Monday, April 2, 2012

Rama Vijaya- Chapter-10

ராம விஜயம்- 10


பத்மாக்ஷன் எனும் ஒரு மாமன்னன் இருந்தான். திருமாலின் மனைவியான மஹாலக்ஷ்மியிடம், லக்ஷ்மியே தன் குடும்பத்தில் பிறந்து,தனக்கே மகளாகவும் பிறக்க வேண்டுமென வேண்டினான். அவனைப் பார்த்து மஹாலக்ஷ்மி, 'நான் உன் குடும்பத்தில் உனக்கு மகளாகப் பிறந்தால், உனக்குத் துன்பமே நேரிடும். உனக்கு மகளாவதில் எனக்கு ஒரு ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இதற்கு எனது பதியின் அனுமதி வேண்டும்' எனச் சொன்னாள். இதைக் கேட்ட மன்னன், மஹாவிஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த திருமால் அவன் முன் தோன்றி ஒரு பழத்தை அளித்தார். மகிழ்வுடன் அதைத் தனது அரண்மனைக்கு எடுத்துச் சென்று, அதனைப் பத்திரமாகப் பாதுகாத்தான். ஒன்பது மாதங்கள் கழித்து அந்தப் பழத்திலிருந்து ஒரு அழகிய பெண் மகவு உதித்தது. அது சாக்ஷாத் மஹாலக்ஷ்மியே.
மிகவும் மனமகிழ்ந்த மன்னன், அந்தக் குழந்தைக்கு பத்மாக்ஷி எனப் பெயரிட்டு அன்புடன் வளர்த்தான். சீருடன் வளர்ந்து திருமண வயதும் வந்தது. பல மன்னர்களும் தேவர்களும் அவளை மணக்க வேண்டி மன்னனைக் கேட்டனர். தனது மகளை நீல வண்ணத்தில் இருக்கும் ஒருவருக்கே மணம் முடிக்க விரும்புவதாகச் சொல்லி அவர்களை மறுத்து அனுப்பி விட்டான். இதனால் கோபமடைந்த மன்னர்கள் எல்லாருமாகச் சேர்ந்து வஞ்சகமாக பத்மாக்ஷனைக் கொலை செய்தனர். அவனது மகள் பத்மாக்ஷி ஒரு யாகம் வளர்த்து, எரியும் அந்தத் தீயில் தன்னை அர்ப்பணம் செய்தாள். அவள் அப்படிக் குதிக்கும்போது, அவளைப் பார்த்த ராவணன் அவளது அழகில் மயங்கி, அவளைக் காப்பாற்ற அந்தத் தீயை விரைவாக அணைத்தான். ஆனால் அதற்குள் பத்மாக்ஷி மறைந்து போனாள்.
அந்த யாக குண்டத்தில் கண்ட ஐந்து இரத்தினங்களை எடுத்து வந்து, அவற்றைத் தன் மனைவி மண்டோதரியிடம் கொடுத்தான். அவர்கள் இருவரும் அந்த ஐந்து இரத்தினங்களையும் ஒரு பெட்டியிலிட்டுப் பாதுகாத்தனர். சில நாட்களுக்குப் பிறகு, தற்செயலாக அதைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். ஆசையுடன் அந்தக் குழந்தையை ராவணன் தூக்க, மண்டோதரி, ' இந்தக் குழந்தையை நாம் இங்கே வைத்துக் கொண்டால், இந்த இலங்கை முற்றிலுமாக எரிந்து போகும் என எனக்குப் பயமாக இருக்கிறது. பத்மாக்ஷனின் ராஜ்ஜியமே இந்தக் குழந்தையால்தான் அழிந்து போனது. இவளை மணக்க நினைத்த அரசர்களாலும், தேவர்களாலும் அந்த மாமன்னன் கொல்லப் பட்டான். அதனால் இந்தக் குழந்தையை இந்தப் பெட்டியுடன் சேர்த்து எங்காவது கண்காணாத இடத்தில் எறிந்து விடுங்கள்' எனப் பதட்டப் பட்டாள்.
அதைக் கேட்ட ராவணன் மிரண்டுபோய், தனது மந்திரியை அழைத்து, அந்தப் பெட்டியை தனது ஜன்மவைரியான ஜனகரின் ராஜ்ஜியத்தில் எங்காவது புதைத்து விடுமாறு ஆணையிட்டான். மந்திரியும் தனது பணியாட்களை அழைத்து, ராவணன் சொன்னது போலவே செய்யுமாறு ஏவினான்.அந்தப் பெட்டியைப் பணியாட்கள் தூக்கியபோது, அதற்குள்ளிருந்த குழந்தை, 'நான் இங்கே திரும்பவும் வருவேன். எல்லா அசுரர்களையும் அழிப்பேன்' எனச் சொல்லிச் சிரித்தது. இதைக் கேட்ட ராவணன் ஆத்திரமடைந்து அப்போதே அந்தக் குழந்தையைக் கொல்லத் துணிந்தான். ஆனால், மண்டோதரி அவனைத் தடுத்து விட்டாள்.
இரவோடு இரவாக, அந்தப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, ஜனகரின் நாட்டில் இருக்கும் ஒரு அந்தணனின் வயலில் புதைக்கப்பட்டது. ஒருநாள் அந்த அந்தணன் தன் வயலை உழுதுகொண்டிருக்கும்போது அந்தப் பெட்டியைக் கண்டெடுத்து, அதை ஜனகரிடம் சென்று கொடுத்தான். அந்தப் பெட்டி திறக்கப்பட்டது. அதிலிருந்து அனைவரும் வியக்கும் வண்ணம், ஒரு அழகான ஐந்து வயதுப் பெண் இருந்தாள்.அவளைப் பார்த்ததுமே ஜனகர் மனம் அன்பினால் நிறைந்தது. ஸீதை எனப் பெயரிட்டு, தனது மகளாகவே அந்தப் பெண்ணை வளர்க்கத் தொடங்கினான்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.