Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 11
சீரடி சாயிபாபாவின் அருள் - அனுபவங்கள் - பாகம் 11
அன்பானவர்களே
பாபா நமக்கு என்றுமே துணையாக உள்ளார் என்பதை பாபாவின் குழந்தைகள் எப்போதுமே உணர்ந்து கொண்டு இருப்பார்கள். அதுவும் சோதனைகள் வரும்போதெல்லாம் அவர் தம்முடனேயே இருப்பதை உணர்வார்கள். இதற்கு ஏற்ப வந்துள்ள இந்த இரண்டு அனுபவங்களைப் படியுங்கள்
மனிஷா
நான் இருபத்தி வயதான தொழில் நிபுணர். 1999 ஆம் ஆண்டு முதல் பாபாவின் பக்தனானவன். எனக்கு ஒரு அற்புதமான அனுபவம் 2010 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
ஒருமுறை பாபா மீதான நம்பிக்கைகளை இழக்கத் துவங்கினேன். அவர் மீதும் சந்தேகம் எழுந்தது. அப்படிப்பட்ட நாம் அவர் மீது நம்பிக்கை இழக்கும் நேரங்களில் தன்கையை விட்டு விலகி விட அனுமதிக்காமல் தான் நம்முடனேயே உள்ளதை நமக்கு பாபா காட்டுவார் என்பதே உண்மை .
நான் ஒருமுறை அமெரிக்கா செல்லுவதற்காக விசா எடுத்தேன். அடுத்த நான்கு நாட்களுக்குப் பின் நான் பயணத்தை துவக்க வேண்டும். அந்த விஜயத்தின்போது ஜெர்மனிக்கும் சென்று வர எண்ணினேன். அதற்காக நான் பெங்களூரில் இருந்த VFS சிற்குச் சென்று அங்கு விண்ணப்பத்தைத் தந்தப் பின் அவர்கள் கொடுக்கும் தேதியில் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு நேர்முக தேர்வுக்குச் செல்ல வேண்டும். அதில் தேர்வு பெற்றால்தான் ஜெர்மனிக்கு செல்ல விசா கிடைக்கும்.
எனக்கு மனதில் ஒரு வித பயம் இருந்து கொண்டே இருந்தது. எதோ தடங்கல் ஏற்பட உள்ளது என மனம் கூறியது. நான் VFS சிற்குச் சென்று அங்கு வரிசையில் அமர்ந்தேன். என்னை அவர்கள் கூப்பிடும் போது மட்டுமே நான் செல்ல வேண்டும். அப்போது அங்கு வந்த பலரையும் மிகவும் கீழ்த்தரமாக அங்கிருந்த ஊழியர்கள் நடத்தினார்கள். அவமானப்படுத்தினார்கள். அவர்கள் மீது எரிந்து விழுந்தார்கள். கடுகடுப்பாகப் பேசினார்கள். அவற்றைப் பார்த்த எனக்கு கோபம்தான் வந்தது. என் முறை வந்தது. என்னைக் அழைத்தவர் என்னுடன் மிகவும் அன்பாகப் பேசினார். என்னுடைய விண்ணப்பங்களில் சில குறைபாடுகள் இருந்ததைக் குறித்துக் கேட்டார். அவற்றுக்கு விளக்கம் அளித்தேன். அதன் பின் உள்ளே சென்றுவிட்டு வந்தார். எனக்கு மறு நாள் நேர்முக தேர்விற்காக சென்னை செல்ல வேண்டும் என்றார்கள்.
வீடு சென்றப் பின் அன்று இரவு நடந்தவைகளைப் பற்றியும் என்னுடைய மனதில் இருந்த பயத்தைப் பற்றியும் என்னுடைய நண்பரிடம் கூறினேன். அவள் பாபாவின் தீவீரமான பக்தை. அவள் எதற்குமே கவலைப்பட வேண்டாம் என்றும் பாபா தானாகவே வந்து எனக்கு யார் மூலமாவது ஒரு படத்தை தருவார் என்றும் அனைத்தும் நல்ல விதமாகவே முடியும் என்றும் தனது மனதில் தோன்றியதைக் கூறினாள். நானும் பல வருடங்களாக அதைதான் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளேன் , சரி அவரையே நம்புவோம் என்று நினைத்தபடி பாபாவிடம் நல்லதே நடக்கட்டும் என வேண்டிக் கொண்டு படுத்து உறங்கினேன். மறுநாள் விடியற்காலை விமானம் மூலம் சென்னை சென்றேன்.
