Sunday, April 22, 2012

Rama Vijaya -Chapter- 23

ராம விஜயம்-- 23

 

செல்லும் வழி முழுவதும் ஸீதை அலறிக் கொண்டே சென்றாள். அவளது கூக்குரலைக் கேட்ட ஜடாயு என்னும் கழுகு அவளுக்கு உதவ ஓடி வந்தது. 'ராவணா, இப்போதே ஸீதையை விடுவித்து விடு. இல்லையெனில் இந்த க்ஷணமே நான் உன்னைக் கொன்று விடுவேன்' என ஜடாயு சொன்னது. 'யார் நீ? உனக்கும் இந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்? ஏ முட்டாளே, இவ்விடத்தை விட்டு அகன்று, உன் வேலை என்னவோ அதைப் பார்' என ராவணன் சொன்னான். ஆனால், ஜடாயு தான் சொன்னதையே மீண்டும் சொல்லி வற்புறுத்தவே, ராவணன் ஜடாயு மீது தன் அம்புகளை விட்டான். தனது அலகினால் அந்த அம்புகளை எதிர்கொண்டு அவற்றை முறியடித்தது. அது மட்டுமில்லாமல், அவனது தேரோட்டியையும் கொன்று, அவனது குதிரைகளையும் சாகடித்தது. தேரிலிருந்து இறங்கிய ராவணனைத் தனது அலகினால் குத்தி, அவனது தலைமயிரைப் பிடித்து இழுத்தது. பயந்துபோன ராவணன், என்ன செய்வதெனத் தெரியாமல் திகைத்தான்.
அவனது தேரையும் ஜடாயு நாசமாக்கியதும், ராவணன் ஜடாயுவைப் பார்த்து, 'உண்மையைச் சொல். உனக்கு எவ்விதம் மரணம் நிகழும் என்பதைச் சொல். அப்படி நீ சொன்னால் நானும் எனது மரணம் பற்றிய ரகசியத்தைச் சொல்லுவேன்' என்றான். அப்பாவியான ஜடாயு, 'எனது இறக்கைகளை நீ அறுத்தால், நான் மாண்டு போவேன். சரி, இப்போது நீ எப்படி மரிப்பாய் எனச் சொல்' என்றது. 'எனது கால் விரல்களை உடைத்தால் நான் அந்தக் கணமே இறந்து போவேன்' என்றான் ராவணன்.
இப்படி இருவரும் தமது ரகசியங்களைச் சொன்னவுடன், ராவணன் ஜடாயுவைப் பிடிக்கப் போனான். ராவணனின் ஒரு கால் விரலை ஜடாயு உடைத்தெறிந்தது. ஆனால், உடனே, ராவணன் ஜடாயுவின் இறக்கைகளைப் பிய்த்தெறிந்தான். ரத்தம் தோய்ந்த உடலுடன் ஜடாயு கீழே விழுந்தது. ராவணன் ஸீதையை எடுத்துக் கொண்டு இலங்கைக்குப் பறந்தான். அவன் "மாதங்க்" என்னும் மலையைக் கடந்து செல்லும்போது, சுக்ரீவன், நளன், நீலன், ஜாம்பவான், மாருதி என்னும் ஐந்து பலம் வாய்ந்த வானரங்கள் ஸீதை கழற்றியெறிந்த ஆபரணங்களைக் கண்டெடுத்தனர். அவற்றைக் கண்ட மாருதி, 'ஐயோ பாவம், யாரோ ஒரு பெண்ணை ஒரு அசுரன் கவர்ந்து செல்கிறான் போலும். இப்போதே சென்று, நான் அவளைக் காப்பாற்றுவேன்' எனச் சொல்லி வானத்தில் பறந்தான். ஆனால், அதற்குள் ராவணன் அங்கிருந்து அகன்று, இலங்கைக்குச் சென்று விட்டான். சென்றதும், பதினெட்டு வலிமையான அசுரர்களைத் தேர்வு செய்து, ராமனைக் கொல்லவென அனுப்பினான்.
இலங்கைக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பின்னர், ஸீதையிடம் சென்று, 'என்னை மணந்து கொள் என உன்னை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் பலம் வாய்ந்தவன். அனைத்து தேவர்களும், கடவுள்களும் எனது அடிமைகள். செல்வத்திலோ, பலத்திலோ, அல்லது வீரத்திலோ என்னை விஞ்ச இந்த உலகில் வேறு எவனும் கிடையாது. நீ மட்டும் எனக்கு மனைவியாகி விட்டால், நீ மிகவும் மகிழ்ச்சி அடைவாய்' எனச் சொன்னான். 'நீ ஒரு கொடியவன், பொல்லாதவ்ன். நீ சீக்கிரமே அழிந்து போவாய். நான் உனக்கு எந்தக் காலத்திலும் மனைவியாக மாட்டேன். நான் உன்னை வெறுக்கிறேன். விலகிப் போடா முட்டாளே' என ஸீதை சீறினாள்.
இந்த மொழிகளைக் கேட்ட ராவணன், தன் மனதுக்குள், 'ஸீதை இப்போது மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறாள். அவள் அமைதியடைந்தாலொழிய, அவளது மனதை நான் வெல்ல முடிய்யாது' என நினைத்தான். எனவே, அவளை அசோக வனம் என்னும் ஒரு இடத்தில் தங்கச் செய்தான். தனது தங்கையான திரிஜடை என்பவளுடன், ஐந்து கோடி அரக்கிகளை உதவிக்கு அனுப்பி அவளைக் காவலில் வைத்தான். ஸீதையை எப்படியாவது பயமுறுத்தி, மிரட்டி, தன்னை மணக்க அவளைச் சம்மதிக்கச் செய்யுமாறு கட்டளையிட்டான். அதன்படியே, தங்களது கோரமான பற்களைக் காட்டியும், வாயைப் பிளந்து ஸீதையைக் கபளீகரம் செய்து விடுவது போலவும், அவர்கள் பயமுறுத்தினர். ஆனால், ஸீதை அமைதியாக இருந்து அவர்களைப் பொருட்படுத்தாமல் தவிர்த்தாள். திரிஜடை மட்டும் அவளுக்குத் தைரியம் கொடுத்து, பயப்பட வேண்டாம் எனத் தேற்றினாள்.

[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.