Friday, May 25, 2012

Rama Vijaya- Chapter-57

ராம விஜயம் -- 57


காட்டிலிருந்து திரும்பிய குசன், லவனைக் காணாமல், தன் தாயிடம் வந்து விசாரித்தான். ஸீதை கண்ணீர் வடித்தபடி, லவனுக்கு நிகழ்ந்ததை விவரித்தாள். தனது சகோதரனுக்கு நடந்ததைக் கேட்டதும் தனது வில்லையும் அம்புகளையும் எடுத்துக்கொண்டு, சத்ருக்னனும், அவனது வீரர்களும் சென்ற திக்கில் ஓடினான். அவர்களைச் சத்தமிட்டு அழைத்து, 'யார் நீங்கள்? திருடர்களே, திருடிய பொருளை எங்கே எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள்?' எனக் கத்தியபடியே, அவர்கள் மீது அம்புகளை எய்தான்.
திரும்பிப் பார்த்த சத்ருக்னன்,' சிறுவனே, இதோ இப்போது உன்னையும் பிடித்து, கொண்டுசெல்லப் போகிறோம்' எனச் சொல்லிக்கொண்டே, குசன் மீது நான்கு அம்புகளை ஏவினான். ஆனால், அவற்றையெல்லாம் சட்டென முறியடித்து, ஒன்பது அம்புகளால், சத்ருக்னனது குதிரைகளையும், அவனது தேரையும் அழித்தான். மேலும் மூன்று அம்புகளை எய்து, அவனது கிரீடத்தையும், கவசத்தையும் தகர்த்தான். நிலத்தில் வீழ்ந்த சத்ருக்னன் குசனுடன் போரிட்டான். இரு வலிமை வாய்ந்த அம்புகளால், சத்ருக்னனின் இரு கைகளையும் வெட்டி, மற்றுமொரு அம்பால் அவனது தலையைத் துண்டித்தான்.
சத்ருக்னன் இறந்ததும், நாகேந்திரநாத் என்பவன் குசன் மீது இருபது அம்புகளைத் தொடுக்க, அவற்றையெல்லாம் ஒரே அம்பினால் தடுத்து, நாகேந்திரநாத்தின் தலையை ஒரு அர்த்த சந்திராஸ்திரத்தால் துண்டித்தான். அதைத் தொடர்ந்து வீரர்கள் மீது சரமாரியாக அம்பு மழை பொழிய, அவர்களால் அதை எதிர்கொள்ள முடியாமல், பல லட்சம் வீரர்களும், பிற மன்னர்களும், மாண்டனர். தனது சகோதரனைத் தேடிய குசன், இடிந்த தேருக்குள்ளே அவனைக் கண்டுபிடித்தான். மயக்கமுற்ற நிலையில் லவன் இருந்தான். அவனது மயக்கத்தைத் தெளிவித்து, அவனை அன்புடன் குசன் அணைத்துக்கொண்டான்.
'வா, ஷ்யாமகர்ணாவை அழைத்துக்கொண்டு வீடு திரும்பலாம்' என லவன் சொல்ல, 'வேண்டாம். இந்த விஷயம் கேள்விப்பட்டு, மேலும் பல வீரர்கள் நம்முடன் சண்டையிட வரக்கூடும். இப்போது வீடு திரும்புவது ஆபத்தானது. இந்தக் குதிரையை மீட்டுச்செல்ல, வேறு யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களையும் அழித்துவிட்டு, பிறகு ஆஸ்ரமத்துக்குச் செல்லலாம்' எனக் குசன் பதில் சொன்னான்.
காயமடைந்து, தப்பிப் பிழைத்த சில வீரர்கள் ராமனிடம் சென்று, சத்ருக்னனும், பல லட்சம் வீரர்களும், பிற நாட்டு மன்னர்களும் இரு ரிஷிபுத்திரர்களால் கொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ராமன், உடனே லக்ஷ்மணன் தலைமையில் ஒரு பெரும் படையை அந்த இடத்துக்கு அனுப்பினான். அழகே உருவான அந்த இரு பாலகர்களையும் பார்த்த லக்ஷ்மணன், அவர்களது வீரத்தைக் கண்டு வியந்தான். கூடியிருந்த வீரர்களெல்லாம், 'அந்தச் சிறுவர்களைப் பிடியுங்கள். இப்போது எங்கே ஓடி ஒளிவார்கள்' எனக் கூச்சலிட்டனர்.
லவனும், குசனும் சூரிய பகவானை நோக்கிப் பிரார்த்திக்க, அவர்களது பிரார்த்தனையில் மகிழ்ந்த சூரிய பகவான் ஒரு வலிமையான அஸ்திரத்தை அவர்களுக்குக் கொடுத்தான். அந்த அஸ்திரத்தை ஏவி, லக்ஷ்மணனின் படைவீரர்களில் பெரும்பாலோனாரை லவன் கொன்றழித்தான். அதைக் கண்ட லக்ஷ்மணன், தன்னருகே நின்ற காலஜித் என்னும் தளபதியிடம், ' இந்த இரு பாலகரும் ஒன்றாக நின்று போர் புரியும்வரை, நம்மால் அவர்களை வெல்ல இயலாது. எனவே அவ்விருவரையும் பிரித்து, ஒவ்வொருவராகப் பிடிக்கலாம்' எனச் சொல்லித் தன் வீரர்களை அவ்விருவருக்கும் நடுவே அனுப்பினான். ஆனால், லவன் விட்ட ஒரு அஸ்திரம், பல கோடி அம்புகளாகப் பிரிந்து அந்தப் படையை நிர்மூலமாக்கியது.
லக்ஷ்மணனின் இந்த தர்மசங்கடமான நிலையைக் ருதி என்னும் ஒரு அசுரன் கண்டான். இவன் ராமனிடம் பேரன்பு கொண்டவன். ருதி உடனே வானத்தில் பாய்ந்து, சட்டெனக் கீழிறங்கி, லவன் கையிலிருந்த வில்லினைக் கவர்ந்துகொண்டு, மீண்டும் ஒரு பறவையென வானில் பறந்தான். சற்றும் தயங்காமல், லவனும் உடனே அவனை நோக்கி வானில் எழும்பினான். அந்த அசுரனின் தலைமயிரைப் பிடித்திழுத்து, அவனை இரு சக்கரம் போலச் சுழற்றித் தரையில் அடித்துக் கொன்றான்.
இதைக் கண்டு வெகுண்ட லக்ஷ்மணன் மின்னலைப் போல வலிமையுள்ள ஐந்து அம்புகளை அந்தச் சிறுவர்கள் மீது ஏவினான். ஆனால், அதை ஒரே கணத்தில் லவன் தடுத்தெறிந்தான். லக்ஷ்மணனைப் பார்த்து, 'ஒரு காலத்தில் இந்திரஜித் என்னும் வலிமையான அசுரனை அடித்து வீழ்த்திய பலவானாமே நீர்! எங்கே இப்போது உம்முடைய வீரத்தை நாங்கள் பார்க்கிறோம். பதினான்கு ஆண்டுகள் எதுவுமே உண்ணாமல் இருந்தவராமே நீங்கள்? பாவம் உங்களுக்கு இப்போது ஓய்வு தேவையென நினைக்கிறோம். அதை இப்போதே தரவும் போகிறோம்' என லவன் கூறினான்.

[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51 
52  53  54  55  56  57  58  59

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.