Sunday, May 27, 2012

Rama Vijaya- Chapter- 59

ராம விஜயம் -- 59


அனைவருக்கும் சாயிராம்
இன்று நான் ராம விஜயத்தின் கடைசி பாகத்தைப் (59 தாவது பாகம்) பிரசூரிக்கின்றேன். பாபாவினால் ஈர்க்கப்பட்டுள்ள சாயி பக்தர்கள் இந்த தெய்வீகப் பணியை செய்துள்ளனர். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. பல நாட்களாக இந்த புத்தகத்தை படிக்க அதை தேடிக் கொண்டு இருந்த பலரும், இந்தப் புத்தகம் வெளியிட்டுள்ளதைப் பாராட்டி மின்அஞ்சல் மூலம் எனக்கு நன்றியை தெரிவித்து உள்ளார்கள். இந்த தளத்தில் தினமும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த புத்தகத்தை ஒரு வார பாராயணம் செய்வது போல தாங்கள் படித்து வருவதாகவும், இந்தப் புத்தகம் முழுவதும் வெளியானப் பிறகு மீண்டும் 14 நாட்கள் பாராயனமாக அதைப் படிக்க ஆவலுடன் உள்ளதாக பல பக்தர்கள் தெரிவித்து உள்ளார்கள். அனைத்து சாயி பக்தர்களும் பயனடையும் வகையில் இந்த புத்தகத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு அந்த அமுதத்தை அனைவரும் பருக ஏற்பாடுகளை செய்துள்ள ஜெயராம் அங்கிளுக்கும், சங்கர்குமார் அங்கிளுக்கும், நான் நிறம்பவும் கடமைப்பட்டு உள்ளேன்.
அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைக் கூற விரும்புகிறேன். இந்த புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு 14 நாள் பாராயணம் செய்ய வசதியாக இருக்கும் வகையில் வெகு விரைவில் இந்த புத்தகத்தை PDF புத்தகமாக வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.
ராம விஜயாவின் கடைசி அத்யாயமான 59 ஆம் பாகத்தின் இறுதியில் ஜெயராமன் அங்கிள் முடிவுரை தந்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்காக அவருக்கு நன்றி கூறி அதை பாபாவின் பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். இதே நிலையிலான பக்தியுடன், இப்படிப்பட்ட நல்ல சேவைகள் தொடர்ந்து கொண்டு இருக்க அனைவரையும் பாபா ஆசிர்வதிக்க வேண்டும் என நான் பாபாவை வேண்டுகிறேன். இந்த வலைதளத்துடன் தொடர்ப்பு வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட நல்ல காரியங்களை அனுதினமும் செய்து வரும் சேவகர்களை பாபா ஆசிர்வதிக்கட்டும்.
ஜெயராம் அங்கிள், சங்கர்குமார் அங்கிள், சகோதரி ஆஷாலதா, சகோதரி ரம்யா, கௌசிகன்சி மற்றும் எனக்கு நேரடியாக பரிச்சயமான ஆனால் வெளித் தெரியாமல் உள்ள அத்தனை பக்தர்களுக்கும் என் நன்றியை தெரிவிக்கின்றேன். சாயி சரித்திரத்தில் கூறப்பட்டுள்ள புனிதப் புத்தகமான ராம விஜயாவைப் போன்ற வேறு எதுவும் புத்தகங்கள் யாரிடமாவது இருந்தால் அதை எங்களிடமும், உலகில் உள்ள அனைத்து சாயி பக்தர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே அனைத்து சாயி பக்தர்களிடமும் நான் வைக்கும் வேண்டுகோள். ஜெய் சாயிராம்.
மனிஷா
--------------------

ராம விஜயம் -- 59
 
நடந்த விவரங்கள் அனைத்தும் ராமனுக்குத் தெரிவிக்கப்பட்டதும், அவன் உடனே தனது தேரில் ஏறி, யுத்த பூமிக்கு, ஒரு வானர சேனையுடன் வந்தான். வானரர்கள் மலைகளையும், பெரிய பாறாங்கற்களையும், மரங்களையும் லவ, குசர்கள் மீது எறிந்தனர். அவற்றையெல்லாம் தங்களது அஸ்திரங்களால் இருவரும் தடுத்து, பல வானரர்களையும் கொன்றழித்தனர். எஞ்சிய வானரர்கள் உயிருக்குப் பயந்து ஓடி ஒளிந்தனர்.