அங்கு என்னை யாராவது சந்தித்து பாபாவின் படத்தை தருவார்களா என எதிர்பார்த்தேன். யாரும் வரவில்லை. ஏமாற்றமே மிஞ்சியது. சரி என ஜெர்மன் தூதரகத்திற்குச் சென்றேன். அங்கு நான் சுமார் 30 வயதுடைய பெண்மணியை சந்தித்தேன். அவள் என்னுடைய விண்ணப்பப் படிவங்களை வாங்கிப் பார்த்து நான் செய்து வரும் வேலைகளைப் பற்றிக் கேட்டு அறிந்து கொண்டப் பின் என்னை வெகுவாகப் புகழ்ந்தாள். ஆகவே அனைத்தும் பாபாவின் அருளினால் நல்லபடியாக முடிந்து விடும் என நினைத்தேன். ஆனால் எனக்கு சோதனை வரப்போகின்றதை நான் உணரவில்லை.
என்னுடைய காகிதங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் திடீரென சந்தேகம் அடைந்து உள்ளே சென்று யாருடனோ பேசிவிட்டு வந்தாள். என்னுடைய பயண டிக்கெட் மற்றும் ஜெர்மனிய கம்பனியில் இருந்து வந்திருந்த அழைப்பு கடிதம் போன்றவற்றில் குளறுபடிகள் இருந்தனவாம். சாதாரணமாக ஜெர்மனிக்கு செல்ல வேண்டும் என்றால் அங்கு தங்கும் வசதி, அழைப்புக் கடிதம், இன்சுரன்ஸ், பயண தேதிகள் மற்றும் பயணத்திற்கான காரணம் போன்ற அனைத்துமே சரியாக இருந்தால்தான் விசா கிடைக்கும். ஆனால் என்னுடைய விண்ணப்பப் படிவங்களில் இணைத்து இருந்த சிலவற்றில் குறைகள் இருந்தன.
ஆகவே அவர்கள் என்னை புதிய டிக்கெட் மற்றும் இன்ஷூரன்ஸ் எடுக்குமாறும் அதை கொண்டு வந்து காட்டினால்தான் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்கள். நானோ பெங்களூரில் அனைத்தையும் செய்து உள்ளேன், மேலும் பெங்களூரில் VFS சில் அவர்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள், நான் வேறு டிக்கெட் மற்றும் இன்சுரன்ஸ் எடுத்து புதிய விண்ணப்பத்தை மறு நாள் தரவேண்டும் என்றால் எனக்கு சரியான நேரத்தில் என்னுடைய பாஸ்போர்ட் கையில் கிடைக்காதே, பின் எப்படி என்னால் குறிப்பிட்ட நாளில் அமெரிக்காவிற்கு செல்ல முடியும் என பலவாறு அவர்களுடன் வாதாடிப் பார்த்தேன் அவர்கள் அதை ஏற்கவில்லை. அவர்கள் கேட்டதை கொண்டு வராவிடில் விசா கிடைக்காது என்று கூறி விட்டார்கள்.
நான் ஏமாற்றத்துடன் வெளியில் வைதேன். சுமார் 100 அடி தூரம்தான் நடந்து இருபேன். அந்த தூதரக காவலாளி ஓடி வந்து என்னை உள்ளே யாரோ அழைக்கின்றார்கள் எனக் கூறினான். நான் அது பாபாவாகவே இருக்கும் என நினைத்துக் கொண்டு உள்ளே சென்றேன். அங்கோ யாரும் இல்லை. அனைவருமே தாம் அழைக்கவில்லை என்றே கூறினார்கள். காவலாளியிடம் சென்று யார் என்னை அழைத்தார்கள் எனக் கேட்டதற்கு உள்ளே இருந்தவர்கள்தான் அழைத்தார்கள், அதற்கு மேல் எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டான். நானும் அவனை சென்னையில் இருந்த VFS சிற்குச் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு வந்து விட்டேன். என்னை யார் உள்ளே அழைத்தார்கள்? தெரியவில்லை.
என்னுடைய நண்பருக்கு மீண்டும் டெலிபோன் செய்து பாபா எனக்கு உதவவில்லையே என வருந்தினேன் . அவளோ கவலைப்படாதே அவர் நிச்சயம் உதவுவார் எனக் கூறியபோது வேறு தொலைபேசி வந்தது. அந்த எண் எனக்கு பரிச்சயமாக இல்லை என்பதினால் எடுக்க வில்லை. ஆனால் மீண்டும் மீண்டும் தொலைபேசியில் அதே எண் வரவே என் நண்பரின் பேச்சை அப்படியே வைத்துக் கொண்டு வந்திருந்த தொலைபேசி எண்ணில் பேசினேன். அதில் ஒரு பெண்மணியே பேசினார். நான்தான் காலையில் விசாவிற்கு வந்தவரா எனக் கேட்டு விட்டு எனக்கு ஆறுதல் கூறி உடனே ஒரு புதிய டிக்கட்டை பிளாக் செய்து அதன் பிரதியை விண்ணப்பத்துடன் கொண்டு வருமாறும் அனைத்தும் சரியாகிவிடும் எனவும் கூறி விட்டு ஆனால் தான் யார் என்பதைக் கூறாமல் தொலைபேசியை கட் செய்து விட்டாள்.
