Friday, April 20, 2012

Rama Vijaya Chapter- 22

ராம விஜயம்-- 22

 

பஞ்சவடிக்கு வந்ததும், ஒரு புதரின் பின்னால் ராவணன் மறைந்துகொள்ள, அவனது மாமன் மாரீசன் ஒரு அழகிய மானாகத் தன்னை மாற்றிக் கொண்டு, இங்குமங்குமாகத் தாவிக் குதித்து விளையாட்டுக் காட்டத் தொடங்கினான். அந்த அழகிய மானைப் பார்த்த ஸீதை, ராமனைப் பார்த்து, 'அன்பனே, அந்த மானைப் பார். எவ்வளவு அழகாக இருக்கிறது. அதன் தோலைக் கொண்டு ஒரு எடுப்பான இடுப்புடை அணிந்துகொள்ள விரும்புகிறேன்' என வேண்டினாள். தன் மனைவியின் விருப்பத்தைக் கேட்ட ராமன், அதை நிறைவேற்ற எண்ணி, தனது வில்லை எடுத்து பாணம் தொடுத்து அந்த மானைக் குறி வைத்தான். சட்டென அந்த மான் அங்கிருந்து ஓடத் தொடங்கியது. ராமனும் அதைப் பின் தொடர்ந்து ஓடினான்.
பர்ணசாலையிலிருந்து வெகு தூரம் அவ்விருவரும் சென்றதும், புதருக்குப் பின் மறைந்திருந்த ராவணன், ராமனைப் போலத் தன் குரலை மாற்றி, லக்ஷ்மணனின் கவனத்தைத் திருப்பவேண்டி, 'லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்று; லக்ஷ்மணா, என்னைக் காப்பாற்று. நான் ஆபத்தில் மாட்டிக் கொண்டேன்' என ஓலமிட்டான்.
இந்தக் கூக்குரலைக் கேட்ட ஸீதை, லக்ஷ்மணனைப் பார்த்து, 'லக்ஷ்மணா, எனதருமை ராமன் ஆபத்தில் மாட்டிக் கொண்டான் போலிருக்கிறது. நான் இப்போது அவனிட்ட ஓலத்தைக் கேட்டேன்' எனப் பதட்டத்துடன் சொன்னாள். 'நீ எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ராமனை யாராலும் வருத்த முடியாது. இது ஏதோ கெட்ட எண்ணத்துடன் செய்த ஒரு அசுரனின் சூழ்ச்சி என நினைக்கிறேன்' என லக்ஷ்மணன் அவளுக்குச் சமாதானம் சொன்னான். அதைக் கேட்ட ஸீதை, 'இவ்வளவுதானா நீ உன் அண்ணன் மேல் கொண்டிருக்கும் அக்கறை? எனது ராமன் ஆபத்தில் சிக்கியிருக்கும்போது, நீ அவனுக்கு உதவ மறுக்கிறாய். உனது அண்ணன் இறந்து போக வேண்டும்; அதன் பின் நீ என்னை மணந்துகொள்ள வேண்டும் என்பதுதான் உனது எண்ணமாக இருக்குமோ என அஞ்சுகிறேன்' என வார்த்தைகளைக் கொட்டினாள்.
இதைக் கேட்ட லக்ஷ்மணன் மிகவும் மனம் வருந்திக் கண்ணீர் விட்டு அழுதான். பர்ணசாலையைச் சுற்றித் தனது அம்பினால் ஒரு கோடு வரைந்துவிட்டு, ' நான் இப்போதே ராமனைத் தேடி, அவனைக் காப்பாற்றச் செல்கிறேன். நான் வரைந்திருக்கும் இந்தக் கோட்டைத் தாண்டிச் செல்ல வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்.அப்படிச் சென்றால், உனக்குப் பேராபத்து வரக்கூடும்' எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
லக்ஷ்மணனும் வெகு தூரம் சென்றதும், புதரின் பின்னால் மறைந்திருந்த ராவணன், தன்னை ஒரு துறவியாக மாற்றிக்கொண்டு, ஸீதை இருந்த பர்ணசாலைக் கதவின் வழியே எட்டிப் பார்த்துவிட்டு, ' இங்கே யாரேனும் இருக்கிறீர்களா? நான் மிகவும் பசியால் வாடுகிறேன். யாரேனும் வெளியே வந்து, இந்தத் துறவிக்கு உணவளிப்பது என்னும் புண்ணியச் செயலைச் செய்ய மாட்டீரா?' என தீனமாய் வேண்டினான்.
இந்த தீனக் குரலைக் கேட்டு மனமிளகிய ஸீதை, குடிசையை விட்டு வெளியே வந்து, 'ஐயா, தயவு செய்து இங்கே அமருங்கள். என் கணவன் ராமன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான். அவன் வந்தவுடன், உங்களது தேவைகளைக் குறைவின்றி நிறைவேற்றுவான்' என அன்புடன் சொன்னாள். ' ராமன் வரும் வரையில் என் பசி காத்திருக்காது. அதுவரையில் நான் உயிரோடிருப்பேன் என நினைக்கவில்லை. நீயே ஏதேனும் சிறிது உணவளித்தால், நான் உன்னை வாழ்த்துவேன்' என ராவணன் பதிலுக்குச் சொல்லி, பூமியில் விழுந்து புரண்டு, பசியால் துடிப்பவனைப் போல் நடித்தான்.
அதைக் கண்டு பயந்துபோன ஸீதை, லக்ஷ்மணன் வரைந்த கோட்டைத் தாண்டிச் சென்று, அவனுக்கு உதவி செய்ய நெருங்கினாள். சட்டென எழுந்த ராவணன், அவளைக் கெட்டியாக வளைத்துப் பிடித்துக் கொண்டு, 'பயப்படாதே. இலங்கையின் அரசனான ராவணன் நான். நான் உன்னை இப்போது என் அரண்மனைக்குக் கொண்டு செல்லப் போகிறேன். சத்தம் போடாமல் என்னுடன் வா' என்றான். அவனிடமிருந்து திமிறிய ஸீதை தரையில் விழுந்து, புரண்டு தன்னை இருந்த இடத்திலேயே விட்டுவிடுமாறு அலறினாள். ஆனால், அவளது கண்ணீரும், ஓலமும் ராவணன் மனதைக் கொஞ்சமும் இளகச் செய்யவில்லை. அவளை ஒரு ரதத்தில் ஏற்றி, இலங்கையை நோக்கிப் புறப்பட்டான்.
[தொடரும்]
(Translated into Tamil by Sankarkumar and uploaded by Santhipriya)To Read the earlier Chapters Click on the nos given below

முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.