இந்த சமயத்தில், மாருதி வானிலெழும்பித் தனது வாலின் மூலம் அவ்விரு பாலகர்களையும் கட்டித் தூக்க முயற்சித்தான். அதைக் கவனித்த குசன் ஒரு வலிமையான அஸ்திரத்தை ஏவி அந்த வானரத்தைத் தாக்கி, மாருதியைப் பூமிக்குக் கொண்டுவரச் செய்தான். மாருதியைப் பார்த்து, ' ஓ, அவலட்சணம் பிடித்த குரங்கே, அன்று நீ அசோக வனத்தை அழித்திருக்கலாம். ஆனால், இங்கே அது எதுவும் நடக்காது. அசுரர்கள் மீது கற்களையும், மரங்களையும் எறிவதெல்லாம் ஒரு போரே அல்ல. இங்கே துரோணகிரியும் கிடையாது. கடலைத் தாண்டிச் சென்று, இலங்கையை எரித்திருக்கலாம். அப்படி எதுவும் இங்கே கிடையாது' எனப் பரிகாசம் செய்தான்.
அப்போது, சுக்ரீவன் அவர்கள் மீது பெரும் கற்களை எடுத்து வீச, லவன் அவற்றைப் பொடிப்பொடியாக்கி, சுக்ரீவன், நீலன், ஜாம்பவான், அங்கதன், மாருதி, இன்னும் மற்ற வானரர்கள் மீது அம்புகள் எய்து, அவர்களை மயக்கமுறச் செய்தான்.
இந்தத் தோல்வியைக் கண்ட ராமன், பாலகர்கள் மீது தனது அஸ்திரங்களை ஏவ, அவற்றையும் லவ, குசர்கள் முறியடித்தனர். அவர்கள் வானில் விட்ட ஆயிரக்கணக்கான அம்புகள் ராமனைக் காயப்படுத்தாமல், எதிர்வந்த அஸ்திரங்களை மட்டும் முறியடித்தன. அவர்களது பராக்கிரமத்தைக் கண்டு வியந்த ராமன், அவர்களைப் பார்த்து, ' ரிஷிகுமரர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் நான் தருகிறேன். பால் வழங்கக்கூடிய பசுக்களைத் தருகிறேன். உங்களது வீரத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்கிறேன். நீங்கள் கேட்பது எதுவானாலும், அதைத் தருகிறேன்' எனச் சொன்னான்.
'எங்களுக்கு எதுவும் தேவையில்லை. அதற்குப் பதிலாக நீங்கள் கேட்கும் எதையும் 'நாங்கள்' தருகிறோம். உமது செல்வங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். உங்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கிறோம். இவ்வளவு கொடுமையான, இரக்கமற்ற மனிதனை இந்தப் பூவுலகில் எங்குமே காண முடியாது. நற்பண்புகளின் உறைவிடமான, எந்தக் குற்றமும் செய்யாத ஸீதை என்பவரைத் தன்னந்தனியே வாடுமாறுக் காட்டுக்கு அனுப்பியவராயிற்றே தாங்கள்! இதுவே நீங்கள் செய்த கொடுமைகளின் உச்சம்' என லவனும், குசனும் ஆத்திரத்துடன் பொறுமினர்.
இந்த வார்த்தைகளைக் கேட்ட ராமன், மனம் நெகிழ்ந்து, ஏதோ ஒரு பாசத்தால் உந்தப்பட்டு, அவ்விரு பாலகர்களின் தலைகளை அன்புடன் கோதிவிட எண்ணி நெருங்கினான். ஆனால், பாலகர்களோ, தொடர்ந்து போரிடும்படி சவால் விட்டனர். 'அதிருக்கட்டும்; நீங்கள் யர்? உங்களது பெற்றோர் யாவர்? எந்தக் குருவிடம் பாடம் படித்தீர்கள்? இவ்வளவு வீரமாகச் சண்டையிட, தனுர்வித்தையையும், சாதுர்யமாகப் பேசும் அறிவையும், மந்திர, தந்திரங்களையும் கற்றுக் கொடுத்த குரு யாவர்? என்பதை முதலில் சொல்லுங்கள்' என ராமன் அன்புடன் வினவினான்.