நானும் அவள் ஆலோசனைப்படி புதிய டிக்கட்டிற்கு ஏற்பாடு செய்து அதன் பிரதியை எடுத்துக் கொண்டு விண்ணப்பத்துடன் உடனே கிளம்பிச் சென்னையில் உள்ள VFS சிற்குச் சென்றேன். அங்கு சென்றால் அதில் நான் DD யை இணைக்கவில்லை என்றுக் கூறினார்கள். நான் அதை மறதியாக ஜெர்மன் தூதரகத்தில் வைத்துக் கொண்டு விட்டார்கள் என்றுக் கூறி விட்டு மீண்டும் அதை எடுத்து வர தூதரகத்துக்குச் சென்றேன். அங்கு சென்றதும் அந்தப் பெண்மணி 'கவலைப்படாதே நான் VFS சில் பேசிவிட்டேன். நீ உள்ளே போ' என அங்கு இருந்த மேல் அதிகாரியிடம் அனுப்பினாள். அவர் என் பெயரைக் கூறி அழைத்து என்னைப் பற்றிய அனைத்து விவரங்கள் தனக்குத் தெரியும் என்றும் கூறி விட்டு விண்ணப்பத்தை கவுண்டரில் சென்று கொடுத்து விடுமாறு கூறினார்.
அங்கோ அவர்கள் அனைத்தையும் பார்த்தப் பின் இன்னமும் சிறிய சிக்கல் உள்ளதாகவும், இன்ஷூரன்ஸ் ஒரு நாளைக்குக் குறைவாக உள்ளதினால் விசா கிடைக்குமா இல்லையா என்பது தெரியாது என்றாலும் முயன்று பார்க்கலாம் எனக் கூறி அந்த விண்ணப்பத்தை வாங்கி வைத்துக் கொண்டார். நானும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு விண்ணப்பத்தை கொடுத்து விட்டு வந்து விட்டேன்.
வீட்டிற்கு வந்ததும் என் தொலைபேசியில் காலையில் வந்திருந்த எண்ணை பார்த்து அந்த பெண்மணிக்கு டெலிபோன் செய்து அவள் செய்த உதவிக்கு நன்றி கூறுமாறு கூறினார். நானும் தொலைபேசியில் அவளை தொடர்பு கொண்ட போது அதில் பேசியவள் தான்தான் என்னுடைய விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டதாகக் கூறினாள். மேலும் அவளிடம் நானும் என் நண்பரும் பாபாவின் பக்தர்கள் எனக் கூறிக் கொண்டபோது அவள் தானும் பாபாவின் பக்தை எனவும் அதனால்தானோ என்னவோ பாபா எனக்கு உதவ அவளை தூண்டி இருந்தாரோ என்னவோ என நினைத்தாள். எனக்கு கண்களில் நீர் நிறைந்தது. அவளுக்கு நன்றி கூறினேன்.
அவளிடம் இன்ஷுரன்ஸ் பற்றிய குறையைக் கேட்டபோது அவள் கவலைப்படாதீர்கள் .மீண்டும் இன்னொருமுறை ஒரு டிக்கெட் புக் செய்து அதன் பிரதியை வாயிலில் உள்ள காவலாளியிடம் தந்து விட்டால் தான் அதை பெற்றுக் கொண்டு ஆவன செய்வதாக உறுதி அளித்தாள். நானும் உடனே ஹோட்டலுக்குச் சென்று அதை செய்து முடித்தேன். நான் மனதில் முழுமையாக களைப்படைந்து இருந்தேன்.
மறுநாள் பெங்களூருக்கு கிளம்பிச் சென்றேன். என் நண்பர்களிடம் அனைத்தையும் கூறினேன். அவர்கள் ஆச்சர்யம் அடைந்தார்கள். மறுநாள் மதியம் உணவு அருந்தும்போது தூதரகத்தில் இருந்து அந்தப் பெண்மணியின் டெலிபோன் வந்தது. அவள் விசாவையும் பாஸ்போர்டையும் அனுப்பி விட்டதாகவும் அது மறு நாள் கிடைத்து விடும் எனவும் கூறினாள். நான் பாபாவிற்கு மனதார நன்றி கூறினேன். அவர் தன்னை நம்பியவர்களுக்கு எத்தனை சோதனைகளைத் தந்தாலும் முடிவாக அனைத்தையும் நல்லதாகவே நடத்திக் கொடுக்கின்றார். அவருடைய வழிமுறைகள் நமக்குப் புரியவில்லையே என்றாலும் அவர் நம்மை கைவிடுவது இல்லை.
