Wednesday, April 25, 2012

Rama Vijaya - Chapter- 27

ராம  விஜயா - 27


கொஞ்ச காலம் பொறுத்த ராமன், லக்ஷ்மணனை கிஷ்கிந்தைக்கு அனுப்பினான். அவன் வருவதைக் கண்ட மாருதி, சுக்ரீவனைப் பார்த்து, ' ராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்துவிட்டு, நீ இப்படி சுகமாக இங்கே இருப்பதும், ராமன் காட்டில் அலைவதும் மிகவும் தவறானவை. அதோ, அங்கே லக்ஷ்மணன் உனது அரண்மனை வாசலில் நிற்கிறான். நிச்சயம் நம் எல்லாரையும் அவன் கொன்றுவிடப் போகிறான், ஜாக்கிரதை' என எச்சரித்தான்.
அதைக் கேட்டதும் பயந்துபோன சுக்ரீவன், தனது மனைவிமாரையும், இதர வானரங்களையும் அழைத்துக்கொண்டு சென்று, நேராக ராமனின் காலடியில் வீழ்ந்து பணிந்து, தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். தனது வானரங்கள் அனைவரையும் அப்போதே அனுப்பி ஸீதையைத் தேடிக் கண்டுபிடித்து, ராமனிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபடப் பணித்தான். தனது மோதிரம் ஒன்றை மாருதியின் கைவிரலில் தனது அடையாளமாக ராமன் அணிவித்து அனுப்பி வைத்தான். வானரர்கள் அனைவரும் ஸீதையைத் தேடிப் புறப்பட்டனர்.
செல்லும் வழியில், ஒரு கானகத்தைக் கடக்கும்போது, அவர்கள் அனைவரும் மதி மயங்கிக் கிறங்கினர். மேலே செல்ல முடியாமல் தவித்தனர். தண்டகர் என்னும் ரிஷி, 'இந்தக் காட்டுக்குள் எவர் வந்தாலும், அவர்கள் புத்தி கலங்கி அலைவார்கள்' எனும் சாபத்தை இட்டிருந்தார். அந்தக் காட்டின் வனதேவதை அவரது இளைய சிசுவைக் காவு வாங்கியதால், இப்படி ஒரு சாபம் கொடுத்தார். அந்தக் குழந்தை ஒரு அசுரனாக மாறி, அந்தக் காட்டுக்குள் வருவோரை எல்லாம் தனக்கு இரையாக்கிக் கொண்டிருந்தது. வாலியின் மகனான அங்கதன் மட்டும் இதனால் பாதிக்கப் படாமல், அந்த அரக்கனைக் கொன்றான். அப்ப்டிக் கொல்லப்பட்டதுமே, அந்த அரக்கனும் தனது சுய உருவை அடைந்தான். ராமனின் பெயரை இடைவிடாது உச்சரித்துக் கொண்டிருந்ததால், ஏனைய வானரங்களும் அந்த ஆபத்திலிருந்து தப்பினார்கள்.
அந்தக் கானகத்தை விட்டு வெளியே வந்ததும், மும்முரமாக ஸீதையைப் பல இடங்களிலும் தேடி அலைந்து, அவளைக் கண்டுபிடிக்க முடியாமல், ஒரு மிகப் பெரிய குகை அருகே வந்தடைந்தனர். அதற்குள் நுழைந்ததுமே, மூச்சுத் திணறிப் பல வானரங்கள் மயங்கி வீழ்ந்தனர். தனது வாலால் அவர்கள் அனைவரையும் திரட்டி, மாருதி அவர்களை அந்தக் குகைக்கு வெளியே அழைத்து வந்து காப்பாற்றினான். அங்கே ஒரு அழகிய நந்தவனம் இருந்தது. அங்கிருந்த மரங்களில் பழங்கள் பழுத்துக் குலுங்கின. ஆனால் ஒரு பழத்தைக் கூட அவர்களால் பறித்துத் தின்ன இயலவில்லை. ஸுப்ரபா என்னும் ஒரு அழகிய பெண் குதிரை அங்கே நின்று கொண்டிருந்தது. 'இந்தத் தோட்டத்தை நிர்மாணித்தவர் யார்?' என மாருதி அந்தக் குதிரையிடம் கேட்டான்.