அதைக் கேட்டதும், லவனும், குசனும் அடக்க முடியாமல் பெரிதாகச் சிரிக்கத் தொடங்கினர். ' இந்த மனிதன் தனது தம்பிகளுக்காக கவலைப்படவில்லை. எங்களைக் கதை சொல்லச் சொல்லிக் கேட்கிறார். ஐயா, முதலில் எங்களுடன் போரிடுங்கள். பிறகு சாவகாசமாகக் கதை பேசலாம். ராவணனைக் கொன்றது முதலான பெரும் தீரச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள். அதில் கொஞ்சம் நாங்களும்தான் பார்க்கிறோமே. எங்களுடன் சண்டை போடாமல், உங்களை இந்த இடத்திலிருந்து நகர நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்படி சண்டை போட விருப்பமில்லாவிடின், பேசாமல் இங்கிருந்து வீடு திரும்பிச் செல்லுங்கள். அல்லது சந்நியாசம் மேற்கொள்ளுங்கள். ஏனெனில், உமக்குத்தான் மனைவி, சகோதரர்கள், பிள்ளை குட்டிகள் என யாருமே இல்லையே!' எனப் பரிகசித்தனர்.
'முதலில் நீங்கள் யாரெனச் சொல்லுங்கள். பிறகு நான் உங்களுடன் போரிடச் சம்மதிக்கிறேன். ' என ராமன் சொன்னான். அப்போது, வானத்திலிருந்து ஒரு அசரீரி, 'ராமா, அவர்களுடன் சண்டையிடாதே. அவர்கள் உனது குமாரர்கள்' ஒலித்தது. அந்த அசரீரியைக் கேட்டதுமே, ராமன் செயலிழந்துபோய், மயக்கமுற்று நிலத்தில் வீழ்ந்தான். குசன் ராமனை நெருங்கி வந்து, அவன் தலையிலிருந்த மகுடத்தை எடுத்துத் தன் தலையில் அணிந்து கொண்டான். லக்ஷ்மணன் உடலிலிருந்த ஆபரணங்களை எடுத்து லவன் அணிந்து கொண்டான். இப்படி அலங்கரித்துக் கொண்ட லவ, குசர்கள், ராமனின் ரதத்தில் ஏறி, மாருதி, சுக்ரீவன்,அங்கதன், ஜாம்பவான் மற்றும் இதர வானரர்களையும் கயிற்றில் கட்டி இழுத்துக்கொண்டு, தங்களது தாயிடம் காட்ட வேண்டுமென ஆஸ்ரமம் நோக்கிச் சென்றனர்.
ஸீதையிடம் சென்று, ராமனையும், அவனது தம்பிமாரையும் போர்க்களத்தில் மயக்கமுறச் செய்ததையும், ஏனைய வீரர்களையும், வானரப் படைகளையும் கொன்றழித்ததையும், மற்றும் நடந்ததனைத்தையும் விவரமாக விவரித்தனர். 'நீ பார்த்து மகிழவென, வானரங்களைக் கட்டியிழுத்து வந்திருக்கிறோம். வா, வந்து பார்' என ஆசையுடன் அழைத்தனர். ஏற்கெனவே நன்றாக அறிமுகமான அவர்களை இந்த நிலையில் கண்டால், அவர்கள் அவமானமாக உணர்வார்களே என எண்ணி, ஸீதை வெளியே வர மறுத்து, 'அந்த வானரர்களை உடனே கட்டவிழ்த்து அனுப்பிவிடுங்கள். அவர்களை இங்கே வைத்திருக்கலாகாது' என உத்தரவிட்டாள். அதன்படியே, லவ, குசர்களும் வானரர்களைக் கட்டவிழ்த்துவிட்டு, அனுப்பினர். அவர்கள் சென்று, ராமனிடம் விவரத்தைக் கூறினர்.
இதற்கிடையில், வால்மீகி பாதாள லோகத்திலிருந்து திரும்பினார். நிகழ்ந்த விவரங்களை அறிந்ததும், யுத்த பூமிக்குச் சென்று, தனது கமண்டல நீரைத் தெளித்து, மாண்டுகிடந்த அனைவரையும் உயிர்ப்பித்தார். ஸீதையையும், இரு பாலகர்களையும் அழைத்துக்கொண்டு ராமனிடம் சென்று, அவனிடம் மூவரையும் ஒப்புவித்தார். ராமன் அவர்களை அன்புடன் தழுவிக் கொண்டான். முனிவரை வணங்கி விடை பெற்றுக்கொண்டு, தனது செல்வங்களை உடனழைத்துக்கொண்டு, அயோத்திக்குத் திரும்பி, அஸ்வமேத யாகத்தை நிறைவு செய்தான்.

