Saturday, May 12, 2012

Rama Vijaya- Chapter-44

ராம விஜயம் --44



ஆனால், அங்கே காவல் காத்த அசுரர்கள் இந்த "யாத்ரீகர்"களின் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளாமல், அவர்களை மேலே செல்லக்கூடாதென விரட்டத் தொடங்கினர். மாருதி கோபமுற்று, அந்த அசுரர்களைத் தனது வாலினால் கட்டி இழுத்துக் கடலில் வீசியெறிந்தான். அந்தப் படைகளின் தலைவன் மகரத்வஜன், இதைக் கண்டு, அனுமனுடன் பொருதினான். அவனையும் தனது வாலில் கட்டிக் கீழே தள்ளி, அவன் மார்பின் மேல் மாருதி அமர்ந்தான். அந்த நேரத்தில், மகரத்வஜன் மிகவும் அலறவே, 'உன்னைக் காப்பாற்ற இங்கே எவராயினும் இருக்கிறார்களா?' என மாருதி கேட்க, அதற்கு, 'எனது தந்தை மாருதி மட்டும் இங்கே இருந்திருந்தால், இந்நேரம் உனது உயிரை வாங்கி, என்னைக் காப்பாற்றி
இருப்பார்' என மகரத்வஜன் சொன்னான்.

இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே, மாருதி திடுக்கிட்டான். சட்டென அவன் மார்பிலிருந்து எழுந்து நின்று, 'இதோ பார். நான்தான் மாருதி. நான் ஒரு தீவிர பிரம்மச்சாரி. அப்படி இருக்க, நான் எப்படி உனது தந்தையாக இருக்க முடியும்? நீ எனக்குப் பிறந்தவன்தான் நீ என எதனால் கூறுகிறாய் விளக்கமாகச் சொல்' என அதட்டினான். 'இலங்கையை எரித்துவிட்டு நீங்கள் பறந்து சென்றபோது, உங்களது உடலிலிருந்து விழுந்த வியர்வையின் ஒரு சொட்டு, கடலில் முதலையாக இருந்த என் தாயின் வாயில் விழ, அவளது கர்ப்பத்திலிருந்து பிறந்தவன் நான்' என மகரத்வஜன் பதிலிறுத்தான். அவன் சொன்ன விவரத்தைக் கேட்ட அனுமன் ஆச்சரியமடைந்து, தன் மகனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தான். அப்போது [ஸுவர்ச்சலா தேவி என்னும்] அவனது தாய் அங்கே வந்து, மாருதியைப் பணிந்து, 'சென்ற முறை நான் பார்த்தபோது உனது உடல் மிகப் பெரியதாக இருந்ததே. இப்போது நீ மிகவும் சிறியவனாகத் தெரிகிறாயே. நீதானா நான் பார்த்த மாருதி என எனக்கு ஐயமாக இருக்கிறது' என வியந்து சொன்னாள். அதைக் கேட்ட அனுமன் தனது விஸ்வரூபத்தை அவளுக்குக் காட்டி, அவளது சந்தேகத்தைப் போக்கினான். அவளிடம் ராம, லக்ஷ்மணர்களைப் பற்றி விசாரித்தான். 'அஹிராவணனும், மஹிராவணனும் சகோதரர்கள். மிகவும் கொடுமையான, அசுரர்கள். நீ கேட்ட ராம, லக்ஷ்மணர்களை அவர்கள் வஞ்சகமாகக் கவர்ந்து வந்து மஹிகாவதியில் ஒளித்து வைத்திருக்கின்றனர். நாளை அவர்களது குலதேவதைக்கு அவர்களைப் பலியிட நிச்சயித்திருக்கிறார்கள். எனவே, நீ இப்போதே அந்த ஆலயத்துக்குச் சென்று, உன்னை மறைத்துக்கொண்டு இரு. அந்த அரசகுமாரர்களை நீ காணுவாய்' என 'மகரி' [முதலை] சொன்னாள். 'கவலைப்படாதே. நான் அந்த அசுரர்களைக் கொன்று, மஹிகாவதியை நமது குமாரனுக்குத் தருகிறேன்' என மாருதி வாக்களித்தான். 'மஹிகாவதி இங்கிருந்து சுமார் 13 யோஜனை தொலைவில் இருக்கிறது. அதை அடைய, நீ ஒரு பரந்த கடலைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த சமயத்தில் அது உன்னால் இயலாத காரியம். எனவே, நீ உனது துணைவர்களுடன் எனது வாய்க்குள் அமர்ந்து கொள். நான் உங்களை அங்கு கொண்டு சேர்க்கிறேன்' என மகரி சொல்ல, நளன், நீலன், அங்கதன், ஜாம்பவான் முதலானோர், எங்கே அப்படிச் செய்தால், மஹிகாவதி செல்லும் வழியில், அந்த முதலை தங்களை விழுங்கிவிடுமோ எனப் பயந்தனர். எனவே அவர்கள் மகரியின் அன்பான வேண்டுகோளை நிராகரித்து, சமுத்திரக் கரையிலேயே தங்கிவிட்டனர். மாருதி மட்டும் விண்ணில் பறந்து, கடலைத் தாண்டி,அக்கரை அடைந்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.