Wednesday, May 9, 2012

Rama Vijaya -Chapter- 41

ராம விஜயம் --41இந்த நேரத்தில், இந்திரஜித் மீண்டும் தனது மந்திர சக்தியால் ஸீதை போன்ற உருவுடைய ஒரு பெண்ணைப் படைத்து, அவளைத் தனது தேரில் அமர்த்திக்கொண்டு, யுத்தகளத்துக்கு வந்தான். எல்லா வானரங்களுக்கும் கேட்கும்படியாக, உரத்த குரலில், 'இதோ பாருங்கள். இந்தப் பாவிப் பெண்ணால்தான் எனது தந்தை இத்தனைத் துன்பங்களுக்கு ஆளானார். இவளது தலை வெட்டப்பட்டால், எல்லாம் சரியாகி, அமைதி திரும்பும். பிறகு நமக்குள் போர் என்பதே இருக்காது' எனச் சொல்லி, அந்த மாய உருவின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
பிறகு அங்கிருந்து கிளம்பி, தனது நாடான நிகும்பலைக்குச் சென்று, புதிதாக ஒரு யாகத்தை ஆரம்பித்தான். தனது இஷ்ட தேவதையைத் திருப்தி செய்து, சர்வ வல்லமை பொருந்திய ஒரு திவ்ய ரதத்தையும், அதற்கான குதிரைகளையும், வலிமை வாய்ந்த ஆயுதங்களையும் அவளிடமிருந்து பெறுவதே அந்த யாகத்தின் நோக்கம். ஒரு தனிமையான, யாருமே வரமுடியாத இடத்துக்குச் சென்று, காவலுக்குப் பல அசுரர்களை நியமித்துவிட்டு, தனது யாகத்தைத் தொடங்கினான். யாகத்திற்கெனப் பல மறையோர்களையும், பசுக்களையும் கொன்று, அவர்களின் ரத்தத்தைத் தனது உடல் முழுதும் பூசிக்கொண்டு, அவர்களது பிணங்களின் மீது அமர்ந்து யாகம் செய்யத் தொடங்கினான். பிணங்களின் தலைகளை அறுத்து யாகத்தில் ஆகுதி கொடுத்தான். அவனது இந்தக் கோரமான யாகத்தில் மகிழ்ந்த அந்த தேவதை, அவன் விரும்பியவண்ணமே ஒரு திவ்ய ரதத்தை அந்த யாககுண்டத்திலிருந்து கொடுக்கத் துவங்கியது. கிட்டத்தட்ட பாதிக்கும் மேலாக அந்த திவ்யரதம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
இந்திரஜித் வெட்டியது ஸீதையைத்தான் என நம்பிய மாருதி, அந்தத் துயரச் செய்தியை ராம, லக்ஷ்மணர்களிடம் தெரிவிக்க, அவர்கள் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கினர். அப்போது விபீஷணன் அவசரமாக அங்கே ஓடிவந்து, இந்திரஜித் வெட்டியது மாய ஸீதையின் உருவையே எனவும், ஸீதை பத்திரமாக அசோக வனத்தில் இருக்கும் செய்தியையும் சொல்லி, தற்போது இந்திரஜித் செய்துகொண்டிருக்கும் யாகத்தைப் பற்றியும் பதட்டத்துடன் தெரிவித்தான். 'பாதிக்கும் மேலாக அந்த திவ்யரதம் வெளிவந்து விட்டது. அது முழுவதுமாக வந்துவிட்டால், அதன் பிறகு அவனை யாராலுமே வெல்ல இயலாது. எனவே நீங்கள் இப்போதே உடனடியாக நிகும்பலைக்குச் சென்று,அந்த யாகத்தை அழிக்க வேண்டும். அப்போதுதான் அந்த ரதம் இந்திரஜித்தின் கைகளில் கிட்டாமல் மறைந்து போகும். அது மட்டுமல்ல. அபடி அந்த ரதம் அவனுக்குக் கிடைக்காமல் போனால், அவன் உங்கள் மீது கோபமுற்று, சண்டைக்கு வருவான். எவரொருவர் 12 ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல் விரதம் இருந்திருக்கிறார்களோ, அவர்களைத் தவிர வேறு எவராலும் அவனைப் போரில் வெல்ல இயலாது.' என எச்சரித்தான்.
