Wednesday, November 24, 2010

My first blessed visit to Shirdi-Experience By Neeraja

சீரடி  யாத்திரையில் நீரஜாவின்  முதல் அனுபவம்

அன்பானவர்களே,
பாபா தின வாழ்த்துக்கள்.
இன்று நீரஜாவின் அற்புதமான சீரடி அனுபவத்தை வெளியிட்டு உள்ளேன். படித்து மகிழவும்.
ஜெய் ஸ்ரீ ராம்
மனிஷா
----------------------
நீரஜாவின் அனுபவம்
மனிஷாஜி, சாயிராம்.
இந்த கடிதம் மிகவும் நீளமாக இருந்தால் அதை தணிக்கை செய்து சுருக்கிக் கொள்ளுங்கள் .
நாங்கள் இந்தியாவுக்கு செல்ல இருந்ததே பாபாவின் மகிமைதான். நாங்கள் எங்களுடைய பெற்றோர்களுக்கு இரண்டு பிள்ளைகள், இரண்டு பெண்கள். என் தந்தையின் மரணத்துக்குப் பின்னால் ( அதுவும் பாபாவின் மகிமையே. அந்த தனிக் கதையை பிறகு கூறுகிறேன்) நாங்கள் இந்தியாவுக்கு செல்ல ஏற்பாடு ஆனபோது என்னுடைய இரண்டு சகோதரர்களும் கடைசி நேரத்தில் அதில் இருந்து பின் வாங்கி விட என்னுடைய தாயார் என்னை அவளுடன் செல்லுமாறு கேட்டுக் கொண்டாள். பாபாவே என்னையும் என்னுடைய தாயாரையும் இந்தியாவுக்கு மட்டும் அல்ல, சீரடிக்கும் வர ஏற்பாடு செய்து இருந்திருக்கின்றார் என்பதே அவர் லீலை அல்லவா?
நான் சீரடிக்குச் செல்லும் முன் ஹைதிராபாத்தில் இருந்த என்னை ஸ்ரீவள்ளி என்ற என்னுடைய நண்பியும் என் சகோதரியும் பாபாவின் பக்தர் ஒருவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் எனக்கு பாபா கால்களை மடித்து வைத்துக் கொண்டு அமர்ந்து இருப்பது போன்ற பாபாவின் பெரிய படத்தை பரிசாகத் தந்தார்.  அந்தப் பெரிய படத்தைப் பார்த்து நான் அழுதுவிட்டேன். அந்த மாமா என்னிடம் பாபா உன்னை ஆசிர்வதிக்கவே உன்னிடம் வந்துள்ளார் என்றார். நான் என்ன சொல்லட்டும்?
அன்றே என்னுடைய சகோதரியும்  சீரடியில் இருந்து அவள் வாங்கி வந்திருந்த சாயி சாரம் என்ற தெலுங்கு புத்தகத்தைத் தந்தாள். அதைத் தந்துவிட்டு 'இதை நீ ஏன் உன்னுடைய மகனுக்கும் மருமகளுக்கும் தரக் கூடாது?. நீரஜா, பாபா உன்னிடம் வர ஆசைப்படுகிறார்' என்றாள். அதைக் கேட்ட என் மகிழ்ச்சிக்கு எல்லை இன்றிப் போனது. அவரைக் காண சீரடிக்குச் செல்லும் முன்னரே இரண்டு பொருட்களை ஒரே நாளில் கிடைக்க வைத்த பாபாவின் லீலைதான் என்னே. நன்றி தந்தரி.......நன்றி!!!!!!!!!உன்னை நான் நேசிக்கின்றேன் !!!!!!!
அடுத்து நான் சீரடிக்கு என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரருடன் செல்ல ஏற்பாடு செய்து கொண்டேன். அவனோ எதோ காரணங்களினால் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான் . முடிவாக ஜூலை மாதம் பதிமூன்றாம் தேதியன்று என் அத்தையுடன் ஒரு பஸ்ஸில் சீரடிக்கு கிளம்பினேன். பாபாவின் உடையை ஹைதிராபாத்தில் இருந்து எனக்கு பாருல் தீதி ( தீதி என இந்தியில் உள்ள இந்த வார்த்தையின் அர்த்தம் சகோதரி) என்பவள் அனுப்பி இருந்தாள். அதைக் கொண்டு செல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். நான் இருபத்தி ஒரு வருடம் பொறுத்து என்னுடைய கணவர் சாயிநாத் மற்றும் பிள்ளைகள் இல்லாமல் மீண்டும் இந்தியாவுக்கு வருவேன் என நான் எதிர் பார்க்கவில்லை.