Friday, May 18, 2012

Rama Vijaya- Chapter-50


ராம விஜயம் -- 50


பின்னர், ராமன், மாருதியையும், விபீஷணனையும் அனுப்பி, ஸீதையை அழைத்துவரச் சொன்னான். அவர்கள் இருவரும் உடனே அசோக வனத்துக்குச் சென்று, ராவணனுக்கு நிகழ்ந்ததை விவரமாகக் கூறி, 'உடனே உங்களை ஸுவேலாவுக்கு அழைத்துவர ராமன் விரும்புகிறார். எனவே தாங்கள் உடனே தயாராகுங்கள்.' எனத் தெரிவித்தனர். மன மகிழ்ந்த ஸீதை தன்னைத் தயார் செய்துகொண்டாள். விபீஷணன் ஒரு சிவிகையை ஏற்பாடு செய்து, அதில் அவளை அமர்த்தி, ஸுவேலாவுக்கு அழைத்து வந்தான்.
ராமனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் அவனைத் தழுவ ஸீதை ஓடினாள். அப்போது, ராமன் அவளைப் பார்த்து, 'என்னருகில் வராதே. என்னைக் கொடுமைக்காரன் என ஊரார் சொல்லக்கூடாதே என்பதற்காகவே உன்னை விடுவித்தேன். இத்தனை நாட்களாக நீ இலங்கையில் இருந்திருக்கிறாய். என்ன செய்தாயெனக்கூட எனக்குத் தெரியாது. உன்னை இப்போது என்னிடத்தில் அனுமதிக்க என்னால் இயலாது. நீ உன் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எனக்கு அதில் எந்தவித மறுப்பும் கிடையாது.' எனச் சொன்னான்.
இந்தக் கொடூரமான வார்த்தைகளைக் கேட்டதும் ஸீதை மிகவும் மனம் வருந்தினாள். 'நான் ஒரு துர்பாக்கியவதி. எவ்விதப் பொறுப்பும் இல்லாமலேயே நீ எனக்காக இத்தனை பிரயத்தனம் செய்திருக்கிறாய். அதே போல, எவ்வித அக்கறையும் இல்லாமலேயே இந்த வானரங்களுக்கும் தொந்தரவு கொடுத்திருக்கிறாய். என்னை உனது இல்லத்துள் அனுமதிக்க மாட்டாய் என்றால், உன் கையிலிருக்கும் வாளால் என் தலையை வெட்டிக் கொன்றுவிடு. நான் இதுவரையிலும் ஒரு எளிமையான, ஒழுக்கமான வாழ்க்கையே வாழ்ந்தேன். இப்போதே அதை உனக்கு நிரூபிக்கிறேன்' எனச் சொல்லிவிட்டு, அங்கிருந்த வானரர்களை அழைத்து, ஒரு சிதை மூட்டுமாறு வேண்டிக் கொண்டாள். அவள் கேட்டதற்கிணங்க மரங்களை அடுக்கி, ஒரு சிதை மூட்டி, அதை எரியச் செய்தனர்.
அந்தச் சிதையருகே சென்ற ஸீதை, அனைத்து வானரர்களுக்கும், அசுரர்களுக்கும் கேட்கும்படி,'ராவணனால் கடத்தப்பட்டு இங்கே நான் சிறை வைக்கப் பட்டேன் என உங்களனைவருக்கும் தெரியும். இந்த அரக்கனின் ராஜாங்கத்தில் இருந்த காலம் முழுவதும் நான் சீலமான, ஒழுக்கமான வாழ்க்கையே வாழ்ந்தேன் என உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்கிறேன். இதோ இந்த நெருப்பு என்னை விழுங்கக் காத்திருக்கிறது. இப்போது நான் இதில் விழப் போகிறேன். நான் சொன்னது பொய்யானால், இது என்னை எரித்துச் சாம்பலாக்கட்டும். நான் சொல்வது சத்தியமெனில், இதிலிருந்து நான் எந்தச் சேதமும் இல்லாமல் வெளிவருவேன்.' எனச் சொல்லி, சிதையில் இறங்கி மறைந்தாள். அடுத்து மூன்று மணி நேரத்துக்கு அவள் வெளிப்படவில்லை.
ராமனும், லக்ஷ்மணனும், அங்கு கூடியிருந்த வானரர்களும் அவள் வெளிவராததைக் கண்டு மிகவும் வருத்தமடைந்தனர். ஆனால், சற்று நேரத்திலேயே அக்னிதேவன், ஸீதையை அலங்கரித்து, ஆபரணங்கள் பூட்டிய வடிவுடன் கொண்டுவந்து ராமனிடம் ஒப்படைத்தான். மனமாரத் தன் மனைவியை ராமன் ஆரத் தழுவிக் கொண்டான்.
உடனேயே ஒரு அழகிய புஷ்பக விமானத்தில் ராமனும், ஸீதையும், லக்ஷ்மணன், சுக்ரீவன், விபீஷணன் மற்றும் பல வானரர்களுடன் அயோத்திக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில், தனக்கு உதவி செய்த முனிவர்கள், மற்றும் சில நண்பர்களையும் பார்த்துவிட்டுச் சென்றான். நேராக நந்தி கிராமம் சென்று இறங்கிய ராமன் அங்கே தனக்காகக் கண்ணீருடனும், மகிழ்ச்சியுடனும் காத்திருந்த பரதனை ஆரத் தழுவிக் கொண்டான். அதன் பின்னர், அந்த விமானத்தைத் திருப்பி அனுப்பிவிட்டு, நந்தி கிராமத்தில் தன்னுடன் வந்தவர்களுடன் தங்கினான்.
இதற்கிடையில், சத்ருக்னனும், ஸுமந்தரனும் தங்களது படைகளுடன் அங்கே வந்து ராமனைக் கண்டனர். கௌஸலை, ஸுமித்ரை, கைகேயி முதலானோரும் அவர்களுடன் அங்கே வந்து, தங்களது பிள்ளைகளைக் கண்டு மகிழ்ந்து தழுவிக் கொண்டனர். ராமனது வாழ்வை அழிக்கவெனத் தான் புரிந்த செயல்களுக்காக வருந்தி கைகேயி ராமனிடம் வருத்தம் தெரிவித்தாள். பின்னர், அனைவரும் தேர்களில் அமர்ந்து, அனைத்து மக்களும் மகிழ, அயோத்திக்குத் திரும்பி வந்தனர்.
ஸுவேலாவிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பிய ராம, லக்ஷ்மணர்களை பல நாடுகளின் அரசர்களும், ஜனகரும் வரவேற்றனர். ராம, லக்ஷ்மண, ஸீதையைக் கண்ட அயோத்தி மக்கள் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் அனைவரையும் ராமன் வரவேற்று, முறையான விருந்தோம்பல் செய்தான். தனது சகோதரிகளையும், உறவினர்களையும் கண்டு ஸீதை மிகவும் மகிழ்ச்சியுடன் உரையாடினாள்.
ஒரு நல்ல நாளில், வஸிஷ்டர் ராமனை அயோத்தியின் அரியணையில் அமர்த்தி, முறைப்படி பட்டாபிஷேகம் செய்வித்தார். அனைத்து தேச மன்னர்களும் ராமனுக்குத் தக்க மரியாதைகள் செய்தனர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.