Thursday, May 10, 2012

Rama Vijaya - Chapter- 42

ராம விஜயம் --42




அப்படி வெட்டப்பட்ட உடலின் ஒரு பாகங்களில், ஒரு கரம் பறந்து, இந்திரஜித்தின் மனைவியும், ஆதிசேஷனின் மகளுமான ஸுலோசனாவின் அந்தப்புரத்தில் விழுந்தது. இந்திரஜித்தின் தலையை வானரர்கள் தங்களது முகாமுக்கு மகிழ்வுடன் கொண்டு சென்றனர். அந்தத் தலையைப் பத்திரமாகப் பாதுகாக்கும்படியும், அதை வேண்டிவரும் ஒரு பெண்ணிடம் உரிய மரியாதைகளுடன் கொடுக்கும்படியும் ராமன் உத்தரவிட்டான்.
ஸுலோசனா தனது அறையிலிருந்து வெளிவந்தாள். அங்கே விழுந்து கிடந்த ஒரு கரத்தைக் கண்டாள். அது தனது கணவனின் கை என்பதை அறிந்தாள். என்ன நடந்திருக்குமென யூகித்து, மிகுந்த வருத்தமடைந்து புலம்பினாள். அந்த்க் கையை எடுத்து அணைத்துக்கொண்டு,'என்னன்பே, நீ எப்படி இறந்தாய் எனச் சொல்? நான் கற்புடையவள், என்பது உண்மையானால், ராமனுடன் நீ புரிந்த போரைப் பற்றிய ஒரு குறிப்பை இந்தக் கரத்தால் எனக்கு எழுதிக் காட்டு' என அரற்றிக் கொண்டே, ஒரு எழுதுகோலையும், எழுதுவதற்கான உபகரணங்களையும் அதன் முன் வைத்தாள்.
நடந்த போரின் அனைத்தையும் விவரமாக அந்தக் கரம் எழுதி, தனது சிரம் இப்போது ஸுவேலாவில் இருக்கும் செய்தியைச் சொன்னது. அதைப் படித்த ஸுலோசனா மிகவும் வருத்தமுற்று அழுது, அந்தக் கரத்தை ராவணனிடம் கொண்டு சென்றாள். வெட்டுண்ட தனது மகனின் கரத்தையும், நடந்த விவரங்களையும் அறிந்த ராவணன் மயக்கமடைந்தான். மண்டோதரி வந்து தன் மகனின் மரணச் செய்தியைக் கேட்டு, அழுது புலம்பினாள்.
'நான் இப்போதே இப்போதே எனது கணவனுடன் உடன்கட்டை ஏறப் போகிறேன். அந்தக் குரங்குகளிடமிருந்து எனது கணவனின் தலையை வாங்கி வருமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என வேண்டினாள். தனது மருமகளின் இந்த வேண்டுகோளைக் கேட்ட ராவணன் மிகவும் வருத்தமுற்றான். அதே சமயம், வானரர்கள் மீது பெருத்த சினமுற்றான். மருமகளைப் பார்த்து, 'என் மகளே, அந்தத் தலையை நான் கொண்டு வந்து தருகிறேன். அதைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போதே நான் ராமனுடன் போருக்குச் செல்வேன். அவனைக் கொன்றழிக்காமல் திரும்ப மாட்டேன்' எனச் சூளுரைத்து போருக்கான ஆயத்தங்களைச் செய்யுமாறுத் தனது வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
அப்போது மண்டோதரி ஸுலோசனையிடம்,'ராமனுடன் போரிடத் தேவையில்லை. நீ மட்டும் தனியே சென்று அவனிடம் கேட்டால், அவன் உனக்கு என் மகனின் தலையைத் தந்துவிடுவான். அவன் மிகவும் கருணையுள்ளவன்' எனச் சொன்னாள். 'இந்த அபலைப் பெண் அங்கே தனியே சென்றால், அவளுக்கு என்ன பாதுகாப்பு?' என ராவணன் கேட்க, 'ராமனின் சேனையில் இருக்கும் ஒரு குரங்கு கூட, அடுத்தவன் மனைவியைத் தொடக்கூட நினைக்காது' என வெறுப்புடன் சொல்ல, ராவணன் அந்த வார்த்தைகளைக் கேட்டு, அவமானத்தால் தனது முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு, ஸுலோசனையை ராமனிடம் செல்ல அனுமதித்தான்.