பாருல் என்னை   சீரடியில் குறிப்பிட்ட ஒருவரை பார்க்கச் சொல்லி இருந்தாள். அவரிடம் பாபாவின் உடைகளை தந்து அதை பாபாவுக்கு அணிவிக்குமாறு கேட்டுக்கொள்ளுமாறு  கூறி இருந்தாள். மறுநாள் பதினான்காம் தேதி. ஆலயம் சென்றோம். அங்கு நுழைந்ததும்  பாபா  நடந்த இடத்தை தடவி கண்களில் ஓற்றிக் கொண்டேன்.
பருல் கூறிய மனிதரிடம் அந்த உடையை பாபாவுக்கு அடுத்த நாளான வியாழன் கிழமை அணிவிக்க முடியுமா எனக் கேட்டதற்கு அவர் அடுத்தவார வியாழன் கிழமைவரை பாபாவுக்கு அணிவிக்க பலரது உடைகளும் புக் ஆகி விட்டதாகவும் ஆகவே அடுத்த வாரம் வரை  அதை அணிவிக்க முடியாது என்று கூறிவிட்டு அதைப் பெற்றுக் கொண்டார். நானோ அடுத்த வாரம் வரை ஊரில் இருக்க முடியாதே எனக் கூறினேன். அவர் என்னால் ஒன்றும் செய்ய முடியாதே  எனக் கூறிவிட்டு சென்று விட்டார். நான் மனதில் அழுதுகொண்டே அறைக்குத் திரும்பினேன். பருலுக்கு போனில் செய்தியைக் கூற அவளும் அதை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு இன்னொருவரிடம் தருமாறு இன்னொருவரின் குறிப்பைத் தந்தாள். எனக்கோ பாபா அந்த வார வியாழைக் கிழமையே நான் கொண்டு சென்ற உடையை உடுத்திக் கொள்ள வேண்டும் என மனதில் ஆசை இருந்தது. ஆகவே மீண்டும் பருல் கூறிய இன்னொருவரை சந்தித்தேன். அவரும் முதல் ஆள் கூறியதையே- பாபாவுக்கு அடுத்த நாள் அந்த உடைப் போட முடியாது- எனக் கூறினார்.
அப்போது நான் எதேர்ச்சையாக காலண்டரைப் பார்த்தேன். மறுநாள் வியாழன் கிழமை பதினைந்தாம் தேதி....ஆஹ என்னுடைய தந்தையின் பிறந்த நாள். எனக்கு என்ன ஆயிற்றோ தெரியாது. நான் துணிவுடன் அங்கிருந்த மேல்  அதிகாரியிடம் சென்று என்னுடைய தந்தையின் பிறந்த நாள் அன்று நான் கொண்டு சென்ற உடையை பாபாவுக்கு அணிவிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவர் தனது உதவியாளரான குல்கர்னி என்பவரை அழைத்து பாபாவின் உடையை அடுத்த  நாள் பாபாவுக்கு போடச் சொல்லி உத்தரவு தந்தார். மறு நாள் எப்போது போடப் போகிறீர்கள் எனக் கேட்டபோது தூப்  ஆரத்திக்கு போடுவதாக உறுதி கூறினார். என் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பாபாவின் லீலைதான் என்னே. புதன் கிழமை நான் தந்த உடையை பாபா அடுத்த நாளான வியாழன் கிழமை போட்டுக்கொள்ளப் போகின்றார்.
