Complete Faith On Sai Baba -Experience By Sai Devotee
நாம் சாயிபாபா மீது முழு நம்பிக்கையும் வைத்தால் அவர் நம்மை கைவிடுவது இல்லை. அவரே நம் கடவுள் , அன்பானவர், நமக்கு கருணை காட்டுபவர். இதோ ஒரு பக்தரின் அனுபவத்தைப் படியுங்கள்
மனிஷா-----------------------
ஓம் சாயி நாம நமஹா
நானும் என்னுடைய கணவரும் சிறிய நிறுவனம் ஒன்றில் பணி புரிபவர்கள். இரண்டுபேருமே பாபாவின் பக்தர்கள். எங்களுடைய வருமானமும் அதிகம் கிடையாது. நாங்கள் பல நாட்களாக நல்ல வேலை தேடிக் கொண்டு இருந்தோம். ஆனால் எதுவும் சரிவரக் கிடைக்கவில்லை. அதனால் மனம் தளர்ந்து இருந்தோம்.
எங்களுடைய மகனை பள்ளியில் சேர்க்க வேண்டி இருந்தது. நாங்கள் இருந்த இடத்தின் அருகிலேயே நல்ல பள்ளி இருப்பதாக எங்களுடைய நண்பர் மூலம் அறிந்தோம். அந்தப் பள்ளியின் பெயர் என்ன தெரியுமா ? ''ஸ்ரீ சாயி பப்ளிக் ஸ்கூல்''. அதில் இடம் கிடைப்பது மிகக் கடினமாம். மேலும் அங்கு சேர்த்தால் அவன் அங்கேயே தங்கி படிக்க வேண்டும். ஆசிரியர்கள் கண்டிப்பானவர்கள். அங்கு சேர்க்கும் குழந்தைகளை வருடத்திற்கு ஒரு முறைதான் அதாவது வருட முடிவு விடுமுறையில்தான் வீட்டிற்கு அனுப்புவார்கள். எங்களுக்கு அதில் எங்களுடைய பிள்ளையை சேர்க்க விருப்பம் இல்லை. ஆனால் எங்களுடைய நண்பர் எங்களை கட்டாயப்படுத்தி வந்தார்.
ஆகவே என்னுடைய நண்பருடன் சனிக்கிழமை அந்த பள்ளிக்கு சென்று பார்த்தோம். அந்தப் பள்ளியில் சாயிபாபாவின் பெரிய ஆலயம் இருந்தது. அதில் தியான மண்டபம் மற்றும் பாபாவின் பல படங்கள் இருந்தன. அதற்குள் சென்றபோது நான் சீரடியில் இருந்ததைப் போன்ற உணர்வு வந்தது.
அதனால் மனம் மகிழ்ந்த நாங்கள் எங்களுடைய பிள்ளைக்காக அங்கிருந்த அலுவலக நிர்வாகியுடன் பேசினோம். ஆனால் இடம் இல்லை என்று கூறி விட்டார்கள். காரணம் அவன் SSC பிரிவில் படித்து இருந்தான். அவர்கள் ICSE பிரிவை சேர்ந்த மாணவர்களையே எடுத்துக் கொள்வார்களாம்.
எங்களுடைய நண்பர் ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் பெரிய வேளையில் இருந்தார். அவர் எத்தனையோ முயன்றும், அந்த பள்ளி மேல் நிர்வாகியைப் பார்த்துப் பேசியும் கூட எங்களுடைய பிள்ளைக்கு அந்தப் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை. ஆகவே எங்களுடைய ஆசை நிறைவேறாமல் போயிற்று .
திடீர் என ஒரு நாள் நாங்கள் சீரடிக்கு கிளம்பிச் சென்றோம். அந்த நேரம் விடுமுறை நேரமாக இருந்தும் எங்களுக்கு எப்படியோ ரயிலில் டிக்கெட் கிடைத்து விட்டது. அது சாயிபாபாவின் அருள்தான். காரணம் 10 அல்லது 15 நாட்களுக்கு முன்னால் முயன்றால் கூட அந்த நேரத்தில் டிக்கெட் கிடைக்காது. எங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ஆகவே நானும் என் கணவரும் மட்டும் சீரடிக்கு சென்றோம்.
சனிக்கிழமை காலை பத்து மணிக்கு சென்று தரிசன வரிசையில் நின்றோம். இரண்டு மணி நேரம் நின்ற பின் உள்ளே செல்ல முடிந்தது. என் மனதில் வருத்தம். எனக்கு எதுவுமே சரியான நேரத்தில் நடக்கவில்லையே என மனதுக்குள் துக்கமாக இருந்தது. மனதில் அமைதி இன்றி இருந்தேன். சாயிபாபாதான் எனக்கு உதவ வேண்டும் என நினைத்தேன். உள்ளே நுழைந்து நல்ல தரிசனம் செய்து விட்டு வந்தோம். மனம் அமைதியாக இருந்தது. ஏதோ புதிய சக்தி கிடைத்தது போல இருந்தது. என் பிள்ளைக்கு சாயிபாபாவின் பள்ளியில் இடம் கிடைக்கவில்லை என்பதினால் வேறு ஸ்கூலில் சேர்த்தோம். இடம் கிடைத்தது. ஆனால் கட்டணம் இன்னமும் செலுத்தாமல் சோம்பேறித்தனமாக இருந்தோம்.
அடுத்த சனிக்கிழமை வந்தது. என் நண்பர் எங்களை தொலைபேசியில் தொடர்ப்புக் கொண்டு உடனே அந்த சாயி பள்ளியின் நிர்வாகி எங்களை என் பிள்ளையுடன் வரச் சொன்னதாகக் கூறினார். நாங்கள் அவரை சென்று பார்த்ததும் ஒரு நுழைவு தேர்வை எழுதுமாறுக் கூறினார். அதில் என்னுடைய பிள்ளை நல்ல மார்க் எடுக்கவில்லை. நாங்கள் எங்கள் பிள்ளையை அந்த பரீட்சைக்கு நல்லபடியாக தயார் செய்யாமல் அழைத்து வந்ததற்கு அவரிடம் மன்னிப்புக் கேட்டோம். ஏதாவது செய்து பள்ளியில் என் மகனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளுமாறும் கெஞ்சினோம். முதலில் அவர் எங்கள் மீது கோபமுற்று எங்களை கடிந்து கொண்டாலும் எங்கள் பிள்ளையுடன் தனியாக அரை மணி நேரம் பேசினார்.
அதன் பின் அவள் எங்களுடைய குழந்தைக்கு அட்மிஷன் தருவதாகவும் தானே அவனை நல்ல முறையில் படிக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆனால் எந்த காரணம் கொண்டும் அவள் எங்கள் குழந்தையை நடத்தும் விதத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என உத்திரவாதத்தைப் பெற்றுக் கொண்டு இடம் தந்தாள். நாங்கள் இந்த சனிக்கிழமைக்கு முதல் சனிக்கிழமைதான் சீரடிக்கு சென்றோம். அங்கு என்னுடைய பிள்ளையை நீதான் காப்பாற்றி நல்லபடியாக படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பாபாவிடம் வேண்டிக் கொண்டோம். அவரோ எங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவது போல அதற்கு அடுத்த சனிக்கிழமையே தன்னுடைய பள்ளியிலேயே அவனை சேர்த்துக் கொண்டு எங்களுடைய ஆசையை நிறைவேற்றி உள்ளார் என்பதை என்ன என்று கூறுவது? நடக்க முடியாததை நடத்திக் காட்டுபவர் சாயிபாபாதானே!
ஸ்ரீ சாயி நாதாய நமஹா
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment