Monday, April 2, 2012

Rama Vijaya- Chapter-5


ராம விஜயம் -- 5
இந்த சமயத்தில், அயோத்தியில் கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. பன்னிரண்டு ஆண்டுகளாக மழையே இல்லாமல் போனதால், பசியாலும், தாகத்தாலும் வாடிய மக்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். வ்ருஷபர்வன் என்னும் அசுரன், தனது குரு சுக்ராச்சாரியாரின் உதவியோடு, தேவர்களுடன் வானுலகத்தில் கடும் போர் நிகழ்த்தியதன் விளைவாகத்தான், இப்படி மழை பொழியாமல் நின்று போனது. இந்திரன் ஒரு தேரினை அனுப்பி, தஸரதனை விண்ணகம் வந்து அசுரனோடு போர் செய்து அவனை அழிக்க வேண்டுமென வேண்டினான். மழை இல்லாமல் போனதன் காரணமும் இதுவே எனவும் சொல்லியனுப்பினான்.
தனக்கு மிகவும் பிரியமான மனைவியாகிய கைகேயியை உடனழைத்துக்கொண்டு, தஸரதன் அந்தத் தேரில் ஏறிப் போருக்குக் கிளம்பினான். தேவலோகம் சென்றவுடனேயே, அசுரர்களுடன் போர் செய்து அவர்களில் பலரையும் கொன்றான். வ்ருஷபர்வன் எதிர்த்து சண்டையிட, அவனையும் விரட்டியடித்தான்.
இதைக் கண்ட அசுரகுரு சுக்ராச்சாரியார் போர்க்களத்துக்கு வந்து தஸரதனுடன் பொருதினார்.அவர் தொடுத்த சரங்களால் தஸரதனின் தேர் நிலைகுலைந்து போனது. அநேகமாக உடைந்துபோகும் நிலையில் இருந்தத் தேரைத் தன் இரு கைகளாலும் தாங்கியபடியே கைகேயி பேருதவி புரிந்தாள். இந்த விஷயம் தஸரதனுக்கு அப்போது தெரியாது.  தீரத்துடன் போர் புரிந்த தஸரதன், அசுரகுருவின் புரவிகளை வெட்டி வீழ்த்தி, அவரது மகுடத்தையும் சாய்த்தான். அலறியடித்துக்கொண்டு சுக்ராச்சாரியார் எஞ்சியிருந்த அசுரர்களை திரட்டிக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
இதெல்லாம் நடந்து முடிந்த பின்னர், அவன் பெற்ற வெற்றிக்குக் காரணம் கைகேயியின் தீரச் செயலே என்பதை உடனிருந்தவர்கள் அவனுக்குத் தெரியப் படுத்தினர். மனமகிழ்ந்த தஸரதன் அவள் விரும்புவதைத் தருவதாக வாக்களித்தான். 'நான் எதைக் கேட்டாலும் அதைத் தட்டாது தருவேன் எனும் வாக்குறுதி மட்டும் இப்போது கொடுங்கள். எனக்கு விருப்பமானபோது நான் அவற்றைக் கேட்கிறேன்' என கைகேயி பதில் சொன்னாள்.அப்படியே தருவதாக மன்னன் மீண்டும் சத்தியம் செய்தான்.
கைகேயியால் இப்படி ஒரு தீரச் செயல் செய்ய முடிந்ததற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கைகேயி சிறு வயதினளாக இருக்கும்போது, ஒரு தபஸ்வீ அவர்களது இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கினார்.  அவர் குளிக்கும்போது, வாஸனைத் திரவியங்களை அவருக்குத் தேய்த்து விடும்படி அவளது தாய் கைகேயியை அனுப்பினாள். கைகேயியும் அப்படியே வாஸனைத் திரவியங்களை எடுத்துக்கொண்டு சென்றாள். ஆனால், அந்தத் தபஸ்வீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு,  வாசனைத் திரவித்திற்குப் பதிலாக, சேற்றை அள்ளி அவர் முகத்தில் பூசி விட்டாள்.
தன் முகத்தில் சேறு பூசியிருப்பதைக் கண்டு கோபமுற்ற அந்த முனிவர், 'யார் இதை என் முகத்தில் பூசினார்களோ, அவர்களை இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் வெறுப்புடனே பார்க்கக் கடவது' எனச் சாபம் இட்டார்.  தன் மகளின் குறும்புத்தனத்தால் விளைந்த இந்தச் சாபத்தைக் கேட்டு பயந்து நடுங்கிய தாய், முனிவரின் கால்களில் விழுந்து, சாபத்தின் கடுமையைச் சற்றுக் குறைக்குமாறு வேண்டினாள். சாந்தமுற்ற தபஸ்வீ, 'எந்தக் கைகளால் உன் மகள் என் முகத்தில் சேற்றைப் பூசினாளோ, அதே கைகள் அவளது கணவனுக்கு அசுரர்களுடன் அவன் நடத்தும் ஒரு போரில் வெற்றியைத் தேடித்தரும். இந்த ஒரே ஒரு செயலுக்காக மட்டும் ஊரார் அவளைப் புகழ்வார்கள்' என உரைத்தார்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.