Wednesday, February 9, 2011

Blessing and Love of Baba-Experience by Sai devotee.

பாபாவின் அருளும் அன்பும்  

சாந்திப்பிரியா
 
அன்பானவர்களே,
இன்று சாயியின் ஒரு பக்தர் தன்னுடைய அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டு உள்ளார். அவர் அனுபவத்தில் இருந்து சாயிபாபாவை நம்புபவர்களை அவர் இரவும் பகலும் எப்படியெல்லாம் நம்மைக் காத்து அன்பு செலுத்தி வருகிறார் என்பது விளங்கும்
மனிஷா

அன்புள்ள மனிஷா
நான் ஒவ்வொரு சாயி பக்தர்களின் அனுபவத்தையும் படிக்கும்போது எல்லாம் அவருடன் நெருக்கத்தை அதிகரித்துக் கொண்டே வருகிறேன் என்பதை உணருகிறேன்.  அவருடன் எனக்கு கிடைத்த அனுபவத்தை எழுதாமல் இத்தனை   தாமதமாக எழுதுவதற்கு  பாபாவிடமே  மன்னிப்புக் கோருகிறேன். அவருடன் எனக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவங்களை கீழே தந்து உள்ளேன். 
2010 ஆம் ஆண்டு பிப்ருவரி மாதம்  சாயி விரதம் இருக்கத் துவங்கினேன். அதைத் துவக்கிய இரண்டாம் வாரமே  நான் கர்ப்பம் அடைந்தேன். எனக்கு திருமணம் ஆகி  இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தது. என் மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது.  எட்டு வாரம் ஆனதும் கர்ப்பம் அடைந்து உள்ளேனா என்பதை ஸ்கேன் செய்து  பார்க்க மருத்துவ மனை சென்றோம். அங்கு எடுத்த  டெஸ்டில்  குழந்தை வளரவேண்டிய அளவு இல்லை என்றும், மீண்டும் அடுத்த வாரம் வருமாறும் அப்போது மீண்டும் ஸ்கேன் செய்துவிட்டு என்ன செய்யலாம் என்பதை தெரிவிப்பதாகவும் கூறினார்கள். நான் மனம் உடைந்து போனேன். 
அடுத்தவாரம் நான் சென்று  ஸ்கேன்  செய்து கொண்டதும்  குழந்தை வளரவில்லை என்பதினால் DNC செய்து அதை எடுத்து விட வேண்டும் என்றும் கூறினார்கள்.  அது விரதத்தை ஆரம்பித்த பின் வந்த  ஏழாவது வாரம். ஆகவே மறுவாரம் சென்று DNC செய்து கொண்டேன். இது நடந்தது ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி.  அந்த சம்பவத்தினால் நான் முழுமையாக மனம் உடைந்து இருந்தேன்.
அமெரிக்க மருத்துவமனைகளில் அப்படி  செய்தப் பின் உங்களுக்கு தங்களுடைய வருத்தத்தை  தெரிவிக்கும் வகையில் ஒரு கார்டு அனுப்புவார்கள். மேலும்  எடுத்த பாகத்தை எரிக்க வேண்டிய இடத்தையும் கூறி விட்டு வெளியில் எடுத்த  இறந்து விட்ட குழந்தையின் நினைவுக்காக அதன் சிறிய பாகத்தை நாற்றம் அடிக்காமல் பதப்படுத்தி  சீல் போட்டு  கார்டுடன் தருவார்கள்.  அதை உங்கள் விருப்பம் போல வேறு எங்கும் புதைக்கலாம். என்னால் அந்த வேதனையை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என்னுடைய  இறந்துவிட்ட குழந்தையை பாபாதான் பார்த்துக் கொள்ள வேண்டும் என மனம் உருகி அவரிடம் வேண்டிக் கொண்டேன். இரண்டு வாரங்களுக்குப் பிறகு எங்களுடைய ஒரு நண்பர் எங்களை பாபாவின் ஒரு ஆலயத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று விட்டு வந்த எனக்கு மறுநாள்  ஒரு கனவு.  