[நிறைந்தது]



ஸ்ரீராம் ஜயராம் ஜயஜயராம்!

[இந்தப் புனித நூலை மொழி பெயர்க்க எனக்கு அருள் புரிந்த ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதனின் கருணைக்கு எனது பணிவன்பான வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு, இந்நூலை நிறைவு செய்கிறேன். இதனை வெளியிட்ட மனிஷாஜி, ஜயராமன் ஜி இருவருக்கும், பொறுமையுடன் படித்த உங்கள் அனைவருக்கும் எனது பணிவன்பான வணக்கம்.
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயிநாத் கி ஜெய்! ஓம் ஸாயிராம் ]

சுப மங்களம் 

(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்


பின் உரை        -        வாழ்த்துக்கள்



மனிஷா மற்றும் சங்கர்குமாருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
தோண்டத் தோண்ட அத்தனையும் தங்கம் என்று தமிழில் சொல் மொழி உண்டு. திரு சங்கர்குமார் தமிழில் மொழிபெயர்த்து உள்ள 'ராம விஜயா' என்ற தொடரினை நான் சாயி வளைய தளத்தில் வெளியிட்டுக் கொண்டு இருந்த சமயத்தில் இதுவே எனக்கு நினைவிற்கு வந்தது. நான் திரு சங்கர்குமார் மற்றும் மனிஷா இருவருக்கும் பாராட்டுகளை தருவதற்கு முன்னால் பின்னணிச் செய்தி ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த வலைதளத்தில் 2009 ஆம் ஆண்டு நானாகவே போய் மனிஷாவின் வலையில் போய் விழுந்தது எத்தனை எதேற்சையானதாக இருந்ததோ அப்படித்தான் திரு சங்கர்குமாரின் பிரவேசமும் இருந்தது. ஆப்ரிக்க நாட்டில் தான்சனீயாவில் இருந்தவர் திருமதி மனிஷா. அங்கிருந்தபடி அவர் சாயிபாபாவின் மூன்று வலைத்தளங்களில் பாபாவைப் பற்றிய கட்டுரைகளை ஆங்கிலத்தில் வெளியிட்டு வந்தார் . பதவியில் இருந்து ஒய்வு பெற்ற நான் என்னுடைய ஒய்வு காலத்தை அமைதியாகக் கழிக்க எண்ணி 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியன்று மனிஷாவின் வலைதள கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து தர ஆவலாக உள்ளதாக அவளுக்கு கடிதம் எழுதினேன். அவ்வளவுதான், நானும் என் மனைவியும் சுட்டியான எங்களுடைய பெண் போன்றவள் என நாங்கள் அன்புடன் அழைக்கும் மனிஷா என்னை அவள் வலைதளத்தில் சிறை பிடித்துக் கொண்டாள். அது முதல் அவ்வப்போது என்னை தொடர்ப்புக் கொண்டு அந்த வலைத்தளம் எப்படி அமைய வேண்டும், அவற்றில் என்ன கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்றெல்லாம் குறித்து அவள் விவாதிப்பது உண்டு. ஒருநாள் திடீரென அவள் ஆங்கிலத்தில் இருந்த வலைத்தளத்தைப் போலவே தமிழ் வளையதளத்தை துவக்கி விட அதில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் வாழ்கை வரலாறோடு எங்கள் பயணம் துவங்கியது.
