போரிடச் சென்றான்.மிகுந்த கோபத்துடன், கையில் அகப்பட்ட வானரங்களையெல்லாம் பிடித்துத் தின்றான். ராம, லக்ஷ்மணர்களை நோக்கிப் பாய்ந்தான். லக்ஷ்மணன் விட்ட அம்பைத் தன் கைகளாலேயே முறியடித்தான்.

[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.