Monday, April 2, 2012

Rama Vijaya - Chapter-12

ராம விஜயம் -- 12

தனது வில்லை ஒடித்த செய்தி கேட்டு பரசுராமர் கோபம் கொண்டு போரிட வருவார் என்றுணர்ந்த ராமன், மிதிலையில் அதிக நாட்கள் தங்காமல், உடனே அயோத்தி திரும்ப எண்ணம் கொண்டான். ஆனால் மாமனாரின் சொல்லைத் தட்ட முடியாமல் மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கினான். அதற்குள், நாரதர் விரைந்து சென்று, ராமன் என்றொருவன் வில்லை ஒடித்துவிட்ட‌ விஷயத்தைப் பரசுராமரிடம் சொல்லிவிட்டார். ஆவேசமாக மிதிலைக்கு வந்து "எப்படி என் வில்லை ஒருவன் முறிக்கலாயிற்று?" எனப் பெரிய சண்டையே போட்டார்.
நாரதரும் தன் பங்குக்கு, 'அது மட்டுமா? வில்லை ஒடித்ததோடு நிற்காமல், இப்போது நீங்கள் வந்திருக்கும் போது, உங்களை வரவேற்கக் கூட ராமன் வரவில்லை பாருங்கள்' எனத் தூபம் போட்டார். கடும் சினத்துடன் ராமனை நோக்கி அம்புகள் எய்தார் பரசுராமர். ஆனால் அவை அனைத்துமே ராமனனின் பார்வை பட்ட அந்தக் கணமே உருகிப் போயின. இந்த நிகழ்வைக் கண்ட பரசுராமர் தனது அவதாரம் முடிந்து போனதை உணர்ந்து, வில்லையும், அம்புகளையும் கீழே போட்டுவிட்டு நிற்க, ராமன் ஓடோடியும் வந்து அவரை நெஞ்சாரத் தழுவிக் கொண்டான்.
இதன் பிறகு, தஸரதன் தன் சுற்றங்களோடு மகிழ்ச்சியுடன் அயோத்திக்குத் திரும்பினான். ஸீதையின் திருமணத்திற்காக, அழைப்பின் பேரில் வந்திருந்த தஸரதனின் மைத்துனன் ஸங்க்ராமஜித் [கைகேயியின் சகோதரன்] பரத, சத்ருக்னர்களைத் தன்னுடன் சிறிது காலத்திற்கு அனுப்பி வைக்குமாறு வேண்டி, அவ்வண்ணமே கூட்டிச் சென்றான். ராம, லக்ஷ்மணர்களிடமிருந்து ஒரு கணம் கூடப் பிரிய மனமில்லாத பரத, சத்ருக்னர் வேறு வழியில்லாமல், தாய் கைகேயியின் வற்புறுத்தலுக்கிணங்க, மாமனுடன் சென்றனர். ராமனும், லக்ஷ்மணனும் தங்களது தாய் தந்தையரைப் பணிவுடனும், மரியாதையாகவும், அன்புடனும் கவனித்துக் கொண்டனர்.
ஒருநாள், தனக்கு வயதாகி விட்ட கோலத்தைப் பார்த்த தஸரதன், மூத்த மகனான ராமனை அரியணையில் அமர்த்த வேண்டுமென முடிவு செய்தான். பட்டாபிஷேகத்தைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமென ஏற்பாடுகள் செய்து, அனைத்து ராஜாக்களுக்கும், முனிவர்களுக்கும் அழைப்பு அனுப்பினான். ராமன் அரியணை ஏறிவிட்டால், இலங்கைக்குச் செல்லாமலும், அசுரர்களை அழிக்காமலும் இருந்து விடுவானே எனத் தேவர்களும், அந்தணர்களும் பயத்தில் ஆழ்ந்தனர்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.