அப்படி துவக்கப்பட்ட தமிழ் வளைய தளத்தில் நான் மொழி பெயர்த்த தமிழ் கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகத் துவங்கின. மூன்று வருடங்கள் கழிந்தன. தமிழ் வலைதளம் நல்ல முறையில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. அப்போது ஒருமுறை என்னிடம் பேசிக்கொண்டு இருந்த மனிஷா மனிஷா கூறினாள் ''நான் இந்த தளத்தை துவக்குவதற்கு முன் பலர் என்னிடம் நீ விஷப் பரீட்சையில் இறங்குகிறாய். இது வெகு நாட்கள் நிலைக்காது '' என்று பயமுறுத்த 'சாயிபாபா மீது அனைத்து பாரத்தையும் வைத்துவிட்டு நம்பிக்கையுடன் வலை தளத்தை துவக்கினேன்' என்று கூறினாள் . தமிழ் தளத்தை துவக்கிய மனிஷா அவளை தடுத்து நிறுத்த முயன்றவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கிக் காட்டி விட்டாள் என்பதே உண்மை . இத்தனைக்கும் நாங்கள் இருவரும் நேரடியாக சந்தித்தது இல்லை. எங்களுடைய சம்பாஷனைகள் அனைத்துமே இணைய தளம் மூலமும் தொலைபேசி மூலமுமே தொடர்ந்து கொண்டு இருந்தது. அவள் சில நேரங்களில் மன நெகிழ்ச்சியோடு கூறுவது உண்டு ' நம்முடைய இந்த ஜென்மப் பிணைப்பு நம்முடைய பூர்வஜென்ம கர்மவினைப் பயனால்தான் ஏற்பட்டு இருக்க வேண்டும். இந்த ஜென்மத்தில் அதை பாபாவே வெளிப்படுத்தி உள்ளார்'. சாயி மகராஜ் மீது அவள் கொண்டிருந்த அளவற்ற பக்தியையும் நம்பிக்கையையும் கண்டு நாங்கள் வியப்படைவது உண்டு. என்னைப் போன்ற முற்றிலும் அறிந்திடாத ஒரு அன்னியனை முழுமையாக நம்பி ஒரு தமிழ் வலைதளத்தை அமைக்க முன்வந்து அதிலும் வெற்றி பெற்று உள்ள அவளது தன்னம்பிக்கையையும், பாபாவின் மீதான பக்தியையும் பார்த்து திகைத்து நிற்காமல் என்ன செய்வது?
வருடங்கள் செல்லச் செல்ல எங்கள் தொடர்ப்பு வலிமையுற்று சென்று கொண்டு இருக்க, அவளை எங்கள் பெண் போலவே கருதி பழகி வந்தோம். அந்த நிலையில்தான் ஒரு சமயம் பல சொந்தப் பிரச்சனைகளினால் உந்தப்பட்ட நான் இனியும் மனிஷாவின் வேகத்துக்கு எந்த நிலையிலும் என்னால் ஈடு கொடுக்க முடியாமல் சென்று கொண்டு இருப்பதைப் போல உணர்ந்தேன். எனக்கு ஒரு மாற்றாக நிழல் போன்ற மனிதர் கிடைப்பாரா என அமைதியாக சிந்தித்துக் கொண்டு இருந்த வேளையில்தான் என் அதிருஷ்டம் 2011 ஆம் ஆண்டுவாக்கில் திரு சங்கர்குமாரை என்னை தொடர்ப்புக் கொள்ள வைத்தது. அமெரிக்காவில் மருத்துவராக இருந்த அவர் சாயி வலை தளத்தில் எனக்கு உதவியாக கட்டுரைகளை தமிழாக்கம் செய்துத் தர தான் ஆவல் கொண்டு உள்ளதாகக் கூறி என்னை தானே தொடர்ப்புக் கொண்டார். நான் சற்றுக் கூட யோசிக்கவில்லை. அதையே எதிர்பார்த்துக் காத்து இருந்ததைப் போல அவரை உள்ளே இழுத்துக் கொண்டேன். ஆனால் உண்மையில் அப்போது அவர் ஒரு தங்கச் சுரங்கத்தில் மறைந்து இருந்த தங்கப் பாறை என்பதும், அவர் மூலம் தன் பெருமையை மேலும் உலகிற்கு எடுத்தக் காட்டசாயிபாபா நினைத்துள்ளார் என்பது எனக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லைதான் .
