Sunday, May 13, 2012

Rama Vijaya -Chapter-45

ராம விஜயம் --45
மஹிகாவதி சென்றடைந்ததும், மாருதி தன்னை மிகவும் சிறிய அளவில குறுக்கிக்கொண்டு, அசுரர்களின் குலதேவதை ஆலயத்தைச் சென்றடைந்தான். அந்தத் தேவதையை உடனே அப்புறப்படுத்தி ஒரு சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு, அந்த தேவதையின் உருவை எடுத்துக்கொண்டு, அதன் இடத்தில் தான் சென்றமர்ந்தான். அவனது வீரத்தைக் கண்டு பயந்த அந்தத் தேவதை உயிருக்குப் பயந்து, ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நடுநடுங்கியது.
அசுரர்கள் அங்கே வந்து, வழக்கம்போல, புழுங்கலரிசி சாதம், பால், தயிர், வெண்ணை எனப் பலவற்றையும் கொண்டுவந்து படைக்க, அவற்றையெல்லாம் மாருதி வயிறு புடைக்கத் தின்று முடித்தான். அசுரர்களைப் பார்த்து, 'நீங்கள் கொண்டுவந்த படையல்களால் நான் மிகவும் திருப்தியுற்றேன். எனக்குக் காலை உணவாக ராம, லக்ஷ்மணர் என்னும் இருவரைக் கொண்டுவந்திருப்பதாக அறிந்து, மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். காலம் தாழ்த்தாது அவர்கள் இருவரையும் இங்கே கொண்டுவந்து, என் முன்னே படையுங்கள். ஆலயத்தின் கதவுகளைத் தாழிட்டுச் சென்று விடுங்கள். ஏனெனில், அவ்விருவரையும் நான் அழிக்கும்போது, என்னுடைய மஹிமையை உங்களால் காண இயலாது. ஆலயச் சுவற்றில்  ஒரு துவாரம் ஏற்படுத்தி, அவர்களை உள்ளே தள்ளிவிடுங்கள். நான் அவர்களை
நன்றாக ருசித்து உண்டுவிடுகிறேன். அவர்களை உடனே உயிரோடு இங்கே கொண்டு
வாருங்கள்' என ஆணையிட்டான்.
அஹிராவணனும், மஹிராவணனும் அசுரர்கள் கொண்டுவந்த அந்தச் செய்தியைக் கேட்டதும், ராம,லக்ஷ்மணர்களை மயக்கத்திலிருந்து எழுப்பி கோவில் வாசலுக்குக் கொண்டு வந்தனர். தேவதை ஆணையிட்டபடியே, ஒரு துவாரம் ஏற்படுத்தி, அவ்விருவரையும் உள்ளே தள்ளினர். தனது வாயைக் கோரமாகத் திறந்து, 'நான் மிகவும் பசியுடன் இருக்கிறேன்; இந்தக் கணமே உங்களைத் தின்னப் போகிறேன். அதற்கு முன்னர், உங்களைக் காப்பாற்ற இங்கு யாராவது இருக்கின்றனரா எனச் சொல்லுங்கள்' என அந்தத் தேவதை [வெளியே இருப்பவர்கள் கேட்கும்படியாக] கர்ஜனை செய்ய ராம, லக்ஷ்மணர்களே ஒரு கணம் நிலை குலைந்து போயினர்.
'எனதருமை மாருதி மட்டும் இங்கே இருந்தால், அவன் நிச்சயம் எங்களது உதவிக்கு வந்திருப்பான். இப்போதோ, எங்களுக்கு எந்தவொரு வழியும் இல்லை' என அரசகுமாரன் சொன்னதைக் கேட்டதும், மனமுருகிய மாருதி, தன் சுய உருவைக் காட்டி, அவர்களைப் பணிந்தான். 'இப்போது என்னிடம் எந்த ஆயுதங்களும் இல்லையே. எப்படி நான் அந்த அசுரர்களைக் கொல்வது?' என ராமன் கேட்க, 'நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதோ ஒரு நொடியில் அவற்றைக் கொண்டுவந்த தருகிறேன்' என மாருதி சொல்லிவிட்டு, ஸுவேலாவுக்குப் பறந்து சென்று, ராம, லக்ஷ்மணர்களின் வில், அம்புகளைக் கொண்டுவந்து அவர்கள் முன் சமர்ப்பித்தான். மிகவும் பசியுடனிருந்த அவர்களுக்கு, தான் சேமித்து வைத்திருந்த பால், வெண்ணை இன்னும் பல பலகாரங்களை அவர்களுக்கு அளித்த பசியாற்றினான்.
அவர்களது பசியைத் தீர்த்ததும், மீண்டும் ஆலயத்தின் தேவதையின் பீடத்தில் அமர்ந்துகொண்டு, 'நான் இப்போது எனதருமை அசுரர்களை ஒருவர்பின் ஒருவராக ஆசீர்வதிக்கத் தயாராக இருக்கிறேன். முதலில் அஹிராவணன் வரட்டும்' என உரக்கக் கத்தினான். இருப்பவர்களில் அனைவருக்கும் முதலாவதாகத் தன்னை தேவதை அழைத்ததே என மகிழ்ந்த அஹிராவணன், சற்றும் நேரம் கடத்தாமல் உள்ளே வந்து தேவதையின் முன்னே நின்றான். தனது காலால் இடறி, மிதித்து அக்கணமே அவனை மாருதி கொன்றான். ஆசி வாங்கச் சென்றவன் இன்னமும் திரும்பவில்லையே என உணர்ந்த அசுரர்கள், உள்ளே ஏதோ விபரீதம் நிகழ்ந்திருக்கிறது என அஞ்சினர். அதைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கையில், மாருதி, ஆலயக் கதவுகளைத் திறந்துகொண்டு வெளியே பாய்ந்துவந்து, அதே வேகத்தில் பல அரக்கர்களைச் சாகடித்தான்.
தனது சகோதரனையும், இன்னும் பல அசுரர்களையும் ஒரு வானரம் அழித்துக் கொன்றுவிட்டது என்றறிந்த மஹிராவணன், மிகவும் கோபத்துடன் வந்து, சண்டையிடத் தொடங்கினான். அவன் விட்ட அம்புகளையெல்லாம் தங்களது வில்லம்புகளால் எதிர்கொண்டுத் தடுத்து, அவன் மீது ஒரு வலிமை வாய்ந்த பணத்தை ராமன் ஏவி, அவனைச் சாய்த்தான். ஆனால், அவர்களை அதிர்ச்சி அடையச் செய்யும் விதமாக, மஹிராவணனின் உடலிலிருந்து சொட்டிய ஒவ்வொரு ரத்தத் துளியிலிருந்தும் ஒரு மஹிராவணன் உற்பத்தியாகிக் கொண்டு எழுந்து போரிடத் துவங்கினான். அப்படி எதிர்வந்த அனைவரையும் ராம,லக்ஷ்மணர்கள் அழித்தபோதிலும், எண்ணிலடங்கா மஹிராவணர்கள் வந்துகொண்டே இருந்தனர்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.