Monday, May 21, 2012

Rama Vijaya- Chapter-53

ராம விஜயம் -- 53

உடனேயே ஒரு தேரில் ஸீதையை அமர்த்தி, ஜானவி நதிக்கரை ஓரமாக அதைச் செலுத்தினான். செல்லும் வழியில் சில அபசகுனங்களைக் கண்ட ஸீதை, லக்ஷ்மணனிடம் அவை பற்றிக் கவலை தெரிவித்தாள். ஒரு வார்த்தையும் பேச முடியாமல், கனத்த மனத்துடன் மௌனமாக லக்ஷ்மணன் தேரை ஓட்டினான். மௌனமாகவும், வருத்தமாகவும் அவன் இருப்பதைக் கண்ட ஸீதை, அவனைப் பார்த்து,' நீ ஏன் இவ்வளவு வருத்தமாகக் காணப்படுகிறாய்? ஏன் என்னுடன் எதுவும் பேசாமல் வருகிறாய்?' எனக் கேட்டாள்.
அப்போதும் ஒன்றும் பேசாத லக்ஷ்மணன், தேரிலிருந்து இறங்கி, ஸீதையை ஒரு படகில் அமர்த்திக்கொண்டு, நதியின் அக்கரைக்குச் சென்று, மனிதர்கள் யாருமே இல்லாத வனாந்தரப் பகுதிக்கு அவளை கூட்டிச் சென்றான். அங்கே சிங்கங்கள், புலிகள், பாம்புகள் முதலான ஜீவராசிகளே வசித்தன. இந்தச் சூழலைக் கண்ட ஸீதை,' முனிவர்கள் வசிக்கும் ஆஸ்ரமம் எங்கே?' என வினவ, லக்ஷ்மணன் பதிலேதும் சொல்லாமல், தர்ப்பைகளால் ஆன ஒரு படுக்கையைத் தயார் செய்து அவளை அதில் அமரச் செய்தான்.
அவள் அமர்ந்ததும், அவளது பாதங்களில் விழுந்து, கண்களில் நீ வழிய, 'அம்மா, ராமன் தங்களை இந்த வனத்தில் தனியாக விட்டுவிட்டு வரச் சொல்லியிருக்கிறான். அவனது சொல்லைத் தட்ட முடியாமல், நான் தங்களை இங்கே கொண்டுவந்திருக்கிறேன்' எனக் கதறினான். இந்த சொற்களைக் கேட்டதுமே ஸீதை மயங்கிச் சரிந்தாள். சுயநினைவில்லாமல், ஸீதை மயங்கிக் கிடந்த அந்த நேரத்தில், தனியே கிடக்கும் ஸீதையை ஒரு ஆபத்தும் வராமல் காக்கவேண்டுமென அங்கிருந்த வன தேவதைகளையும், அங்கிருக்கும் ஒவ்வொரு ஜீவராசியையும் மனமுருகி வேண்டிக்கொண்டு, லக்ஷ்மணன் அங்கிருந்து அயோத்திக்குத் திரும்ப ஆயத்தமானான்.
அவன் ஒரு சில அடிகள் எடுத்து நகரும்போது, தனது மயக்கத்திலிருந்து கண் விழித்த ஸீதை, எழுந்து நின்று, லக்ஷ்மணனைப் பார்த்து, 'ஓ, லக்ஷ்மணா, திரும்ப வந்து என்னையும் உன்னுடனேயே கூட்டிச் செல். என் மீது எந்தத் தவறும் இல்லாதபோது, ஏன் இப்படி என்னைத் தனியே விட்டுச் செல்கிறாய்? இல்லாவிட்டால், என்னை இங்கேயே கொன்றுவிட்டு, அந்தச் செய்தியை உன் ராமனிடம் போய்ச் சொல். இந்தக் கொடிய வனத்தில் நான் எங்கே போவேன்?' என ஓலமிட்டு அழுதாள். அவளது ஓலத்தைக் கேட்டு அங்கிருந்த மரங்களும், பாறைகளும் கூடக் கண்ணீர் விட்டு அழுதன. ஒன்றும் சொல்லாமல், அவளைத் திரும்பிப் பாராமல் லக்ஷ்மணன் அயோத்திக்குத் திரும்பி, நடந்தவற்றை ராமனிடம் விவரித்தான்.