ஸுலோசனா தனியளாக வானரர்கள் முகாமுக்குச் செல்ல, அவர்கள் ராமனிடம் அவளை அழைத்துச் சென்றனர். அரசகுமாரனிடம், 'நான் இந்திரஜித்தின் மனைவி. எனது கணவனின் தலையை இங்கிருந்து பெற்றுச் சென்று, அதனுடன் உடன்கட்டை ஏறித் தீக்குளிக்கவென வந்திருக்கிறேன். எனவே, அதை என்னிடம் தருமாறு வேண்டுகிறேன்' என முறையிட்டாள். 'அந்தத் தலை உன் கணவனுடையதுதான் என உனக்கு எப்படித் தெரியும்?' என வானரர் வினவினர். நிகும்பலையில் நடந்தவற்றை அவள் விவரிக்க, அதைக் கேட்ட வானரர்கள், ' நீ சொல்வதை எங்களால் நம்ப முடியாது. ஒரு உயிரற்ற கரம் உனக்கு எழுதிக் காண்பித்தது என்பது கொஞ்சம் கூட நம்பத் தகாதது. இதோ நீ கேட்ட, நீ சொல்லுகின்ற உனது கணவனின் சிரம். உன்னால் முடிந்தால், அதைச் சிரிக்கச் செய். அப்போதுதான் நாங்கள் நம்புவோம்' என்றனர்.
அவர்கள் சொன்னதைக் கேட்டு மிகவும் மனம் வருந்தி அழுத ஸுலோசனை,'' என்னுயிர்க் கணவனே, நான் இப்போது மிகுந்த சங்கடத்தில் இருக்கிறேன். இந்தக் குரங்குகள் எனது கற்பைச் சோதிக்க நினைக்கின்றனர். நீ மட்டும் இப்போது சிரிக்கவில்லையென்றால், என்னை ஒரு இழிந்த பெண்ணாகவே கருதி எள்ளி நகையாடுவர்' எனத் தன் கணவனின் தலையைக் கட்டிக்கொண்டு கதறினாள். அவள் எவ்வளவு கதறியும் அந்தத் தலை சிரிக்கவில்லை.
மனம் நொந்துபோன ஸுலோசனை, 'நான் ஒரு மிகப் பெரிய தவறு இழைத்து விட்டேன். நான் மட்டும் எனது தந்தையான ஆதிசேஷனை உதவிக்கு அழைத்திருந்தால், நீ காப்பாற்றப் பட்டிருப்பாய்' என அழுதாள். அதைக் கேட்டதும் இந்திரஜித்தின் தலை அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கியது. 'இதென்ன அதிசயம்? எவ்வளவோ சோகமாக இந்தப் பெண் கதறிக் கேட்டபோதெல்லாம் சிரிக்காத இந்தத் தலை இந்த 'சேஷன்' என்னும் வார்த்தயைக் கேட்டவுடன் இப்படி சிரிக்கிறதே! இந்த வார்த்தைகளில் என்ன ரகசியம் இருக்கிறது?' என வானரர்கள் வியந்தனர்.
'ஸுலோசனை ஆதிசேஷனின் மகள். லக்ஷ்மணனோ ஆதிசேஷனின் அவதாரம். மாமனே மருமகனைக் கொன்றிருந்தும் அவன் காப்பாற்றி இருப்பான் என இவள் சொன்னதும், அந்தத் தலையால் தனது சிரிப்பை அடக்க முடியவில்லை' என ராமன் அவர்களுக்கு விளக்கினான். வானரர்களிடம் இந்த விளக்கத்தை ராமன் சொன்னதைக் கேட்ட லக்ஷ்மணன், 'தனது மருமகனைத் தானே கொன்றுவிட்டோமே' என மிகவும் வருந்தினான். இதைக் கண்ட ராமன், லக்ஷ்மணன் விரும்பினால், அப்போதே இந்திரஜித்தை மீண்டும் உயிர்பிக்கத் தான் தயாராக இருப்பதாகச் சொன்னான். ஆனால், இதர வானரர்கள் கேட்டதற்கிணங்க, அவ்வாறு செய்யவில்லை.
ஸுலோசனையைப் போற்றி, இந்திரஜித்தின் தலையை அவளிடம் வானரர்கள் கொடுத்தனுப்பினர். அதை எடுத்துக்கொண்டு, கடற்கரைக்கு வந்து மரக்கட்டைகளை அடுக்கி சிதை மூட்டி, தன் கணவனின் தலையுடன் ஸுலோசனா சிதைக்களம் புகுந்தாள். தனது குடும்பத்தினருடன் அந்தக் கொடுமையான காட்சியைக் கண்ட ராவணன் மிகவும் மன வருத்தம் அடைந்து, இலங்கைக்குத் திரும்பினான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.