Wednesday, May 23, 2012

Rama VIjaya- Chapter-55

ராம விஜயம் -- 55


ஒருநாள் சிறுவர்கள் இருவரும் தங்களது அன்னையின் காலைப் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும்போது, குசன் ஸீதையைப் பார்த்து,' நாங்கள் எந்த நாட்டில் பிறந்தோம்? நமது குலம் என்ன? யார் எங்களது தந்தை?' எனக் கேட்டான். 'தஸரதன் என்னும் அயோத்தி மன்னருக்கு, ராமன், லக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் எனும் நான்கு பிள்ளைகள். அவர்கள் சூரிய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் மூத்தவரான ராமன் என்பவரே உங்களது தந்தை. ஏதோ ஒரு வண்ணான் என்னைப் பற்றி அவதூறு கூறினான் என்பதற்காக உங்கள் தந்தை என்னை இந்தக் காட்டுக்குத் தனியாக அனுப்பி விட்டார்.' என்ச் சொல்லி ஸீதை கண்ணீர் வடித்தாள். இதைக் கேட்டதும் ராமன் மீது இரு பிள்ளைகளும் மிகவும் ஆத்திரமடைந்தனர். தங்களது தாயைத் தேற்றினர்.
ராமன் ஸீதைக்கு இழைத்த அநீதியின் காரணமாக அந்நாட்டில் பனிரண்டு வருடங்களாகக் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. அதனால், மக்களும், இதர ஜீவராசிகளும் மிகவும் வாடினர். எப்போதாவதுதான் ஆங்காங்கே மழை பெய்தது. ராமன் இந்நிலையைக் கண்டு மிகவும் அச்சமடைந்து, தனது குலகுருவான வஸிஷ்டரிடம் இதற்கானக் காரணத்தைக் கேட்டான். ' கற்பின் சிகரமான ஸீதையை அநியாயமாகக் காட்டில் விட்டுவிட்டாய்.அதனால்தான் இந்தப் பஞ்சம்.இது தீர வேண்டுமெனில் நீ அஸ்வமேத யாகம் ஒன்று செய்தாக வேண்டும்' என குலகுரு வழி சொன்னார்.
அதன்படியே, ஸரயூ நதிக்கரையில் ஒரு யோஜனை நீளத்துக்கு ஒரு மண்டபம் நிர்மாணித்து, அந்த யாகத்துக்காக பல நாட்டு அரசர்களையும், விபீஷணனையும், சுக்ரீவன், நலன், நீலன், ஷரபன், கோவக்ஷன், மாருதி என அனைத்து வானரர்களையும் வரவழைத்தான். முறைப்படி யாக காரியங்களைச் செய்த ராமன், மிக உத்தமமான ஷ்யாமகர்ணா என்னும் பெயருள்ள ஒரு குதிரையைத் தனது லாயத்திலிருந்து வரவழைத்து, அதை மண்டபத்தின் நடுவே நிறுத்தினான். ஒரு தங்கப் பட்டயத்தில் 'தஸரதனின் மகனும், அயோத்தியின் சக்கரவர்த்தியுமான ராமன் ஷ்யாமகர்ணா என்னும் இந்தக் குதிரையை அனுப்பியிருக்கிறான். சத்ருக்னன் தலைமையில் ஒரு பெரும் படையுடன், இந்தக் குதிரை பாதுகாக்கப் படுகிறது. வலிமையுள்ள எந்த அரசனேனும் இந்தக் குதிரையைப் பிடித்துக் கட்ட எண்ணினால், இதன் உரிமையாளருடன் சண்டையிட்டு வெல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால், அவருக்கு அடிபணிந்து, கப்பம் கட்ட வேண்டும்' எனப் பொறித்துக் அதன் முகத்தில் கட்டினார்.
ராமன் அந்தக் குதிரைக்கு உரிய மரியாதைகளைச் செய்து, அதை வணங்கி, சத்ருக்னனுக்குத் துணையாக பல லட்சம் வீரர்களை அனுப்பி, அந்தக் குதிரையின் பின் செல்லப் பணித்தான். அதன் பிறகு மண்டபத்தில் அமர்ந்து சுக்ரீவன், விபீஷணன், மாருதி முதலானோர் துணை நிற்க, யாகச் சடங்குகளைத் தொடர்ந்தான். லக்ஷ்மணன், பரதன், ஸுமந்திரன் முதலானோர், யாகத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கவனித்துக் கொண்டனர்.
ஐம்பத்தாறு தேச மன்னர்களை சத்ருக்னன் பணியச் செய்து, ராமன் புகழ் பாடியபடியே அவர்கள் பின்தொடர, குதிரையின் திக்விஜயத்தை நடத்திச் சென்றான். கம்பீரமாக நடந்து சென்ற ஷ்யாமகர்ணா வால்மீகி முனிவர் இருக்குமிடத்தை அடைந்தது. அப்போது வால்மீகி முனிவர் பாதாள லோகத்தில் நடைபெறும் ஒரு யாகத்துக்குச் சென்றிருந்தார். போகுமுன், லவ, குசர்களை அழைத்து, ஆஸ்ரமத்தைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படிச் சொல்லிச் சென்றார்.
பாலகர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், கம்பீரமாக நடை போட்டுக்கொண்டு வந்திருந்த ஷ்யாமகர்ணாவை லவன் பார்த்து, தனது நண்பர்களுக்குக் காட்டினான். அதன் முகத்திலிருந்த தங்கப் பட்டயத்தில் எழுதியிருந்ததைப் படித்துக் காட்டினான். படித்ததும், அடக்க முடியாமல் சிரித்தான். 'ராமன் ஒருவன்தான் இவ்வுலகிலேயே பலவானோ? ப்பூ... இந்தக் குதிரையை இப்போதே நான் பிடித்துக் கட்டுகிறேன். யார் என்னுடன் வந்து சண்டை போட்டு, இந்தக் குதிரையைத் திரும்பவும் எடுத்துக் கொள்கிறார்கள் எனப் பார்க்கிறேன்' எனச் சொல்லியபடியே, அந்தக் குதிரையை அங்கிருந்த ஒரு வாழை மரத்தில் கட்டினான். அதைக் கண்ட உடனிருந்த ரிஷிகுமாரர்கள் பயந்துபோய், 'இந்தக் குதிரை ஒரு மாமன்னனுக்குச் சொந்தமானதென நினைக்கிறோம். என்ன தைரியம் இருந்தால், இந்தக் குதிரையை நீ கட்டிப் போடுவாய்? அந்த ராஜா மட்டும் இப்போது இங்கு வந்து, யாரிந்தக் குதிரையைக் கட்டிப் போட்டது எனக் கேட்டால், உன் பெயரைத் தான் சொல்லி விடுவோம்' எனப் பதறினர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51 
52  53  54  55  56  57  58  59

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.