Sunday, April 29, 2012

Rama Vijaya -Chapter- 31


ராம விஜயம் -- 31
 

தன் மகனுக்கு நேர்ந்த இந்த அவமானத்தைக் கேள்விப்பட்ட ராவணன், பிரம்மதேவரை நோக்கி, 'பாரும், இந்திரஜித் இப்போது ஆபத்தில் மாட்டிக் கொண்டான். நீரே நேரடியாகச் என்றால்தான், அந்தக் குரங்கைக் கட்டுப்படுத்த முடியும். எனவே, இந்தக் காரியத்தை நீர்தான் செய்ய வேண்டுமெனக் கட்டளை இடுகிறேன்' என்று கத்தினான். அதைக் கேட்ட பிரம்மதேவரும் அந்தக் குகைக்குச் செல்ல, அங்கே இந்திரஜித் அவமானம் தாங்கமுடியாமல், தனது தலையைக் கவிழ்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். ' அந்தக் குரங்கை நீர் பிடித்தாலொழிய, நான் இந்தக் குகையை விட்டு வெளியே வரமாட்டேன்.' என இந்திரஜித் அவரிடம் சொல்ல, தனது பிரம்மபாஸத்தை ஏவி, மாருதியைக் கட்டினார்.
மாருதி நினைத்திருந்தால், ஒரு நொடியில் அந்தக் கட்டிலிருந்து வெளியே வந்திருக்க முடியும். ஆனல் அப்படிச் செய்யாமல், அதற்குக் கட்டுண்டு, தன்னை ராவண சபைக்குக் கொண்டு செல்ல இசைந்தான். இந்திரஜித் சபையில், தானே அந்தக் குரங்கைப் பிடித்ததாகப் பெருமை பீற்றிக் கொண்டான். ராவணன் அமர்ந்திருந்த ஸிம்மாஸனத்தை விடவும் உயரமானதாகத் தனது வாலை வளர்த்து, அதன் மீது ஏறி மாருதி கம்பீரமாக அமர்ந்து கொண்டான். 'யார் நீ? யார் உன் தலைவன்?' என ராவணன் ஆத்திரமாகக் கேட்டான்.
'ஜனகரின் சபையில் உன் உயிரைக் காப்பாற்றிய அந்த இளவரசரின் சேவகன் நான். அவரே உனது தங்கையின் மூக்கையும் அரிந்தவர். நீ ஒரு கொடூரமானவன். நீ அவரது மனைவியான ஸீதையைக் கவர்ந்து வந்திருக்கிறாய். அவள் இங்குதான் இருக்கிறாளா என்பதை அறிந்து வரும்படி என்னை அனுப்பி இருக்கிறார். சீக்கிரமே இலங்கைக்கு வந்து, உனது பத்துத் தலைகளையும் வெட்டி, தனது மனைவியுடன் அவர் அயோத்திக்குத் திரும்புவார்' என மாருதி பதில் சொன்னான்.
இந்த வார்த்தைகளைக் கேட்டு வெகுண்ட ராவணன், தனது காவலாட்களை அழைத்து, அந்த வானரத்தின், நாக்கு, மூக்கு, செவிகள் மற்றும் வாலை வெட்டுமாறு உத்தரவிட்டான். அதன்படியே, வீரர்கள் பலவிதமான பயங்கர ஆயுதங்களை எடுத்துக்கொண்டு வந்து, மாருதியின் தேகத்தைத் துளைக்க முயற்சி செய்தனர். ஆனால், வஜ்ரத்தால் ஆன உடலைப் பெற்றிருந்த அனுமனை அவர்களால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. அரண்டுபோன ராவணன் என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தான். கடைசியில், 'என்ன செய்தால் உன்னைக் கொல்லலாம்?' என அந்த வானரத்திடமே கேட்டான். நான் அழிவற்றவன். இருந்தாலும் எனது வாலை முழுவதுமாகத் துணிகளால் சுற்றி, அதன் மீது எண்ணை ஊற்றித் தீ வைத்தால், எனது மரணம் நிகழும். வாலின் எந்தச் சிறு பகுதியையும் விட்டுவிடாதே. அப்படிச் செய்தால், எதுவுமே என்னை ஒன்றும் செய்யாது' என அனுமன் வழி சொன்னான்.
அதைக் கேட்ட ராவணன், அப்படியே செய்யுமாறு வீரர்களுக்குக் கட்டளை இட்டான். அசுரர்களும் ஆரவாரத்துடன் குவியல் குவியலாக்த் துணிகளைக் கொண்டுவந்து, எண்ணையில் அவற்றைத் தோய்த்து, அந்த வாலில் சுற்றத் தொடங்கினர். ஆனால், அவர்கள் அப்படிச் சுற்றச் சுற்ற, அந்த வால் மேலும் மேலும் நீண்டுகொண்டே போனது! அதனால், அதன் ஒரு பகுதி இன்னமும் துணிகளால் சுற்றப்பட முடியாமலே இருந்தது. இலங்கையிலிருந்த துணிகளும், எண்ணையும் தீர்ந்து போயின. அதைக் கண்டு ஆத்திரமுற்ற ராவணன், நேராக அசோக வனத்துக்குச் சென்று, ஸீதையின் ஆடையைப் பறித்துக்கொண்டு வருமாறு ஏவினான். அதைக் கேட்டதும், மாருதி தனது வாலைச் சுருக்கிக்கொண்டு, அதை முற்றிலுமாகச் சுற்ற அனுமதித்தான்.
வீரர்கள் இப்போது அந்த வாலுக்குத் தீ வைக்க முனைந்தனர். ஆனால், அவர்களால் முடியாமல் போனது. அப்போது மாருதி, 'ராவணனே வந்து நெருப்பு மூட்டினால், எனது வால் தீப்பற்றிக் கொள்ளும். நானும் மாண்டு போவேன்' என்றான். ராவணனும் அதன்படியே இறங்கிவந்து தீ மூட்ட, வால் பற்றிக் கொண்டது. அப்படி அவன் செய்யும்போது, ராவணனின் தாடி, மீசையிலும் நெருப்பு பற்றிக் கொண்டு அவனது ஒரு பகுதி முகம் வெந்து போனது. தனது முகத்தைத் தனது மேலங்கியால் மறைத்துக்கொண்டு ராவணன் அங்கிருந்து தனது அந்தப்புரத்திற்கு ஓடினான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and Uploaded by Santhipriya) 

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42
43  44  45  46  47  48  49  50  51

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.