நான் ஆலயத்தில் இருந்த  பாபாவின் சமாதியில் ( - சீரடியில் இருந்த பாபாவின் சமாதி போலவே எனக்கு காட்சி அளித்த அந்த சமாதி அருகில் சென்று-) அவரை  வேண்டிக் கொண்டு நிற்கையில் பாபா சமாதியில் இருந்து இறங்கி வந்தார்.  அவர் வருவதை என்னுடைய சகோதரனுக்குக் காட்டினேன். என்  அருகில் வந்தவர் என்னிடம் இருந்து குழந்தையின் கார்டை வாங்கிக் கொண்டார். மீண்டும் சமாதிக்கு திரும்பச் சென்றார். அவர் வேறு எவருடைய கண்களுக்கும் புலப்படவில்லை. சமாதிக்கு சென்றவர் அந்த கார்டை தன்  மார்பில் வைத்துக் கொண்டு என்னை  ஒரு புறமாக திரும்பி பார்த்தார். அப்படி பார்த்துக் கொண்டே  சமாதியில் இறங்கி மறைந்துவிட்டார். அந்த அறை  முழுவதும் சாம்பிராணி  புகை வாசனை.  அப்போது அவர் பார்த்த கருணைப் பார்வை நான் உன்னுடைய குழந்தையை என்னுடைய இதயத்தில் வைத்துக் கொண்டு விட்டேன் என்று கூறியது போல இருந்தது.  இன்றைக்கும் அந்தக் காட்சி என்னுடைய மனதை விட்டு அகல மறுக்கின்றது. என் குழந்தைக்கு பாபா சத்கதி அளித்து விட்டார் என்பதை உணர்ந்தேன். ஆகவே நான் மன அமைதி அடைந்தேன்.
சில காலம் சென்றது. நான் மீண்டும் கர்ப்பம்  ஆனேன். முதல் குழந்தையை பாபா தன்னுடன் வைத்துக் கொண்டு விட்டதினால்,  இந்த முறை பாபாவின் அருளினால் நல்லபடியாக குழந்தை பிறக்கும் என நம்புகிறேன். முதல் அபார்ஷன் ஆகி சில நாட்களே ஆகி இருந்தது. அப்போது நடந்த இன்னொரு சம்பவம்.  நான் மனம் ஒடிந்து இருந்த நேரத்தில் என்னுடைய கணவர் டிரைவிங் லைசன்சிற்கு விண்ணப்பித்து இருந்தார். என்ன காரணத்தினாலோ இரண்டு முறை சென்றும் அவர் அதில் தேர்வு அடையவில்லை. நான் எதெற்கெடுத்தாலும்  கோபம் அடைந்து கொண்டு இருந்ததினால் அதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்தேன்.  மூன்றாம்  முறையாக என்னுடைய கணவர் ஒரு வியாழன் கிழமை அன்று டிரைவிங் லைசன்ஸ்  டெஸ்ட் எடுக்கச் சென்றார். அவர் அதில் தேர்வு பெற்றால் சாயி சரித்திர சத்பதாவை படிப்பதாக நான் பாபாவிடம்  வேண்டிக் கொண்டேன். என் கணவர் அந்த டெஸ்டில்  பாஸ் ஆகி விட்டார். இது அனைவருக்கும் சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் அதில் இருந்த பல சிக்கல்கள் எங்களுக்கு மட்டுமே தெரியும். அமெரிக்காவில் லைசன்ஸ் கிடைப்பது சுலபம் அல்ல.  அதுவும் என்னுடைய கணவரை டெஸ்ட் செய்தவர்  கிறுக்குப் பிடித்த ஆசாமியாக இருந்தார்.  ஆனாலும் என் கணவர் அந்த டெஸ்டில்  பாஸ் ஆகி விட்டதற்காக  நான் சாயி பாபாவுக்கு என் மனமார்ந்த நன்றியை கூறுகிறேன்.
பாபா நீதான் எங்கள் தவறுகளை மன்னித்துவிட்டு எங்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து கொண்டு இருக்க வேண்டும் என அவரையே வேண்டுகிறோம். உன் காலடியில் நாங்கள் எங்களுடைய அனைத்து வாழ்கையையும் அர்பணித்து விட்டோம். நீதான் எங்களுக்கு துணையாக என்றும் இருக்க வேண்டும்.

சர்வம் சாயி பாதம் அர்ப்பணம்
 (Translated into Tamil by Santhipriya)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.