Wednesday, April 11, 2012

Rama Vijaya - Chapter -16

ராம விஜயம்-- 16


கங்கா நதி தீரத்தை அடைந்ததும், அங்கிருந்த ஒரு மர நிழலில் புல்லின் மீது அமர்ந்து ராமன் தியானம் செய்தான். சற்று இளைப்பாறிய பிறகு, அங்கிருந்த குஹன் என்னும் படகோட்டியிடம் தங்களை அக்கரைக்குக் கொண்டு செல்ல வேண்டினான். 'நீ யார்?' என குஹன் கேட்க, 'தஸரதனின் மூத்த மகனான ராமன்' என ராமன் பதிலுரைத்தான். அதைக் கேட்டதும் குஹன் ராமனைத் தழுவிக்கொண்டு, அக்கரைக்குக் கொண்டு செல்ல இசைந்தான். ஸுமந்திரன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு அயோத்திக்குத் திரும்பினான்.
அக்கரை அடைந்த ராமன், பரத்வாஜ ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தான். அவர்களை வரவேற்று ராமனைப் பணிந்த பரத்வாஜர், தம்முடன் ஒரு பதினைந்து நாட்கள் தங்கிச் செல்லுமாறு வேண்டினார். அதைக் கேட்ட இளவரசன், 'நான் இங்கே அதிக நாட்கள் தங்க இயலாமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். ஏனெனில் இது அயோத்தி மக்கள் அடிக்கடி வந்து போகும் இடம். அவர்கள் என்னை அயோத்திக்குத் திரும்பி வருமாறு வற்புறுத்துவார்கள். எனவே, நாங்கள் இங்கிருந்து தண்டகாரண்யம் செல்லப் போகிறோம்' என மறுதலித்தான்.
ராமன் வேண்டியதற்கிணங்க, தண்டகாரண்யம் செல்லும் வழியை பரத்வாஜர் காட்ட, காடு, மலைகளைக் கடந்து சித்ரகூடம் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கே பல முனிவர்கள் தவம் செய்து வந்தனர். மலையேறிச் சென்று, வால்மீகி என்னும் முனிவரைக் கண்டு, பணிவுடன் வணங்கினர். லக்ஷ்மணன் அங்கே ஒரு பர்ணசாலை அமைக்க, மூவரும் அங்கே வசிக்கத் தொடங்கினர்.
ஸுமந்திரன் அயோத்தி திரும்பிய சில காலத்துள், தஸரதன் ராமனை நினைத்து, நினைத்து வருந்தியே மாண்டு போனான். அந்த நேரத்தில் அவனது பிள்ளைகள் ஒருவர் கூட அவனருகில் இல்லாமல் போனது அவனது துரதிர்ஷ்டமே. கௌஸலையும், ஸுமித்ரையும் மிகவும் வருந்திய போதும், கைகேயி ஒரு சொட்டுக் கண்ணீர் கூடச் சிந்தவில்லை. தஸரனது ஈமச் சடங்குகளைச் செய்யவென, பரதனுக்கும், சத்ருக்னனுக்கும் தகவல் சொல்லி அனுப்பப் பட்டது. அவர்கள் வரும் வரைக்கும், தஸரனது உடல் ஒரு எண்ணைக் கொப்பரையில் வைத்துப் பாதுகாக்கப் பட்டது.
நாடு திரும்பிய பரத, சத்ருக்னர்கள் உயிரற்ற தங்கள் தந்தையின் உடலைக் கண்டு மிகவும் வருத்தமுற்று, உரத்த சத்தத்துடன் அழுதனர்.' சக்ரவர்த்தியின் உடல் மற்றொருவர் அரியாசனத்தில் அமராத வரையில் எரிக்கப்பட மாட்டாது. ராம, லக்ஷ்மணர்களோ காட்டுக்குச் சென்று விட்டனர். கைகேயியின் சொல்லுக்கிணங்க, பரதனுக்கு ராஜ்ஜியம் வேண்டுமென்பதற்காக அவர்கள் இப்படிச் செய்தனர். எனவே, குலகுருவான நான் பரதனை அரியணை ஏறுமாறு பணிக்கிறேன்' என வஸிஷ்டர் சொன்னார்.