விபீஷணன் சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டதும், ராமன் நிமிர்ந்து லக்ஷ்மணனை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தான். கானகம் செல்லத் தன்னுடன் கிளம்பிய நாள் முதலாய், ஊன் உறக்கம் எதுவுமின்றி, 14 வருஷங்களாய்த் தனக்குப் பணிவிடை செய்து வருபவன் லக்ஷ்மணன் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தால், மாருதி, சுக்ரீவன் இன்னும் பல வானரங்கள் துணையுடன் உடனே சென்று, நிகும்பலா யாகத்தை அழிக்க அவனை ராமன் அனுப்பி வைத்தான்.
அண்ணனின் ஆணைக்கு இணங்க, லக்ஷ்மணனும் அவ்வாறே நிகும்பலை சென்று, ரத்தத்தையும் , யாகத்தையும் அழித்தான். அந்தக் களிப்பில் வானர்கள் பெருங்கூச்சலிட்டுக் கத்த, அந்தச் சத்தத்தில் இந்திரஜித் தனது நிஷ்டை கலைந்து கண் விழித்தான். யாகமும், வந்துகொண்டிருந்த திவ்யரதமும் நிர்மூலமானது கண்டு, மிகவும் கோபமடைந்து, வருணாஸ்திரத்தைப் பிரயோகித்து, பெருமழையை உண்டாக்கி லக்ஷ்மணனின் சேனைக்குப் பெருத்த சேதம் விளைவித்தான்.
லக்ஷ்மணன் உடனே வாயு அஸ்திரத்தை ஏவி, பெருங்காற்றை உருவாக்கி, அந்த மேகங்களைக் கலைத்து, மழையை நிறுத்தினான்.
இந்திரஜித் பதிலுக்கு, மலைகளை உருவாக்கும் அஸ்திரத்தை எய்து, பெரிய மலைகளால் அந்தக் காற்றைத் தடுத்தான்.
லஷ்மணன் பதிலடியாக, வஜ்ராஸ்திரத்தை ஏவி, அந்த மலைகளைப் பொடிப்பொடியாக்கினான்.
மிகவும் ஆத்திரமடைந்த இந்திரஜித், உடனே அக்னி அஸ்திரத்தை எய்து, கொடுந்தீயை உருவாக்கி வானர சேனையை வாட்டினான்.
லக்ஷ்மணனோ உடனே அலைகடல் பொங்கும் ஸமுத்திரங்களை உருவாக்கும் அஸ்திரத்தால் அந்தத் தீயை அணைத்து முறியடித்தான்.
இறுதியாக ஒரே நேரத்தில் முட்களாலான ஐந்து அம்புகளைத் தொடுக்கும் அஸ்திரத்தை லக்ஷ்மணன் மீது ஏவினான். அதைக் கண்ட விபீஷணன் அந்த அஸ்திரத்தைத் தனது கதாயுதத்தால் தடுத்தான். அந்த அஸ்திரம் விபீஷணனைச் சென்று தாக்கியது.
லக்ஷ்மணன் ஒரு வலிய அஸ்திரத்தை எய்து, இந்திரஜித்தின் தலையைப் பலமாகத் தாக்கினான். அவனது தேர் முறிந்து நொறுங்கியது. தேர்க்குதிரைகளை ஜாம்பவான் கொன்றழித்தான்.
தரையில் கிடந்த வேளையிலும், இந்திரஜித் தீரமாகப் போரிட்டான். அவன் மீது வானரர்கள் எறிந்த மலைகள், மரங்கள் முதலானவற்றைத் தனது அம்புகளால் தடுத்து அழித்தான். மந்திர சக்தியால் வானில் பறந்து, மேகங்களுக்கிடையே தன்னை மறைத்துக்கொண்டு, வானரப் படைகளின் மீது சரமாரியாக அம்புகளை எய்து, பெருத்த சேதம் விளைவித்தான்.
அதைக் கண்ட மாருதி, லக்ஷ்மனைத் தனது உள்ளங்கையில் ஏந்திக்கொண்டு வானில் பறந்து இந்திரஜித்துடன் பொருதச் செய்தான். உடனே இந்திரஜித் மீண்டும் பூமிக்கு வந்து போரிட்டான். மாருதியும் லக்ஷ்மணனுடன் தரைக்குத் திரும்பினான். இருவரும் கடும் போர் புரிந்தனர்.
இறுதியில்,லக்ஷ்மணன் ஒரு அஸ்திரத்தைத் தொடுத்து, இந்திரஜித்தின் தொடைகள், வயிறு, கரங்கள், தலை எனத் தனித் தனியாகப் பிளந்தழித்தான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.