Sunday, April 22, 2012

Rama Vijaya - Chapter- 24

ராம விஜயம் -- 24

 

காட்டுக்குள் ராமனைத் தேடிக் கண்டுபிடித்த லக்ஷ்மணன், தனக்கும், ஸீதைக்கும் இடையே நிகழ்ந்ததை விவரித்தான். அழுத லக்ஷ்மணனை ராமன் தேற்றினான். இருவரும் பர்ணசாலைக்குத் திரும்பினர். அங்கே ஸீதையைக் காணாமல், கலவரமடைந்து, அவளைத் தேடத் தொடங்கினர். ஆனல் ஸீதையைக் காணவில்லை. அகஸ்திய முனிவரிடம் சென்று, நடந்ததைக் கூற, அவர், ராவணனால் ஸீதை கடத்தப்பட்ட விவரத்தைச் சொன்னார். தங்களது இருப்பிடத்துக்குத் திரும்பிய அவர்கள், ஸீதை, மற்றும் அந்த அரக்கனின் காலடித் தடயங்களைக் கண்டனர். அவற்றைப் பின்தொடர்ந்து, காட்டில் ஸீதையைத் தேடிச் சென்றனர்.
செல்லும் வழியில், தரையில் வீழ்ந்து கிடந்த ஜடாயுவைக் கண்டனர். நடந்த விவரங்களை அந்தக் கழுகு விவரித்தது. 'நான் எனது சக்தி, வீரம் அனைத்தையும் திரட்டி அந்தக் கொடிய அசுரனை எதிர்த்தேன். ஆனால், தந்திரமாக எனது உயிர் ரகசியத்தைத் தெரிந்து கொண்ட உடனேயே, எனது இறக்கைகளை வெட்டி என்னைக் குற்றுயிரும், குலையுயிருமாக நிலத்தில் விழச் செய்துவிட்டு, தப்பி ஓடி விட்டான்' எனச் சொல்லியவாறே தன் உயிரை விட்டது ஜடாயு. மிகவும் மனம் வருந்திய ராமன், ஜடாயுவின் ஈமச் சடங்குகளைச் செய்தான்.
அதன் பின்னர் இருவரும் மீண்டும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். செல்லும் வழியில், பரமசிவனின் மனைவியான பார்வதி, ஸீதையின் உருவெடுத்துக் கொண்டு, அவர்கள் எதிரே நின்றாள். ஆனால், எதிரே நிற்பது பார்வதி என அறிந்த ராமன், அவளைப் பொருட்படுத்தவில்லை.
இன்னும் சற்றுத் தொலைவு சென்றதும், கபந்தன் என்னும் ஒரு பெரிய அசுரனைக் கண்டனர். பதினெட்டு யோஜனை தூரத்துக்குத் தன் கைகளை விரித்துக் கொண்டும், தன் உடலிலிருந்து தலையைத் தனியே கழற்றி வைத்துக் கொண்டும் அந்தக் காட்டுக்குள் அவன் வாழ்ந்து வந்தான். அவன் ஒரு அசுரன் என்றுணர்ந்த ராமன், கபந்தனது கைகளை வெட்டி வீழ்த்தி, அந்த அசுரனை ஒரு கணத்தில் கொன்று விட்டான். இந்தக் கபந்தன் காஷ்யப ரிஷியின் மகன். குடி மயக்கத்தில் ஒரு நாள் ஸ்தூலஷீரா என்னும் மற்றொரு ரிஷியை அவன் மிரட்ட, கோபமடைந்த அந்த முனிவர் அவனை இப்படிச் சபித்து, ராமனின் கையால் அவனுக்கு விமோசனம் கிடைக்கும் எனச் சொல்லியிருந்தார். சாப விமோசனம் பெற்ற கபந்தன் தனது இயல்பான வடிவில் ராமன் எதிரே நின்றான். இந்திர பதவியை அடைய வேண்டித் தான் கடுந்தவம் புரிந்தபோது, அதனால் கோபமுற்ற இந்திரன் வஜ்ராயுதத்தால், தனது தலையைத் தனியே வெட்டி விட்டான் என்னும் கதையை ராமனிடம் சொன்னான்.
தங்களது பயணத்தைத் தொடர்ந்து செல்லும் வழியில், ராவணன் அனுப்பிய அந்தப் பதினெட்டு அசுரர்களையும் கொன்றழித்து, பம்பா தீரத்தை அடைந்தனர். அங்கே ஒரு ஆலமர நிழலில் இளைப்பாறினர். தொலைவில் இருந்த ரிஷ்யமுகப் பர்வதத்திலிருந்த அந்த ஐந்து வானரங்களும் இவர்களைப் பார்த்தனர். 'என்னைக் கொல்வதற்காகத்தான் எனது அண்ணன் வாலி இந்த இரண்டு வீரர்களையும் அனுப்பியிருக்கிறான் போலத் தோன்றுகிறது' என அச்சத்துடன் சுக்ரீவன் சொல்லி, அங்கிருந்து ஓடத் தொடங்கினான். ' நீ அஞ்சாதே. நான் சென்று, இவர்கள் யாரென விசாரித்து வருகிறேன்' என மாருதி அவனுக்குத் தைரியம் கொடுத்துவிட்டு, அந்த ஆலமரத்துக்குத் தாவிச் சென்று, சில மரக் கிளைகளை ஒடித்து, ராம, லக்ஷ்மணர்கள் மீது எறிந்தான்.
தனது பாணங்களால் அவற்றை ராமன் முறியடித்ததும், மாருதி பெரிய மலைக்கற்களை எடுத்து எறிய, அவற்றையும் ஒரு நொடியில் பொடியாக்கிய ராமன், வானில் பறந்த வானரத்தையும் காயப் படுத்தினான். மாருதி கீழே விழும் சமயத்தில் அவனது தந்தையான வாயு அவனைத் தாங்கிப் பிடித்து, ராமனைப் பணியுமாறு அறிவுறுத்தினான். அதன்படியே தரைக்கு வந்த மாருதி, ராமனின் காலடியில் பணிந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்ட, கருணையுடன் அந்த இளவரசன் மாருதிக்கு மன்னிப்பளித்தான்.
ராமனின் அடியவர்களுள் மிகச் சிறந்தவனாக மாறிய மாருதி, ஒரு சமயம் ராமனுக்குப் பாதசேவை செய்து கொண்டிருக்கும்போது,' இந்தப் பகுதியை ஆண்டுகொண்டிருக்கும் வானர அரசனின் தம்பியான சுக்ரீவன் என்பவனை நான் தங்களுக்கு அறிமுகம் செய்ய விரும்புகிறேன். நீங்கள் அவனைக் காப்பாற்றுவேன் என வாக்களித்தால், நான் மிகவும் மன மகிழ்வேன்' எனச் சொன்னான். 'யாரிந்த சுக்ரீவன் என்பதை முதலில் சொல்' என ராமன் கேட்க, சுக்ரீவனின் கதையை அனுமன் ராம, லக்ஷ்மணர்களிடம் சொல்லத் தொடங்கினான்: 
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)
 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.