Thursday, May 3, 2012

Rama Vijaya - Chapter-35

ராம விஜயம் -- 35
 
[ஸுவேலாவில் முகாம் அமைத்ததும்] ராமன் சுகனை விடுவித்தான். அவன் நேராக ராவணனிடம் சென்று, நடந்ததனைத்தையும் விவரித்து, எப்படி ஸேது பந்தனம் நிகழ்ந்து, ராம,லகஷ்மணர்கள் வானரப் படையுடன், இலங்கைக்கு வந்தார்கள் என்பதையும் சொன்னான். அயோத்தி இளவரசனுக்கு அடிபணிந்து, அவன் மனைவி ஸீதையை அவனிடமே ஒப்படைக்குமாறும் வேண்டிக் கொண்டான். ஆனால், ராவணனோ, அதைக் கேட்டதும் கோபமடைந்து, ' உன்னை அவர்கள் அடித்து நொறுக்கியதால் பயந்துபோய், இப்படியெல்லாம் உளறுகிறாய். இதுபோல நீ மீண்டும் ஒருமுறை கூறுவாயாகில், உனது தலையை வெட்டி விடுவேன்' எனக் கத்தினான்.
அதன் பிறகு, சுகனையும், சூர்ணன் எனும் அரக்கனையும் ராமனின் படைகள் பற்றிய விவரங்களை அறிய அனுப்பினான். அவர்கள் இருவரும் தங்களைக் குரங்குகள் உருவத்தில் உருமாற்றிக் கொண்டு, இதர வானரங்களுடன் கலந்து, தாமும் அவர்களில் ஒருவர் போலக் காட்டிக் கொண்டனர். விபீஷணன் இதை அறிந்து, ராமனிடம் இந்த விஷயத்தைத் தெரிவித்தான். ராமனும், இந்த ஒற்றர்கள் அறிந்துகொள்ள வேண்டிய எதையும் தடுக்க வேண்டாமென வானரங்களுக்குக் கட்டளையிட்டான். அதன்படியே அவர்கள் சுதந்திரமாக உலாவி, ராமனின் படையின் திறத்தைக் கணக்கிட்டனர். அப்படி அறிந்தபின், ராவணனிடம் சென்று, ' ராமன் மிகப் பெரிய வானரப் படையுடன் வந்திருக்கிறான். அவர்களை வெல்வதென்பது உன்னால் இயலாது. எனவே, நீ இப்போதே ராமனிடம் சரணடைந்து, ஸீதையை அவனிடம் ஒப்படைத்துவிடு' என அறிவுறுத்தினர். ஆனால், அதைக் கேட்டதும் ராவணன் கோபமடைந்து, இப்படி யோசனை சொன்னால், அவர்களது தலைகளை வெட்டி விடுவதாக அச்சுறுத்தினான்.
பின்னர், அவன் அந்த இரு அரக்கர்களுடன், தனது உப்பரிகைக்குச் சென்று, ராமனின் படைகளைப் பார்வையிட்டான். இந்தச் செய்தியை விபீஷணன் சென்று ராமனிடம் தெரிவிக்க, உடனே சுக்ரீவன், பல நூறு மைல்கள் [வெகு தொலைவிலிருந்த] இருந்த ஸுவேலாவிலிருந்து கிளம்பி,ராவணனைத் தாக்கி, அவனது மகுடத்துடன் திரும்பி வந்தான். அதைக் கண்டு பயந்த ராவணன் உடனே உப்பரிகையிலிருந்து கீழே இறங்கி விட்டான்.
ஒருசில நாட்களுக்குப் பின், 'இனிமேலும் எனக்குப் பொறுமை இல்லை. நான் இப்போதே ஸீதையை மணக்கப் போகிறேன். உங்களில் எவராவது அவளிடம் சென்று, அவளுக்கு என் மேல் ஆசை பிறக்குமாறு செய்தால், நான் அவர்களுக்கு மிகவும் கடமைப் பட்டவன் ஆவேன்' எனத் தன்னுடனிருந்த தோழர்களிடம் சொன்னான்.
ராவணன் இப்படி வேண்டிக் கொண்டதும், அவனது மந்திரிகளில் ஒருவனான வித்யுன்ஜீவா என்பவன் முன்வந்தான். இவன் மந்திர, தந்திரக் கலைகளில் வல்லவன். 'நான் ராமனின் தலை, அவனது வில் இவற்றை உருவாக்கி,அவற்றை ஸீதை முன் அவள் பார்க்கும்படி வைக்கிறேன். அதைக் கண்டதும், அவள், இனி தனக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை என எண்ணி, உன்னிடம் அன்பு செலுத்துவாள். உன்னை மணக்கவும் சம்மதிப்பாள்.' என யோசனை சொன்னான். அதைக் கேட்ட ராவணன், 'இந்த உனது ஆலோசனைக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன். நீ இதில் வெற்றி பெறுவாய் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை' என மகிழ்வுடன் கூவினான்.
வித்யுன்ஜீவாவும் உடனே ராமனின் தலையையும், அவனது வில்லையும் உருவாக்கினான். அவற்றை எடுத்துக்கொண்டு, ராவணன் அசோக வனம் சென்று, ஸீதை முன் வைத்து, ' உனது அன்புக்குரிய கணவன் ராமன் என்னால் கொல்லப்பட்டான் என்னும் இனிப்பான செய்தியை உன்னிடம் சொல்லுகிறேன். லக்ஷ்மணன் அயோத்திக்குத் தப்பியோடி விட்டான். மாருதி, சுக்ரீவன், நளன், நீலன், அங்கதன் மற்றும் எல்லா வானர வீரர்களும் கொல்லப் பட்டார்கள். நீ இப்போது இங்கே தனியளாக நிற்கிறாய். அதனால், உடனே நீ என்னை மணந்துகொள்ளச் சம்மதிக்க வேண்டும். அப்படிச் சம்மதித்தால், நீயே என் பட்ட மஹிஷி ஆவாய். மண்டோதரி உனக்குப் பணிப்பெண் ஆவாள். ஸீதா, ராமன் இனிமேல் இல்லை. என்னை நம்பு. இதில் உனக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், இதோ, ராமனின் வெட்டப்பட்டத் தலையும், அவனது வில்லும் இங்கே உன் முன்னே இருக்கின்றன' எனக் கூறினான். அதைக் கேட்டதும், பார்த்ததுமே ஸீதை மயங்கி வீழ்ந்தாள். மயக்கத்திலிருந்து எழுந்ததும், ராவணனைப் பார்த்து, 'நான் உன்னை எனது தந்தையாகக் கருதுகிறேன். நீ உடனே ஒரு எரிசிதை மூட்ட உத்தரவிடுகிறேன். நான் அதில் வீழ்ந்து என் உயிரை மாய்த்துக் கொள்வேன். இனி ஒரு கணமும் இவ்வுலகில் வாழ நான் சம்மதியேன்' என அரற்றினாள். இதைக் கேட்டதும், ராவணன் மனம் நொந்து, அவளைத் தனியே அங்கேயே விட்டுத், தனது அரண்மனைக்குத் திரும்பினான். 
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.