அடுத்த நாள் வியாழன் கிழமை. காக்கட ஆரத்திக்குச் சென்றப் பின் தூப ஆரத்திக்குச் சென்றேன். பாபா நான் தந்திருந்த உடையில் ஜொலித்தார். அவரை கட்டி அணைத்து  முத்தமிட மனம் துடித்தது. ஆரத்தி துவங்க நானும் ஆரத்திப் பாடலை பாடத் துவங்கினேன். திடீரென ஒரு கறுப்புப் பூனை அவர் பீடத்தை நோக்கிச் சென்றதைக் கண்டேன். அது பாபாவாகவே இருக்க வேண்டும் என் எண்ணிக் கொண்டு அதைப் பற்றி எனக்கு அருகில் நின்று இருந்தப் பெண்மணியிடம் இந்தியில் கூறினேன். அவளோ அந்தப் பூனை எப்படி பாபாவாக இருக்க முடியும் என்றாள். அடுத்த நிமிடம் பாபாவின் பீடத்தை அடைந்தப் பூனை மறைந்துவிட்டது. நான் ஆனந்தத்தில் கூத்தாடினேன். அது சந்தேகம் இல்லாமல் பாபாவேதான். அவர்தான் மிருகங்களின் உருவிலும் தான் தனது பக்தர்களுக்கு காட்சி தருவேன் எனக் கூறி உள்ளாரே.
மாலை பல்லக்கி சேவாவை  பார்க்கச் சென்றேன். அதை படமும் எடுத்துக் கொண்டு இருந்தேன். சீரடியே திரண்டு வந்துவிட்டது போலக் கூட்டம் . நான் சாவடியின் வாயிலில் நின்று கொண்டு இருந்தேன். எனக்கு முன்னால்  பலர் அமர்ந்து இருந்தனர். என்னை சுற்றியும் பலர் கூட்டமாக இருந்தனர். அப்போது எவரோ என்னுடைய புடவையை எழுப்பாது  போல இருந்தது. குனிந்துப் பார்த்தால் ஒரு கரிய நிற நாய் என்னுடைய புடவையை நக்கிக் கொண்டு இருந்தது. இத்தனை பெரிய கூட்டத்தில் எங்கிருந்து வந்துள்ளது இந்த நாய்....ஒ;;;;;;;;; இது நாய் அல்ல பாபாவே நாய் உருவில் வந்துள்ளார் என உணர்ந்தேன்.
அங்கிருந்த மற்றவர்கள் அதைத் துரத்துமாறுக் கூறியபோது நான் அதைத் தடுத்தேன் . அது பாபாவே என்றேன் . அனைவரும் கேலி செய்தனர் . எனக்குப் பக்கத்தில் இருந்தவர் காவலாளியை அழைத்து அதை துரத்துமாறுக் கூற அவர் என்னைப் பார்த்தார். நானோ அதை தடவிக்கொண்டு இருந்ததைக் கண்ட காவலாளி 'அது ஒன்றும் செய்யாது சார், பரவாய் இல்லை  இருக்கட்டும்' என அடுத்தவரிடம் கூற அவரோ கூச்சல் எழுப்பினார். ஆகவே நான் குனிந்து அந்த நாயிடம் 'பாபா இந்த உருவில் வந்து உள்ளது நீதான்..இவர்கள் நம்ப மறுக்கிறார்கள் என்பதினால் இங்கிருந்து போய்விடு' என  வேண்டிக் கொள்ள அந்த நாய் அனைவரையும் தாண்டிக் குதித்து மறைந்து போயிற்று.
ஒரே நாளில் இரண்டு மிருகங்கள் உருவில் பாபா எனக்கு தரிசனம் தந்துவிட்டார் என எண்ணினேன்.
நான் சீரடியில் இருந்து கிளம்ப வேண்டிய கடைசி நாள்.  அன்று வெள்ளிக் கிழமை. சாயியின் விரத பூஜையை பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் என்னிடம் அதற்கான டிக்கட் இல்லை. ஆகவே காலை காக்கட  ஆரத்திக்குச் சென்றுவிட்டு வந்தேன். பேசாமல் உட்கார்ந்து இருந்தவள் மீண்டும் ஆலயத்துக்குள் நுழைந்தேன்.  