'மாயாசுரன் என்னும் அரக்கன் செய்த தவத்தில் மகிழ்ந்த பிரமன் அந்தக் குகையை நிர்மாணித்து, அவனிடம், ' இந்தக் குகையை உனக்காகவே அமைத்திருக்கிறேன். நீ எப்போதும் இதற்குள்ளேயே இருக்க வேண்டும். ஒருபோதும் இதைவிட்டு வெளியே வரக் கூடாது. அப்படி வந்தால் உனக்கு மரணம் சம்பவிக்கும்' எனச் சொல்லியிருந்தார். அந்தக் குகைக்குள் இருந்தபடியே, அனைத்து அசுரர்களும் நலமாக வாழ வேண்டும் என மாயாசுரன் விஷ்ணுவைக் குறித்து இடைவிடாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான்.
அதைக் கண்டு பயந்துபோன இந்திரன், பிரம்மதேவரிடம் வந்து, எப்படியாவது அந்த அசுரனை குகையை விட்டு வெளியே வரச் செய்யுமாறு வேண்டினான். அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பிரமனும்,ஹேமா என்னும் ஒரு அழகிய தேவ கன்னிகையைப் படைத்து, அந்த குகைக்கு அனுப்பினார். அவளைப் பார்த்த அந்தக் கணமே மாயாசுரன் அவளழகில் மயங்கிப் போனான். தன் மீது மையலில் விழுந்துவிட்டான் எனத் தெரிந்த ஹேமா மெதுவாகக் குகையை விட்டு வெளியே நடந்தாள். பிரம்மதேவர் சொன்னதை மறந்த மாயாசுரன், அவளைப் பின்தொடர்ந்து நடந்து, குகைக்கு வெளியே வந்தான். அப்படி வந்த மறு கணமே, அவன் மரித்தான்.
அவனது சாவுக்குப் பின்பு, அந்த தேவ கன்னிகை இந்தத் தோட்டத்தில் சில காலம் வசித்த பின்னர், விஷ்ணு லோகத்துக்குப் புறப்பட்டாள். அப்படிப் போகும்போது, என்னை இந்த ரூபத்தில் தோட்டத்துக்குக் காவல் வைத்துவிட்டு 'வானரங்கள் சிலர்இந்தத் தோட்டத்துக்கு வருவார்கள்; அப்போது நீயும் உனது சுய ரூபத்தை அடைவாய்' எனச் சொல்லிச் சென்றாள். இப்போது நீங்கள் வேண்டிய மட்டும் பழங்களைச் சாப்பிடலாம்' என ஸுப்ரபா என்னும் அந்தக் குதிரை சொன்னது.
'வயிறு நிரம்பப் பழங்களைச் சாப்பிட்டாயிற்று. இப்போது நாங்கள் இந்த இடத்தில் வழி தெரியாது மாட்டிக் கொண்டிருக்கிறோம். சீக்கிரமே நாங்கள் இங்கிருந்து செல்ல வேண்டும். தயவு செய்து, இந்த உதவியை நீ செய்ய வேண்டும்' என மாருதி கேட்டுக் கொள்ள, அனைத்து வானரங்களையும் தங்கள் கண்களை மூடிக் கொள்ளும்படி ஸுப்ரபா சொன்னது. ஒரு கணத்தில், அவர்கள் அனைவரும் ஒரு கடற்கரையில் நின்றிருந்தனர். ஸுப்ரபா தனது பழைய உருவை அடைந்து, நேராக ராமனைச் சென்று பணிந்துவிட்டு, தன் கணவனுடன் சேர வானுலகம் சென்றாள்.
(தொடரும் )
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)

To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21  22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.