Wednesday, May 16, 2012

Rama Vijaya -Chapter- 48

 ராம விஜயம் -- 48


துரோணகிரிக்கு அருகிலிருக்கும் மதராஞ்சலம் என்னும் மலையை அடைந்த அனுமன், மிகவும் தாகமடைந்து, அங்கிருந்த ஒரு பிராமணனைக் கண்டு கொஞ்சம் தண்ணீர் தர வேண்டினான். மாருதியைக் கண்ட அந்த அந்தணன், மகிழ்ச்சியுடன், ' உன்னை இங்கே காண மிகவும் சந்தோஷம் அடைந்தேன். இன்றிரவு இங்கேயே தங்கி, பசியாறி, காலையில் செல்வாயாக' என வேண்டினான். 'நான் இங்கே தங்குவது என்பது இப்போது இயலாத காரியம். எனது வேலையை இப்போதே நான் முடித்தாக வேண்டும்' என மாருதி அவனிடம் சொன்னான். தனது வேண்டுகோளை ஏற்க மறுத்த மாருதிக்கு, அங்கிருந்த ஒரு நதியை அந்த அந்தணன் காட்டினான்.
அதனருகில் சென்று நீர் அருந்தும் வேளையில், ஒரு தேவதை [விவஸி] ஒரு மலையளவில் தன்னைக் காட்டிக்கொண்டு, அந்த வானரத்தை உண்ண முனைந்தது. அவளது கால்களைப் பிடித்திழுத்து, மாருதி அவளைக் கொன்றான். உடனே ஒரு அழகிய தேவாங்கனை அதிலிருந்து எழுந்து, மாருதியின் அடி பணிந்து வணங்கினாள். 'நான் மிகவும் அழகாய் இருந்ததில் கர்வமுற்று, ஒரு முனிவரைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தேன். அதனால் கோபமுற்ற அவர் என்னை ஒரு விவஸியாகச் சபித்து விட்டார். என்னை மன்னிக்குமாறு அவரிடம் வேண்டியபோது, உனது கைகளால் எனக்கு சாப விமோசனம் நிகழும் என அருளினார். உனக்கு இந்த நீர் நிலையைக் காட்டிய அந்த அந்தணன், உண்மையில் காலநேமி என்னும் ஒரு அசுரன் என்பதை உனக்குத் தெரிவிக்கிறேன். அவன் பல அசுரரர்களுடன் இங்கே வெகு நாட்களாக வசித்து வருகிறான். உன்னைத் தாமதப் படுத்தவே ராவணன் இவனுக்கு ஆணை பிறப்பித்திருக்கிறான். இப்படி நீ இந்த ஆற்றுக்கு வரும்போது, நான் உன்னைத் தின்ன வேண்டும் என்பதே அவன் திட்டம்' எனச் சொன்னாள்.
அதை கேட்டதும் மாருதி அந்த அந்தணனிடம் [காலநேமியிடம்] வந்தான். 'உன் தாகத்தைத் தீர்த்த அந்த நதியைக் காட்டியதால், நீ எனக்கு ஏதேனும் பரிசு தர வேண்டும்' என அந்த அந்தணன் கேட்டான். 'ஓ, உனக்குப் பரிசு தரவே நான் இங்கு வந்திருக்கிறேன்' எனச் சொல்லி மாருதி, அவனுக்குப் பலத்த குத்துகளை விட்டான். உடனே அந்த பிராமணன், ஐந்து யோஜனை நீள அகலமானத் தன் சுய உருவை எடுத்துக்கொண்டு, மாருதியுடன் போரிட, மாருதி அவனை உடனே கொன்றான். அவனுடனிருந்த அசுரர்கள் ராவணனிடம் சென்று, நடந்ததை விவரித்தனர்.
மாருதி துரோணகிரி மலையை அடைந்து, தன்னுடன் உடனே ஸுவேலாவுக்கு வருமாறு வேண்டினான். 'நீ ஒரு விளையாட்டுப் பிள்ளை. போடா முட்டாளே,  நான் உன்னுடன் வர மட்டேன்.' ' என அந்த மலை மாருதியை விரட்டியது. அதைக் கேட்டு ஆத்திரமடைந்த மாருதி, அந்த மலையை அப்படியே பெயர்த்துக்கொண்டு, ஸுவேலாவுக்குப் பறந்தான்.
அப்படிச் செல்லுகையில், வஸிஷ்டருடன் நந்தி கிராமத்தில் தவமிருந்த பரதன் இந்த ஒளி பொருந்திய மலையைக் கண்டு, ராம., லக்ஷ்மணர்க்கு ஏதோ ஆபத்து நிகழ்கிறதோ என எண்ணி, அந்த மலையின் மீது ஒரு அம்பை எய்தான். அது மலையைப் பிளந்து, அனுமனின் கரத்தையும் தாக்கியது. 'ராம், ராம்' எனச் சொல்லிக்கொண்டே மாருதி கீழே விழ, அந்த ஒலியைக் கேட்ட பரதன், 'நீ யார்?' என அந்த வானரத்தைக் கேட்டான். நடந்த அனைத்தையும் விவரித்து, லக்ஷ்மணனைக் காப்பாற்றவே இந்த மலையைத் தான் எடுத்துக்கொண்டு போகும் விவரத்தை மாருதி சொல்லி,' இப்போது நான் என்ன செய்யட்டும்? விடிவதற்குள் என்னால் ஸுவேலா செல்ல முடியாது. நான் செல்லவில்லையென்றால், லக்ஷ்மணனைக் காப்பாற்றவும் முடியாது' என வருந்தினான்.
'[ராம காரியத்துக்காக்ச் செல்லும்] நீ  கவலைப் படாதே. ஆயிரம் யோஜனை தூரத்திலிருந்தாலும், அந்த ஸுவேலாவிற்கு உன்னையும், இந்த மலையையும் இப்போதே இந்த அம்பின் மூலம் அனுப்பி வைக்கிறேன். நீ இந்த அம்பின் மீது உட்கார்' என பரதன் ஆறுதல் அளித்தான். பரதனின் நம்பிக்கையையும், ஆற்றலையும் கண்ட மாருதி மிகவும் வியந்து, 'நீ கவலைப் படாதே. நானே அங்கு சென்றிடுவேன்' எனச் சொல்லி, அவனிடமிருந்து விடைபெற்று, துரோணகிரி மலையுடன் ஸுவேலா நோக்கிப் பாய்ந்தான்.
அவன் கொண்டு வந்த மலையிலிருந்து, அமிர்தம் இருக்கும் மூலிகைச் செடியை ஸுசேனன் கண்டுபிடித்து, லக்ஷ்மணனை உயிர்ப்பித்தான். அதே போலவே, மற்ற வானரர்களையும் உயிர் பிழைக்கச் செய்தான். ஸுசேனன் இதைச் செய்ததும், மாருதி, துரோணகிரியை எடுத்துச் சென்று, மீண்டும் அதை அதன் இடத்திலேயே வைத்துத் திரும்பினான். அப்படிச் செல்லுகையில் ராவணன் அசுரர்களை அனுப்பி, அந்த மலையை மாருதி கையிலிருந்து பிடுங்க முயற்சிக்க, ஒரு கையில் அந்த மலையைத் தாங்கிக்கொண்டே, மறு கையால் அசுரர்கள் அனைவரையும் மாருதி கொன்றழித்தான்.   

[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.