பலர் வரிசையில் நின்று இருந்தார்கள். அவர்கள் கையில் டிக்கட் இருந்தது. எதற்கு எனக் கேட்க அபிஷேகத்துக்கு என்றார்கள். நான் அது எங்கு கிடைக்கும் எனக் கேட்க அவர்கள் சீக்கிரமாக சனி ஆலய நுழை வாயிலில் சென்று வாங்கி வருமாறு கூற நான் அங்கு சென்றேன். பலரும் டிக்கட்டை வங்கிக் கொண்டு இருந்தார்கள். நான் விரத பூஜைக்கான கட்டணம் எத்தனை எனக் கேட்க நூறு ரூபாய் என்றார்கள் . அபிஷேகத்துக்கான டிக்கட்டையும் வாங்கிக் கொள்ளுங்கள் பார்க்க அற்புதமாக இருக்கும் எனக் கூறி அவர் இரண்டு டிக்கட்டுகளை என்னிடம் தந்தார்.
மீண்டும் வரிசையில் போய் நின்றேன். பலரிடமும் ஒரே ஒரு டிக்கட்தான்  இருந்தது. என்னிடம் இரண்டு இருந்தது. அபிஷேகம் முடிந்ததும் அனைவரும் வெளியேறிக் கொண்டு இருக்க என்னிடம் இருந்த இரண்டாவது டிக்கட்டைப் பார்த்த காவலாளி சீக்கிரம் மேலே போங்கள் பூஜை ஆரம்பமாகிவிடும் எனக் கூறி என்னை அங்கு துரத்தினார். நானும் அவசரம் அவசரமாக மாடிக்குச் சென்றேன். என்ன அதிசயம். பூஜை ஆரம்பிக்க இருந்தது. பூசாரி எவரையோ எதிர்பார்த்து காத்திருந்தது போல அமர்ந்து இருந்தார். நான் சென்றதும் என்னைப் பார்த்தவர் பூஜையைத் துவக்கினார். நான் அமர்ந்துகொள்ள என் அருகில் இருந்தப் பெண்மணி அபிஷேகத்தைத் துவக்கினாள். என்னிடம் இருந்த பிரசாதத்தைப் பார்த்து அதை எங்கிருந்து கொண்டு வந்தாய் எனக் கேட்டாள். அங்கு என்னைத் தவிர வேறு எவரிடமும் பிரசாதம் இல்லை. அபிஷேகம் முடிந்து பூஜையும் முடிந்தது. ஒரே நாளில் இரண்டையும், அபிஷேகம் மற்றும் விரத பூஜையை என்னால் பார்க்க முடிந்தது பாபாவின் மகிமைதானே. பூஜை முடிந்ததும் அனைவருக்கும் விரத பூஜை  புத்தகமும் பிரசாதமும் தந்தேன். என் மனது மகிழ்ச்சியாக இருந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்தது.  உன்னை பாபா ஆசிர்வதித்து விட்டார் என பக்கத்தில் அமர்ந்து இருந்த ஒரு பெண்மணி கூறினாள். எனக்கு சீரடியில் இருந்து திரும்பி வர மனமே இல்லை.
நீரஜா 
(Translated into Tamil by Santhipriya) 

Loading

2 comments:

K.Varadarajan said...

dear manisha,
gone thro' each and very line of urs written in TAMIL. I know tamil and so whe I read it tears were rollig like beacause BABA HAD VISITED YOU many times snce ur departure from ur place with ur mother. It mans Baba is always with you as r hear is pre and pure.
WELL WISHES,
jai sainath
K.Varadarajan, Hartford, US.

Manisha.Rautela.Bisht said...

Sairam Varadarajan ji,Thanks for your message.This experiences posted here is of a Sai devotee Neeraja and not mine.She has shared it with us for all of us to read her Sai experience.
I shall pass on her your message.
Thanks for writing in
Jai Sai Ram
Manisha

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.