வெறும் கால்களுடன் ஸீதை அந்த வனத்தில் இங்குமங்குமாகத் திரிந்தலைந்தாள். தங்குவதற்கென ஒரு இடமும் அங்கில்லை. அடிக்கடி மயங்கி வீழ்ந்தாள். 'இவ்வுலகில் இனி வாழ்வதில் பயனேதும் இல்லை. நான் அப்போதே தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், இப்போது அதுவும் செய்ய இயலாமல் இருக்கிறேன். அப்படி செய்துகொண்டால், தற்கொலை, கொலை என இரு குற்றங்களைச் செய்தவளாவேன். ஏனெனில், இப்போது என்னுள் வளரும் சிசுவும் என்னோடு இறந்துபடும்' எனப் புலம்பினாள். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தையும் கைவிட்டாள்.
அவளது இந்தப் புலம்பல் வால்மீகி என்னும் முனிவரின் காதுகளில் விழுந்தது. ஸீதையைத் தேடிவந்து கண்டு, 'யாரம்மா நீ? எதனால் இங்கு வந்து திரிகிறாய்?' எனக் கேட்டார். 'ஜனகபுத்ரியும், ராமனின் மனைவியுமான ஸீதை நான். எந்தத் தவறும் இழைக்காத போதிலும், என்னை லக்ஷ்மணன் இங்கே கொண்டுவந்து விட்டுவிட்டான். யாருமில்லாத அனாதையாக நிற்கும் எனக்கு நீங்களே ஒரு தந்தையாக இருந்து என்னை ரக்ஷிக்க வேண்டுகிறேன்' எனப் பிரார்த்தித்தாள். 'என் பெயர் வால்மீகி. ராமனுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஜனகனும் எனது நண்பனே. அதனால் உன்னை எனது மகளாகவே பார்க்கிறேன். உனக்கு இரண்டு பிள்ளைகள் பிறப்பார்கள். அவர்களது தந்தையை விடவும் பலவான்களாக அவர்கள் விளங்குவார்கள். எந்தத் தவறும் செய்யாத உன்னை இந்த நிலையில் இந்த வனத்தில் விட்டவர்களை அவர்கள் பழி வாங்கி வெல்வார்கள்.' என ஆறுதல் கூறித் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றதும், அங்கிருந்த முனிவர்கள் அங்கு வந்து, 'யார் இந்தப் பெண்?' என விசாரித்தனர். 'இவள் ஸீதை' என வால்மீகி அறிமுகம் செய்தார். 'இவளை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறீர். இவளால் உமக்கு மேலும் கஷ்டங்களே வந்து சேரும்' என அந்த ரிஷிகள் மேலும் தொடர்ந்தனர். அவர்களில் ஒருவர், 'இவள் ஸீதை என்றால், அந்த நதியை இங்கே கொண்டுவரச் சொல்லுங்கள்' எனச் சவால் விட, ஸீதை அந்த நதியைக் குறித்து வேண்டியதும், உடனே அந்த நதி அவர்கள் இருந்த பக்கமாக வளைந்து வந்து பெருகியது. அதைக் கண்டு முனிவர்கள் எல்லாம் பயந்து, தங்களைக் காக்குமாறு அவளை வேண்ட, மீண்டும் ஸீதை அந்த நதியிடம் திரும்பிப் போகுமாறு வேண்ட, அது தனது பழைய பாதைக்கே திரும்பியது.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51 
52  53  54  55  56  57  58  59

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.