Saturday, May 26, 2012

Rama Vijaya- Chapter-58

ராம விஜயம் -- 58


"உனது தந்தையின் பெயர் என்ன? என லக்ஷ்மணன் வினவினான். "அதைத் தெரிந்துகொள்ள நீர் ஏன் விரும்புகிறீர்? 'சரி, வாரும். இப்போது சண்டையிடலாம்' எனச் சொல்லிக்கொண்டே லக்ஷ்மணன் மீது ஒரு அம்பை லவன் எய்தான். அது லக்ஷ்மணனது ரதத்தை அப்படியே ஆகாயத்தில் தூக்கியெறிந்து, அங்கு ஒரு வட்டமிட்டுவிட்டு, மீண்டும் பலமாகத் தரையில் வந்திறங்கச் செய்தது. நிலை குலைந்துபோன லக்ஷ்மணன் வேறொரு தேரில் ஏறி, லவன் மீது சரமாரியாக அம்புகளைத் தொடுத்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் லவன் அவற்றையெல்லாம் செயலிழக்கச் செய்துவிட்டான்.
அடுத்து ஒரு அஸ்திரத்தை லக்ஷ்மணன் ஏவ, அது கோடிக்கணக்கில் கதைகளாக மாறி லவனை நோக்கிப் பாய்ந்தன. வால்மீகி முனிவர் கொடுத்திருந்த மந்திர சக்தியைப் பிரயோகித்து, ஒரு அஸ்திரத்தால் லவன் அவற்றை எதிர்கொள்ள, அந்த அஸ்திரம் கோடிக்கணக்கில் சக்கரங்களாக மாறி, அந்த கதைகளையெல்லாம் தவிடுபொடியாக்கின.
மலைகளை உருவாக்கும் அஸ்திரத்தை லக்ஷ்மணன் ஏவ, லவன் வஜ்ராஸ்திரத்தால் அந்த மலைகளைப் பிளந்தான்.
இப்படியாகத் தன்னிடமிருந்த வலிமையான அஸ்திரங்களையெல்லாம் பிரயோகித்தும், லவனை எந்தவிதத்திலும் கொல்ல முடியாமல் லக்ஷ்மணன் திகைத்தபோது, 'ஏன் நிறுத்திவிட்டீர்? உம்மிடமிருக்கும் அஸ்திரங்களெல்லாம் தீர்ந்துபோய் விட்டால், திரும்பிச் சென்று, அந்த ராமனை வரச் சொல்வதுதானே' என லவன் ஏளனமாகப் பேசினான்.
லவன் சொன்னதைப் பொருட்படுத்தாமல், மேலும் பல அம்புகளை லக்ஷ்மணன் தொடர்ந்து செலுத்தவே, எதிர்சென்று தாக்குபவரை மயங்கி ஆடச் செய்யும் மகுடி அஸ்திரத்தை லவன் லக்ஷ்மணன் மீது எய்தான். அதிலிருந்து இனிமையான மகுடி நாதம் புறப்பட்டது. ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணன், அந்த இன்னிசை ஒலியைக் கேட்டதும், அந்த நாதத்தில் மயங்கி, சண்டையிடுவதை நிறுத்தி, செயலிற்றிருந்தான்.
காலஜித் குசனைத் தன் படைகளுடன் சூழ்ந்தான். ஆனால், அவர்களனைவரையும் அழித்துவிட்டு, குசனும் தன் சகோதரனுடன் சேர்ந்து கொண்டான். இதற்கிடையில், பரதனை ஒரு படையுடன் லக்ஷ்மணனுக்குத் துணையாக அனுப்பி, அந்த பாலகர்களின் தாய் வருத்தப்படக் கூடாதே என்பதற்காக, அந்தச் சிறுவர்களைக் கொல்லாமல், அவர்களை மயங்கச் செய்யும் ஒரு அஸ்திரத்தை ஏவி, உயிருடன் பிடித்து வரச் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை ராமன் செய்து கொண்டிருந்தான். ஆனால், குற்றுயிரும் குலையுயிருமாகத் தப்பிப் பிழைத்த சில வீரர்கள் அங்கே ஓடி வந்து, லக்ஷ்மணன் போர்க்களத்தில் செயலற்று வீழ்ந்து கிடப்பதையும், காலஜித் முதலான படைவீரர்கள் எல்லாம் மாண்டுபோன செய்தியையும் ராமனிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு துக்கித்த ராமன், மாருதியையும், பரதனையும் மேலும் ஒரு படையுடன் அனுப்பினான்.
அவ்விரு பாலகர்களும் ராமனைப் போலவே இருப்பதைக் கண்ட பரதன் ' நிச்சயமாக இவ்விருவரும் ராமனின் குழந்தைகளே' என மாருதியிடம் கூறினான். 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன்' என மாருதியும் மெதுவாகச் சொன்னான். அவர்கள் இருவரும் தமக்குள்ளே ஏதோ ரகசியமாகப் பேசுவதைக் கண்ட லவனும், குசனும் ' இவர்கள் நம்மிடம் நைச்சியமாகப் பேசி ஷ்யாமகர்ணாவைக் கொண்டுபோகத்தான் திட்டம் போடுகிறார்கள் போலிருக்கிறது' என தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
குதிரையைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும்படி லவனிடம் சொல்லிவிட்டு, குசன் பரதனிடம் வந்து, 'நீங்கள் லக்ஷ்மணனுக்கும் மூத்தவராகத் தெரிகிறீர்கள். சரிதானே? உங்களைப் பார்த்தால் பெரிய வீரர் போலத் தெரிகிறது' எனப் பணிவாகச் சொன்னான். 'அதிருக்கட்டும், முதலில் நீ யார் எனச் சொல். உன் பெயர் என்ன? உன்னைப் பெற்றவர்களின் பெயரென்ன? இதற்கு முன்னால் நீ யார் யாருடனெல்லாம் போர் புரிந்திருக்கிறாய் எனக் கூறு' என பரதனும் அன்புடன் வினவினான்.
'என் பெயர் குசன்' என்றான் அந்தப் பாலகன்.
'சீக்கிரமே இந்த இடத்தை விட்டுப் போய்விடு. உனது அன்னையிடம் சென்று நான் உனது உயிரை வாங்காமல் விடுவித்தேன் எனத் தெரிவி' எனப் பரதன் சொன்னதும், 'ராமன்தான் உங்களை இங்கே அனுப்பியிருக்க்கிறார் என நினைக்கிறேன். இப்போது நான் சொல்வதைக் கேளுங்கள். ஒன்று என்னுடன் எதிர்நின்று சண்டை போடுங்கள்; அல்லது, உடனே இங்கிருந்து எவ்வளவு விரைவாகப் போகமுடியுமோ அவ்வளவு விரைவில் அகன்று விடுங்கள். நான் உங்களைப் பின்தொடர மாட்டேனென உத்திரவாதம் அளிக்கிறேன். போய் அந்த ராமனை, முடிந்தால் இங்கு வரச் சொல்லுங்கள்' என குசன் பதிலுரைத்தான்.
இதைக் கேட்டதும் ஆத்திரமடைந்த பரதன் குசன் மீது அம்புகளை ஏவ, அவற்றையெல்லாம் முறியடித்த குசன், வஜ்ராஸ்திரத்தை எய்து, தன்னைத் தாக்க வந்த மாருதியை பலமாகத் தாக்கி, அவனைச் செயலிழக்கச் செய்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51 
52  53  54  55  56  57  58  59

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.