சாய் வருண் பாபா நம் குடும்பத்தினர் மீது நம்மைவிட அதிகமாக அக்கறை கொண்டுள்ளார்
நான் ஒரு சாயி பக்தன் . தயவு செய்து என்னுடைய பெயரை வெளியிடாதீர்கள் எனக் கூறும் ஒரு அன்பர் எழுதி உள்ள தனது அனுபவம்.
நானும் என் கணவரும் என்னுடைய ஐந்து வயதுக் குழந்தையுடன் பிரிட்டன் நாட்டிற்கு வந்தோம். அங்கு என் கணவர் ஒரு வேலையில் இருந்தார். அங்குள்ள பள்ளிகளில் நமது குழந்தைகளை சேர்க்க வேண்டும் எனில் முதலில் அந்த நாட்டு பள்ளி தலைமை அலுவலகத்தில் நம்முடைய விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்கள் நாம் விரும்பியபடியான குழந்தைக்கான பள்ளி உள்ளதா என ஆராய்ந்தப் பின் நமக்கு தகவல் தருவார்கள். எங்களிடம் சொந்த வண்டி இல்லாததினால் பொது வாகனத்தில்தான் பள்ளிக்கு செல்ல வேண்டும். ஆனால் பள்ளி வெகு தூரத்தில் இருந்ததினால் வீட்டின் அருகில் உள்ள பள்ளியில் இடம் வேண்டும் என்பதற்காக காத்திருக்கும் பட்டியலில் குழந்தையின் பெயரை சேர்த்தோம். ஏற்கனவே பள்ளிகள் திறந்து விட்டதினால் ஒரு வருட படிப்பு வீணாகிவிடுமே என கவலைப்பட்டேன்.
ஒரு நாள் என் வீட்டின் அருகில் இருந்த பள்ளியில் வேலை பார்த்து வந்தவர் அருகில் உள்ள இன்னொரு பள்ளியில் இடம் இருப்பதாகக் கூற நானும் அங்கு சென்று பார்த்ததில் இடம் இருந்தது. பாபாவிற்கு நன்றி கூறினேன். ஆனால் பாபா நம்மை எப்போதும் காத்து வருபவர் அல்லவா. அந்த பள்ளியைப் பற்றிய விவரங்களை அன்று மாலையே நான் இணையத்தளத்தில் பார்த்து அதிர்ந்தேன். அது நல்ல பள்ளி அல்ல, மிகவும் மோசமான பள்ளிக்கூடம் என்பதை அறிந்தேன். நல்ல வேளை பிழைத்தேன் என நினைத்தேன். வேறு பள்ளி உள்ளதா எனப் பார்த்தபோது ABC என்ற ஒரு பள்ளி பற்றிய விவரம் கிடைத்தது. அதில் இடமும் இருந்தது என்பது இணைய தளத்தில் தெரிந்தது. அதில் இடம் கிடைக்காதா என ஏங்கினேன். மறுநாள் அந்த நாட்டு பள்ளி தலைமை அலுவலகத்தில் இருந்து என் குழந்தைக்கு எதாவது ஒரு பள்ளியில் இடம் கிடைத்ததா எனக் கேட்டார்கள். நானும் தைரியமாக ABC பள்ளியில் இடம் உள்ளதே, அதில் தர முடியுமா எனக் கேட்க அவர்கள் அந்தப் பள்ளியில் தொடர்ப்பு கொண்டு பேசிவிட்டு உடனே என் குழந்தைக்கு அங்கு இடம் தர ஏற்பாடு செய்தார்கள். அங்கு செல்ல நல்ல வண்டி சேவையும் கிடைத்தது. அனைத்திற்கும் பாபாவின் அருளே காரணம். பாபாவிற்கு கோடி கோடி ப்ரணாம் செய்கின்றேன். இப்போது என்னுடைய மகள் அந்த ABC பள்ளிக்கு செல்கிறாள்.
நமக்கு எது நன்மையோ அதை பாபா நிச்சயமாக செய்வார்.
நமக்கு எது நன்மையோ அதை பாபா நிச்சயமாக செய்வார்.
(Translated into Tamil by Santhipriya)
Loading
0 comments:
Post a Comment