Monday, April 2, 2012

Rama Vijaya- Chapter-6


ராம விஜயம் -- 6


அசுரர்களுடனான அந்தப் போர் முடிந்ததும், தேவகுருவான பிரஹஸ்பதி, தஸரதனிடம், அவனுக்கு குழந்தைகள் யாரேனும் இருக்கின்றனரா எனக் கேட்டார். தனக்கு இன்னும் புத்திர பாக்கியம் கிட்டவில்லை என தஸரதன் வருத்தத்துடன் சொன்னான். தேவகுரு அவனை ஆசீர்வதித்து ,'காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவே உனக்கு மகனாகப் பிறப்பார்' எனும் சுபச் செய்தியைச் சொன்னார். அருகிலிருந்த இந்திரன், 'ஷ்ருங்க ரிஷி எனும் ஒரு முனிவர் இருக்கிறார். அவர் இதுவரையில் மனித முகங்களையே பார்த்ததில்லை. தனது தந்தையுடன் அவர் ஒரு காட்டுக்குள் வசிக்கிறார். அவரை நீ எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட்டால், தனது மகனைத் தேடி மஹா தபஸ்வீயான அவரது தந்தையும் அங்கே வருவார். அவரது ஆசியால் உனக்கு புத்திரபாக்கியம் கிட்டும். நான் இப்போதே ஒரு தேவாங்கனையை அந்த வனத்துக்கு அனுப்பித் தனது அழகாலும், பாடலாலும் ரிஷ்யஷ்ருங்கரை வசியப் படுத்தச் செய்கிறேன். அவளது அழகில் மயங்கி அவரும் அவளைப் பின்தொடர்வார்' எனச் சொன்னான். இந்திரனுக்கு தனது நன்றியைத் தெரிவித்துவிட்டு, கைகேயியுடன் நாடு திரும்பினான் தஸரதன்.
சொன்னபடியே, இந்திரன் ஒரு அப்ஸரஸை வனத்துக்கு அனுப்பினான். சிங்கம், புலி போன்ற வன விலங்குகளால் தன் மகனுக்கு ஒரு ஆபத்தும் வந்துவிடக் கூடாதென, ரிஷ்யஷ்ருங்கரின் தந்தை விபாந்தக முனிவர் அவரை ஒரு உயர்ந்த மலை மீது இருக்கச் செய்திருந்தார். அழகான ஒரு பெண்ணைக் கண்ட ரிஷ்யஷ்ருங்கர் முதலில் பயந்து விட்டார். ஆனால் சற்று நேரத்திலேயே, அவளது அழகிலும், இனிய குரல் வளத்தாலும் கவரப் பட்டார். அவரது தந்தை அப்போது அங்கு இல்லாதபடியால், அவரை அந்த அப்ஸரஸ் எளிதாக அயோத்திக்குக் கூட்டிச் சென்றாள்.
முனிவரை மரியாதையுடனும், அன்புடனும் வரவேற்ற தஸரதன், தனது வளர்ப்பு மகள் ஒருத்தியை அவருக்கு மணம் செய்து கொடுத்தான். தனது யோக சக்தியால் தனது மகன் அயோத்தியில் இருப்பதை அறிந்த விபாந்தக முனிவர், மகனை மயக்கி அழைத்துச் சென்ற பெண்ணைச் சபிப்பதற்காகக் கோபத்துடன் அயோத்தி சென்றடைந்தார். மிக மரியாதையுடன் அவரை வரவேற்றான் தஸரதன். நடந்த விவரங்களை அறிந்த விபாந்தகர், தனது வளர்ப்பு மகளையே திருமணம் செய்துகொடுத்த தஸரதனின் செயலில் மிகவும் மகிழ்ந்து, தீரமான நான்கு புத்திரர்கள் அவனுக்குப் பிறப்பார்கள் என ஆசீர்வதித்தார்.
விபாந்தக முனிவர் அயோத்தியில் ஒரு யாகம் வளர்த்தார். அந்த யாகத்திலிருந்து அக்னிதேவன் தோன்றி, குலகுரு வஸிஷ்டரிடம் ஒரு பாயஸப் பாத்திரத்தை அளித்து, தஸரதனின் மூன்று மனைவியர்க்கும் அதனைச் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும்படியும், அதன் மூலம் அவர்களுக்கு ஸத்புத்திரர்கள் பிறப்பார்கள் எனச் சொல்லி மறைந்தான்.
தஸரதன் அந்தப் பாயஸத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்து, தனது மூத்த மனைவியான கௌஸல்யாவுக்குச் சற்று அதிகமான பிண்டத்தையும், மற்ற இரண்டு பகுதிகளையும் கைகேயிக்கும், ஸுமித்ரைக்கும் கொடுத்தான். இதைக் கண்டு பொறாமையடைந்த கைகேயி, நடந்து முடிந்த போரில் மன்னன் வெற்றியடையக் காரணமாக இருந்த தனக்கே பெரிய பிண்டம் கொடுத்திருக்க வேண்டும் என வாதிட்டாள்.
அவள் இப்படிச் சண்டை போட்டுக் கத்திக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ வந்த ஒரு கழுகு அவளது கையிலிருந்த பிண்டத்தைக் கொத்திக்கொண்டு வானில் பறந்து விட்டது. இதனால் வருத்தமுற்று கைகேயி அழத் தொடங்கினாள். அதைக் கண்டு மனம் பொறுக்காத தஸரதன், கௌஸலையைப் பார்த்து, அவளது பிண்டத்திலிருந்து ஒரு பாதியை கைகேயிக்குத் தருமாறு கேட்டுக் கொண்டார். கௌஸலையும் அவ்வாறே தந்தாள். அதைக் கண்ட ஸுமித்ரை, தானும் தனது பிண்டத்திலிருந்து ஒரு பகுதியை கைகேயிக்குக் கொடுத்தாள். இதனால் திருப்தியுற்ற கைகேயி தனக்குக் கொடுக்கப்பட்ட பிண்டத்தை மகிழ்வுடன் உண்டாள். கௌஸல்யாவும் ஸுமித்ரையும் தங்களது பிண்டத்தை உண்டனர். இதன் மூலம் அவர்கள் மூவரும் உடனேயே கர்ப்பம் தரித்தனர்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.