இறைவன் எப்போதுமே தாம் நடத்தி முடிக்க நினைத்ததை தக்க நேரத்தில் மின்னல் போன்ற தாக்குதல் போல நடத்திக் காட்டுவார். பின்னர் நிகழ உள்ள எதோ ஒரு காரணத்தினால் அவர் அப்படிப்பட்ட நிகழ்ச்சியை திரு சங்கர்குமாரின் பிரவேசத்தின் மூலம் காட்டி உள்ளார். அது மட்டும் அல்ல திரு சங்கர்குமாரின் வருகையோடு அப்போது அமெரிக்காவில் இருந்த திருமதி ரம்யா என்ற பெண்மணியையும் தானாகவே வந்து எங்கள் குழுவில் இணைய வைத்தார். சில நாட்களிலேயே திருமதி ரம்யாவும் தமிழாக்கத்தில் எந்த விதத்திலும் எங்களை விட பின் தங்கி இருக்கவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்தது. ஆக மூவரும் இணைந்து மனிஷாவின் தமிழ் வலைதளத்தில் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டு இருந்த மனிஷாவின் ஆங்கில வலைத்தளக் கட்டுரைகளின் வேகத்துக்கு இணையாக இழுத்துச் செல்லத் துவங்கினோம்.
இணையத்தளம் மூலமே நாங்கள் மூவரும் தொடர்ப்புக் கொண்டு இருந்தோம். அப்போது ஒரு நாள் திரு சங்கர்குமார் என்னை தொலைபேசியில் தொடர்ப்புக் கொண்டு பெங்களூருக்கு தான் வரும்பொழுது என்னை சந்திக்க விரும்புவதாகக் கூறினார். பெங்களூருக்கு வந்த அவரை சந்தித்தபோது நாங்கள் பல விஷயங்களைக் குறித்துப் பேசினோம். முதலில் அவரை நேரில் சந்தித்த எனக்கு அவரும் என்னை ஒத்த வயதைக் கொண்டவரே என்பதை அறிந்தேன் என்பது மட்டும் அல்ல சாயி தமிழ் வலைதள விஷயத்தில் என்னை விட அதிக வேகமும், விவேகமும் நிறைந்தவராக காணப்பட்டது மட்டும் இல்லாமல், வரும் காலத்தில் அது எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் என்னைவிட ஆர்வமாக இருந்ததைக் கண்டும் வியந்தேன். நாங்கள் பல விஷயங்களை விவாதித்தோம் . அதன் மத்தியில் அவர் ராம விஜயத்தின் சிறப்பை எடுத்துக் கூறி தான் அதை தமிழில் மொழி பெயர்த்துத் கொடுத்தால் அதை வலைதளத்தில் வெளியிட முடியுமா என்ற தனது ஆவலைத் தெரிவித்தார். நான் நினைத்தேன். ''நான் யார் அவருக்கு அனுமதி தர ? அப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டுதான் அவரை சாயி எங்களிடம் அனுப்பி இருக்க வேண்டும்'. இப்படி எண்ணிய நான் நியாயத்தைக் கருத்தில் கொண்டு மனிஷாவின் எண்ணத்தையும் கேட்க நினைத்தேன். அதற்குக் காரணம் வலைத்தளங்களை சாயியின் நிறுவியவள் அவளே. ஆகவே அதுவே சரியான முறையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் என் கடிதத்தைக் கண்ட மனிஷாவோ சற்றும் தாமதிக்காமல் அடுத்த சில நிமிடங்களில் தனது மகிழ்ச்சியை தெரிவித்ததுடன், அதை ஆங்கிலத்திலும் தர வேண்டும் என்ற கோரிக்கையையும் , அவை இரண்டையும் ராமநவமி முதல் வெளியிடலாம் என்ற தனது விருப்பத்தையும் எடுத்து வைத்தாள்.
அடுத்து ராம விஜயத்தை வெளியிட திரு சங்கர்குமார் புயல்வேகத்தில் வேலை செய்யத் துவங்கி சுமார் பத்து பாகங்களை ஆங்கில மற்றும் தமிழ் மொழி பெயர்ப்பில் எனக்கு அனுப்பி வைத்து அடுத்தடுத்து மேலும் சில பாகங்களை தொடர்ந்து அனுப்பலானார். அதற்குக் காரணம் ராம விஜயத்தை அனுதினமும் தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயமாக படிக்கப்பட வேண்டும், அதை படிக்கத் துவங்கியதும் அடுத்தடுத்த நாட்களில் ஒருநாள் கூட அடுத்த அத்தியாயத்தை தொடர்ந்து படிக்காமல் இருக்கக் கூடாது என்ற நியதி இருந்ததினாலும், இடையில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டு ராமவிஜயம் தொடர் தடைபட்டு நிற்கக் கூடாதே என்ற எங்கள் கவலையினால்தான் அந்த ஏற்பாட்டை செய்து இருந்தோம். ராம நவமி அன்று துவங்கிய அந்த காவியத்தின் முன்னுரையில் மனிஷா '' இந்து மத புனித நூலான ராம விஜயத்தை முதன் முதலாக பாபாவின் அருளாசியைப் பெற்ற இந்த வலை தளத்தில் வெளியிடுவதில் பேரானந்தம் அடைகிறேன்'' எனக் கூறி இருந்தது மெத்த நியாயமான எண்ணமாகவே இருந்தது.
