Tuesday, May 22, 2012

Rama VIjaya -Chapter- 54

ராம விஜயம்  -- 54


தனது ஆஸ்ரமத்தில் ஸீதையை வைத்து, வால்மீகி முனிவர் அன்புடன் அவளைக் கவனித்துக்கொண்டார். ஒன்பது மதங்கள் கழிந்த பின்னர், ஒரு நண்பகல் நேரத்தில், சூரியனைப் போன்ற தேஜஸுடன் இரு ஆண் மகவுகளை ஈன்றெடுத்தாள். அங்கிருந்த ரிஷிபத்தினிகள் அவளுக்குத் துணையாக இருந்தனர். முதலில் பிறந்தது இளைய மகன், அடுத்து வந்தது மூத்த மகன். வால்மீகியின் சீடர்கள் அவரிடம் சென்று, இரட்டைப் பிள்ளைகள் பிறந்த செய்தியைத் தெரிவித்தனர். உடனே அவர் ஆஸ்ரமத்துக்கு வந்து, முறைப்படி சடங்குகளைச் செய்தார். இளைய மகனின் மீது குசம் என்னும் தர்ப்பையால் புனித நீரைத் தெளித்து, அவனுக்கு 'குசன்' என நாமம் சூட்டினார். லவம் என்னும் தர்ப்பைப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த மூத்தவனுக்கு 'லவன்' எனப் பெயரிட்டார்.
லவ, குசர்களுக்கு எட்டு வயதானபோது, அவர்களுக்கு உபநயன விரதம் செய்வித்து, அனைத்து ரிஷிகளையும் அழைத்து, விமரிசையாக நான்கு நாட்கள் அவர்களை உபசரித்தார். அவரது ஆஸ்ரமத்தில் இருந்த காமதேனு என்னும் பசு அவர்களுக்குத் தேவையானவற்றையெல்லாம் தந்திருந்தது. முறைப்படி, வேதங்களையும், மந்திரங்களையும், புராணங்களையும், ராமாயணத்தையும் கற்றுக்கொடுத்து, தனுர்வித்தையையும் பயில்வித்தார். அனைத்திலும் நல்ல தேர்ச்சி பெற்று விளங்கி, ஏனைய ரிஷிகுமாரகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக் காலம் கழித்தனர். பத்து வயதிலேயே, காட்டுக்குச் சென்று, மிருகங்களை வேட்டையாடி, அவற்றை ஆஸ்ரமத்திற்குக் கொணர்ந்து தங்கள் திறமையைக் காட்டினர்.
ஒருமுறை, அப்படி வேட்டைக்குச் சென்றபோது, ஒரு மான் வடிவில் ஒரு மலை மீது அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த ஒரு முனிவரைக் குசன் கொன்று விட்டான். அவர் உண்மையில் வால்மீகியின் தம்பி ஆவார். வால்மீகியிடம் அந்த உடலை இழுத்துக்கொண்டு வந்து பெருமையாகக் காட்டியபோது, 'என்ன இது?' என அவர் கேட்க, 'நீங்கள் அமர வசதியாக இருக்குமென இந்த மானை வேட்டையாடிக் கொண்டு வந்திருக்கிறோம்' எனப் பதிலிறுத்தனர். ஆனால், அந்த மானைப் பார்த்ததும், அது தனது தம்பி என அறிந்துகொண்ட வால்மீகி, ' இப்போது இவ்விருவரும் மிகவும் தைரியசாலிகளாக ஆகிவிட்டனர். ப்ரஹ்மத்தை அறிந்த ஒருவரையே கொன்று விட்டார்களே' எனத் தனக்குள் சொல்லிக்கொண்டு, தனது தம்பியின் ஈமச் சடங்குகளைச் செய்து, லவ,குசர்களின் வீரதீரத்தைப் பற்றி ஸீதையிடம் தெரிவித்தார். 'நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? நீங்கள்தான் அவர்களுக்கு எல்லா வித்தைகளையும் கற்றுக்கொடுத்து, இப்படி வளர்த்து விட்டீர்கள். நீங்கள்தான் அவர்களை இந்தக் கொடிய பாவத்திலிருந்து விடுவிக்க வேண்டும், தந்தையே' என வேண்டிக் கொண்டாள்.
'ஆயிரம் பிரஹ்மகமலங்களைக் கொண்டுவந்து, உள்ளன்புடன் சிவனை வழிபட்டாலொழிய, இந்தப் பாவத்திலிருந்து அவர்களால் விடுபட இயலாது' என்று வால்மீகி உரைக்க, 'அந்த பிரஹ்ம கமலங்கள் எங்கு இருக்கின்றன என சொல்லுங்கள். நாங்கள் இப்போதே அவற்றைக் கொண்டு வருகிறோம்,' என பிள்ளைகள் இருவரும் முனிவரிடம் கேட்டனர். அயோத்திக்குப் பக்கத்தில் பிரஹ்மஸரோவர் என்னும் ஒரு தடாகம் இருக்கிறது. அங்குதான் இந்தத் தாமரைப் பூக்கள் இருக்கின்றன. ஆனால், அந்தத் தடாகம் ராமனின் வீரர்களால் பலமாகக் காவல் காக்கப்படுகிறது. ராமன் செய்யும் சிவ பூஜைக்கு இந்த மலர்கள் பயன்படுத்தப் படுகின்றன.' என வால்மீகி விளக்கினார். 'ப்பூ, இவ்வளவுதானா? நாங்கள் இப்போதே அந்தக் கமலங்களைக் கொண்டு வருகிறோம். எத்தனை வீரர்கள் அங்கு காவலுக்கு இருந்தாலும் கவலையில்லை. அவர்களைத் தண்டித்து, முடிந்தால் அந்த ராமனையும் கூடப் பிடித்து வந்து விடுகிறோம்.' என லவனும், குசனும் வீரமாகச் சொல்லிவிட்டு பிரம்ஹ ஸரோவரை நோக்கிக் கிளம்பினர்.
குசன் சென்று கமலங்களை பறிக்கலானான். அப்போது அதைத் தடுக்கவந்த காவலாளிகளை லவன் எதிர்கொண்டு அவர்களில் பலரைக் கொன்றான். தப்பிப் பிழைத்த சில வீரர்கள் ராமனிடம் சென்று நடந்ததைக் கூற, அந்தச் சிறுவர்களின் வீரத்தைக் கேட்டு, ராமன் ஆச்ச்சரியமடைந்தான். லவ, குசர்கள் பிரஹ்ம கமலங்களைக் கொண்டுவந்து, வால்மீகி முனிவர் சொன்னவண்ணம் சிவ பூஜை செய்து, பிரஹ்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட்டனர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51 
52  53  54  55  56  57  58  59

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.