Friday, April 20, 2012

Rama VIjaya - Chapter - 21

ராம விஜயா- 21 

 

இவளது கூக்குரலைக் கேட்ட திரிஷிரா, கரன், தூஷன் என்னும் அரக்கர்கள் அவளுக்கு உதவுவதற்காகப் பதினான்காயிரம் அரக்கர்களை அழைத்துக் கொண்டு அங்கே வந்தனர். 'என் மூக்கையும், காதுகளையும் பாருங்கள். அங்கே மூன்று மனிதர்கள் வசிக்கின்றனர். இருவர் ஆண்கள்; ஒருத்தி பெண். தனது அண்ணன், அண்ணி பேச்சைக் கேட்டுக்கொண்டு, லக்ஷ்மணன் என்னும் அவனது தம்பி, என்னை இப்படி பங்கப் படுத்தி விட்டான். நீங்கள் சென்று அவர்களது சிரங்களையும், குடலையும் அறுத்து அதிலிருந்து வழியும் ரத்தத்தைக் குடித்துத்தான் நான் இழந்த சக்தியை மீண்டும் பெற வேண்டும்' என ஸூர்ப்பனகை அலறினாள்.
தாங்கள் மூவரும் சென்று சாதாரண மனிதர்களுடன் போரிடுவது தங்களுக்குக் கௌரவக் குறைச்சல் என நினைத்த திரிஷரையும், கர, தூஷணர்களும், வலிமையான பதினான்கு ராக்ஷஸர்களைத் தேர்வு செய்து, ஸூர்ப்பனகையுடன் பஞ்சவடிக்கு அவர்களை அனுப்பினர். ஆனால் ராமன் ஒரே பாணத்தால் அவர்கள் அனைவரின் தலைகளையும் அறுத்தெறிந்தான். அலறியடித்து ஓடிய ஸூர்ப்பனகை நடந்த கொடூரத்தை மூவரிடமும் சொன்னாள். அதைக் கேட்ட மூவரும் எஞ்சியிருந்த படையைத் திரட்டிக் கொண்டு ராமனை எதிர்த்துப் போரிடச் சென்றனர். ஆனால், அவர்களும் கூட இளவரசனின் ஒரே பாணத்தில் மாண்டனர்.
பயந்துபோன ஸூர்ப்பனகை, விசனத்துடன் இலங்கைக்கு ஓடினாள். தனது அறுந்துபோன மூக்கையும், காதுகளையும் காட்டி, திரிஷிரா, கர, தூஷணர்கள் அனைவருடன் அவனது பதினான்காயிரம் படைகளும் கொலை செய்யப்பட செய்தியையும் ராவணனிடம் சொன்னாள்.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்டு அரண்டுபோன ராவணன், தனது மாமனான மாரீசன் என்பவனை அழைத்து, ' இதோ பார், ராமன், திரிஷிரா, கரன், தூஷணன் மற்றும் அவர்களது படைகளையும் அழித்து, ஸூர்ப்பனகையையும் மானபங்கப் படுத்தி விட்டான். இந்த எதிரியை நாம் அலக்ஷியப் படுத்தினால், இவன் ஒருநாள் என்னையுமே கொல்லவும் செய்வான். எனவே, நான் ராம,லக்ஷ்மணர்களைக் கொன்று, அவனது மனைவியான ஸீதையை இலங்கைக்குக் கவர்ந்து செல்வதென முடிவு செய்து விட்டேன். எனவே, நீ தயவு செய்து ஒரு அழகிய மானாக உருக்கொண்டு, ராமன் இருக்கும் பர்ணசாலையின் முன் உன்னைக் காட்டிக் கொள். ராமன் உன்னைக் கொல்லவென அம்பும், வில்லுடனும் வருவான். அப்போது நீ வேகமாக காட்டுக்குள் ஓடிவிடு. உன்னைத் தேடி ராமன் உன்னைப் பின் தொடர்வான். அவன் ஸீதையிடமிருந்து வெகு தூரம் சென்றவுடன், நான் ஸீதையைக் கவர்ந்து இலங்கைக்குக் கொண்டு சென்றிடுவேன்' என உத்தரவிட்டான்.
'இன்னொருவனின் மனைவியைக் கவர்வதென்பது மிகவும் பாவமான செயல். அப்படி நீ செய்தால், நீ உனது உயிரையே இழக்க நேரிடும். ஏன்.. அனைத்தையுமே இழக்க நேரிடும். எனவே நீ உனது மனதை மாற்றிக் கொண்டு, உனது வேலையைப் பார்' என மாரீசன் மறுதலித்தான்.
இதைக் கேட்ட ராவணன் மிகவும் கோபமடைந்து, 'நீ எனக்கு இப்படி உபதேசம் செய்வது மிகவும் தவறானது. நான் கேட்ட உதவியைச் செய்வதே உனக்கு உகந்த செயல். எனவே, இப்போதே நீ என்னுடன் வந்து, நான் சொன்னது போலவே செய்ய வேண்டும் என உனக்குக் கட்டளை இடுகிறேன்' எனக் கத்தினான். வேறு வழியின்றி மாரீசன் ராவணனைப் பின் தொடர்ந்து பஞ்சவடிக்குச் சென்றான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya) 


To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.