சாயிபாபாவின் அருளை பலர் பெற்று உள்ளார்கள். அப்படி அவருடைய அருள் கிடைப்பட்ட சிலர் அவற்றை எதோ ஒரு காரணத்தினால் தமக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பில் அவற்றை ரகசியமாகவே வைத்துக் கொண்டு விட்டார்கள். சாயியின் அருளோ கடல் போன்றது. அதைப் பெறுவது ஹிமய மலை மீது ஏறும் கடினமான பணி போன்றது அல்ல. அவர் எங்கும் நிறைந்தவர். தன் அருளை தக்க சமயத்தில் எவர் மூலமாவது வெளிப்படுத்த வைப்பவர். அதே நிலைதான் ராம விஜயத்தின் வெளிப்பாடும். நான் இன்று நெஞ்சார்ந்த மன மகிழ்ச்சியுடன் ஒரு உண்மையைக் கூற வேண்டும். இந்தப் புனித நூல் இதுவரை வேறு எந்த தளத்திலும் எந்த மொழியிலும் வெளியாகவில்லை. ஆகவே அந்தப் பெருமைக்கு உரிய மனிஷா மற்றும் திரு சங்கர்குமாருக்கு அந்தப் பெருமை நிலையாக இருக்கும்.
இந்த புனித நூல் பாபாவின் பெரும்பாலான மக்களை சென்றடைய வேண்டும் என்ற இந்த விஷயத்தில் நான் ஒரு அணிலைப் போலவே அவர்கள் இருவருக்கும் தூதுவனாக இருந்து வந்தேன். இந்தப் புனித நூல் முக்கியமாக தமிழ் மொழி பேசும் மக்களுக்கு மன ஆனந்தத்தைத் தரும் என்பது திண்ணம்.
ஆகவே திரு சங்கர்குமாருக்கு 'சாயிசங்கு' என்ற பெயரை தர விரும்புகிறேன். சங்கு என்றால் ஆலயங்களில் ஊதப்படும் ஊதும் சங்கு என்பது ஆகும். ஆலயங்களில் உள்ள சங்கை ஊதி தெய்வத்தை எழுப்புவது போல சாயியின் புகழை பரப்ப வந்துள்ள அவருக்கு சாயி + சங்கர்குமார் = சாயிசங்கு எனப் பெயரிடுவதில் தவறில்லை.
மனிஷா, ரம்யா மற்றும் சங்கர்குமார் போன்ற அனைவருக்கும் சாயியின் அருள் நிலையாகக் கிடைக்க வேண்டும். அவர்களின் ஆர்வத்தினால் இதுவரை இன்னமும் வெளிவராத சாயியின் பொக்கிஷங்கள் மனிஷாவின் வலைதளங்களில் தொடர்ந்து வெளிவர வேண்டும். அவர்களைத் தவிர கண்களுக்குத் தெரியாமல் இருட்டில் ஓடி வந்து கொண்டு இருக்கும் குதிரைகளைப் போல வரும் காலத்தில் இன்னும் பலர் இந்த பணியில் வந்து சேருவார்கள்.
இந்த தருமணத்தில் மனிஷாவின் வலைத்தளத்தைப் பற்றி நினைக்கையில் பொருத்தமான வாக்கியமாக என் மனதில் தோன்றுவது இதுதான்: '' பூமியில் அவ்வப்போது மனிதர்கள் பிறக்கலாம், அல்லது அவர்கள் அழியலாம். ஆனால் பூமியில் பிறக்கும் நதிகளோ என்றுமே வற்றாமல் ஒடிக் கொண்டே இருக்கும்'' . அது போல மனிஷாவின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பெற என் வாழ்த்துக்கள்.
சாந்திப்பிரியா
(N .R. Jayaraman)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.