இதைக் கேட்ட பரதன் திடுக்குற்றான். கண்களில் நீர் வழிய, வஸிஷ்டரைப் பார்த்து, 'ஐயோ, இந்த சோகத்தை என்னால் எப்படித் தாங்க முடியும்? எனக்கு இந்த அரசாட்சி வேண்டாம். இந்த நகரத்திலிருந்து எனக்கு எதுவுமே வேண்டாம். என்னை அரசனாக்க வேண்டாம் என நான் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எனதருமை ராமனே இதற்குத் தகுதியானவன். ராமன் எங்கிருக்கிறானோ, அங்கேயே நானும் செல்வேன். அவனுடனேயே எனது எஞ்சிய நாட்களைக் கழிப்பேன்' எனக் கதறினான்.
பரதனின் மனநிலையை நன்கறிந்த வஸிஷ்டர், ராமனின் பாதுகைகளை அரியணையில் வைத்து, ராமனை அரசனாக முறைப்படி அறிவித்தார். அதன் பின்னர், தஸரதனின் உடல் மயானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. கௌஸல்யா, கைகேயி, ஸுமித்ரை இவர்கள் மூவரைத் தவிர மற்ற மனைவியர் அவனுடன் சேர்த்து எரிக்கப் பட்டனர். கௌஸலையும், ஸுமித்ரையும் தங்களது கணவனுடனே உடன்கட்டை ஏறத் தயாராகவே இருந்தனர். ஆனால், வஸிஷ்டர் அவர்களுக்குப் பிள்ளைகள் இருப்பதால், அவர்களைத் தடுத்து விட்டார். தஸரதனின் அந்திமக் கிரியைகள் முடிந்ததும், பரதன் கைகேயியைக் காணச் சென்றான்.
கைகேயி தன் மகனைப் பார்த்து, ' மகனே, உனக்காக நான் மிகவும் கஷ்டப்பட்டு, ராம, லக்ஷ்மணர்களைக் காட்டுக்குத் துரத்திவிட்டு, இந்த ராஜ்ஜியத்தைப் பெற்றிருக்கிறேன். நீ இதனால் மிகவும் மகிழ்வாய் என எண்ணுகிறேன். இப்போது நமக்கென எதிரிகள் யாருமே இல்லை. சற்றும் தாமதிக்காமல், உடனே இந்த ராஜ்ஜியப் பொறுப்பினை ஏற்றுக் கொள். அரசன் இறந்ததும் ஒரு நல்லதற்கே' எனச் சொன்னாள்.
இதைக் கேட்டதும் பரதன் மிகவும் ஆத்திரம் அடைந்து தாயைப் பார்த்து, ' உன் கணவனைக் கொன்ற பாவி நீ. நீ ராமனின் எதிரி. என் தந்தையின் மரணத்துக்குக் காரணமாகவும், ராமனைக் காட்டுக்கு அனுப்பவதற்குக் காரணமாகவும் இருந்த இந்த உனது செயல், மிகவும் பாவகரமானதும், கொடுமையானதும், அவமானகரமானதும் ஆகும். ராமனே இந்த அரியனைக்கு உரியவன். அவனே வந்து இந்த ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள்ளட்டும். எனக்கு ராமனைத் தவிர வேறெதுவும் தேவையில்லை. எனது எஞ்சிய நாட்களை நான் கானகத்தில் கழிக்கப் போகிறேன்.எனச் சொன்னான். தானும் மரவுரி அணிந்து, தன் சஹோதரர்களுடன் சேர்வதற்காகச் சித்ரகூடம் நோக்கிப் புறப்பட்டான். வஸிஷ்டர், கௌஸல்யா, ஸுமித்ரை, சத்ருக்னன், ஸுமந்திரன், மற்றும் அயோத்தி மக்களும் அவன் பின் சென்றனர். நதிக்கரையை அடைந்த அவர்களை குஹன் தன் சஹ படகோட்டிகளுடன் அக்கரைக்குக் கொண்டு சேர்த்தனர்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )To Read the earlier Chapters Click on the nos given below
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1    2    3    4    5
     6   7     8   9  10   11   12
13   14   15   16   17   18   19   20   21   22
23   24    25   26   27   28   29   30  31   32
 
                          33   34    35   36   37   38   39  40   41   42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.