Wednesday, April 11, 2012

Rama Vijaya -Chapter-19

ராம விஜயம் -- 19ராமன் அகஸ்தியருடன் ஒரு மாத காலம் தங்கினான். அந்த சமயத்தில், அகஸ்தியர் ராமனுக்கு சில அஸ்திரங்களைத் தந்து, தக்க சமயத்தில் அவை உதவுமெனச் சொன்னார். தண்டகாரண்யத்திலிருந்து, ராமன் பஞ்சவடிக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில், ஜடாயு என்னும் ஒரு பெரிய பறவையைக் கண்டான். 'நீ யார்?' என ஜடாயு ராமனைக் கேட்க, 'சூரிய வம்சத்தைச் சேர்ந்த தஸரதன் என்னும் அரசனின் மகன் நான். என் பெயர் ராமன்' எனப் பதிலிறுத்தான். 'கஷா என்பவரின் மகன் நான். எனது மாமனின் பெயர் ஸுபர்ணன். என் பெயர் ஜடாயு. உனது தந்தை எனது உயிருக்குயிரான நண்பன். சுக்ரனுடன் அவன் செய்த போரில் நான் அவனுக்கு உதவி செய்தேன். அதனால், அவன் என்னை அவன் தனது சஹோதரன் எனச் சொன்னான்' என ஜடாயு சொன்னான்.
ஜடாயுவைக் கட்டித் தழுவி, அவனது ஆசிகளைப் பெற்றபின், பஞ்சவடி நோக்கியத் தனது பயணத்தை ராமன் தொடர்ந்தான். பஞ்சவடியை அடைந்தது, லக்ஷ்மணன் நிர்மாணித்த பர்ணசாலையில், ராமன் ஸீதையுடன் வசிக்கத் தொடங்கினான். பழங்களையும், கிழங்குகளையும் சேகரித்து லக்ஷ்மணன் கொண்டுவர, மூவரும் அங்கே தங்களது நாட்களைக் கழித்தனர். அசுரர்களிடமிருந்து அந்தக் குடிசையைக் காப்பாற்றவென, லக்ஷ்மணன் இரவில் காவல் காத்து, தான் ஏதும் உண்ணாமல் இருந்தான்.
ஒருநாள் லக்ஷ்மணன் ஒரு புதரருகில் சென்று, கிழங்குகள் எடுக்கப் போனான். அப்போது, எங்கிருந்தோ ஒரு பயங்கரமான ஆயுதம் மேலே இருந்து வந்து லக்ஷ்மணன் நின்றிருந்த அந்தப் புதரின் மேல் விழுந்தது. மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் அந்தப் புதரை இரு துண்டுகளாக வெட்டியது. அது மட்டுமின்றி, அதிலிருந்து பெருத்த உதிரமும் பெருகியது. தவத்தில் ஆழ்ந்திருந்த யாரோ ஒரு பெரிய முனிவரைத் தான் கொன்று விட்டதாக அஞ்சிய லக்ஷ்மணன்,பதட்டத்துடன் ராமனிடம் சென்று நடந்ததைக் கூறினான்.
அதைக் கேட்ட ராமன், 'தம்பி, பயப்படாதே. அங்கிருந்து பெருகும் ரத்தம் சபரி என்னும் அசுரனுடையது. ஸூர்ப்பனகை என்னும் ராவணின் தங்கையின் மகன் இந்த சபரி. சிவனிடமிருந்து பெறற்கரிய ஒரு அஸ்திரத்தைப் பெறுவதற்காக எவரும் அறியாத வகையில் ஒரு கடும் தவம் செய்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்து சிவனும் அவன் கேட்ட அந்த ஆயுதத்தை அவனிடம் அனுப்பி வைத்தார். அது மட்டும் அவன் கையில் கிடைத்திருந்தால், அவன் இந்த உலகத்தையே மிகவும் துன்புறுத்தியிருப்பான். அது உன் கையில் கிடைத்ததே என அந்தக் கடவுளுக்கு நன்றி சொல். அந்த ஆயுதத்தை தகுந்த முறையில் காப்பாற்று' எனச் சமாதானம் சொன்னான். அதைக் கேட்ட லக்ஷ்மணன் மிகவும் மகிழ்ந்து, களிப்புடன் தனது பணியைத் தொடரலானான்.
சபரி கொல்லப்பட்ட அன்று, சூர்ப்பனகை தனது மகனுக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது போல ஒரு கனவு கண்டாள். திடுக்கிட்டு விழித்த அவள், தன்னுடன் கூட நான்கு ராக்ஷஸிகளை அழைத்துக் கொண்டு, தன் மகனைத் தேடிக் காட்டில் அலைந்தாள். பல இடங்களிலும் தேடிய பின்னர், இறுதியில் அந்தப் புதரருகே வந்தாள். அங்கு வழிந்தோடிய ரத்தத்தைக் கண்டு, அங்குமிங்குமாய் அலைந்து கடைசியில், தனது மகன் இரு துண்டங்களாக வெட்டப் பட்டிருப்பதைக் கண்டாள். அந்தக் கோரக் காட்சியைக் கண்ட கணமே அவள் மயக்கமுற்று வீழ்ந்தாள். விழித்தெழுந்ததும் பெருங்கூச்சலிட்டு உரக்க அழுதாள். அவள் கூட வந்திருந்த நான்கு அரக்கிகளும் அவளைத் தேற்றினர். தனது மகனின் உடலை எரித்த பின்னர், இந்தக் கொடுஞ்செயலைச் செய்தவனைத் தேடிச் சென்றனர்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya)


To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.