Monday, April 2, 2012

Rama Vijaya - Chapter-4

ராம விஜயம் --4

ஒருநாள் ராவணன் தனது விமானத்தில் போய்க்கொண்டிருந்தபோது, வழியில் ஒரு அழகிய பெண்ணைப் பார்த்தான். ஒரு தேவனின் மனைவியான அவளைப் பலாத்காரம் செய்ய முயன்றபோது, அவள் நேராக பிரம்மதேவரிடம் சென்று முறையிட்டாள். 'எந்த ஒரு பெண்ணையாவது அவள் விருப்பமின்றித் தொட்டால், அவனது உடல் சுக்குநூறாகிச் சிதறிப் போகும்' என பிரமன் அவனைச் சபித்தார். அந்தச் சாபத்திற்குப் பயந்து அந்தப் பெண்ணை விடுத்துச் சென்றான்.
அதன் பிறகு, தனது வழியில் வந்த அந்தணர்களையும், பசுக்களையும் கொல்லலானான். அவனது கொடுமையால் பூமாதேவி நடுங்கிப் போய், ஒரு பசு வடிவெடுத்து, அனைத்து ரிஷிக்களையும், தேவர்களையும் அழைத்துக்கொண்டு பிரம்மதேவரிடம் சென்று தங்களைக் காக்கும்படி வேண்டினாள்.
அப்போது, 'தஸரதனின் குடும்பத்தில் நான் ராமன் என்னும் பெயருடன் பிறந்து, ராவணனையும், மற்ற அரக்கர்களையும் அழிப்பேன். அனைத்துத் தேவர்களையும், நல்லவர்களையும் மகிழச் செய்வேன். எனக்கு உதவி செய்வதற்காக, நான் படுத்துறங்கும் படுக்கையாக எனக்குச் சேவகம் செய்துவரும் சேஷன் இரண்டாவது சகோதரனாகவும், எனது கையில் நான் பற்றியிருக்கும் சங்கம் மூன்றாவது சகோதரனான பரதனாகவும், எனது ஆயுதமான சுதர்ஸனம், சத்ருக்னன் என்னும் நான்காவது சகோதரனாகவும் பிறப்பார்கள். நீங்கள் எல்லாத் தேவர்களும் வானரங்களாகப் பிறப்பீர்கள்; பரமசிவன் மாருதியாகவும், பிரம்மதேவன் ஜாம்பவானாகவும், தன்வந்த்ரி சுஷேனனாகவும், பிரஹஸ்பதி அங்கதனாகவும், சூரியன் சுக்ரீவனாகவும், அக்னி நளனாகவும், யமன் ரஷபனாகவும் பிறப்பார்கள்' என்னும் அசரீரி ஒலி கேட்டது. விஷ்ணுவின் இந்த ஒலியைக் கேட்ட தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
அயோத்தியில் தஸரதன், ஸுமித்ரை, கைகேயி என மேலும் இருவரை மனைவிகளாகக் கொண்டான். மிகத் திறமையான அரசனான தஸரதன் வில்வித்தையில் மிகவும் தேர்ச்சி பெற்றவனாக விளங்கினான். ஒருநாள் இரவு தூங்கும்போது, ஏதுமறியா ஒரு ஆணையும், பெண்ணையும் தான் கொல்வதுபோல ஒரு கனவு கண்டு, தனது குலகுருவான வஸிஷ்டரிடம் இந்தக் கனவின் பொருள் என்ன எனக் கேட்டான். 'இது துர்ச்சகுனங்களின் அறிகுறி. காட்டிற்குச் என்று, சில மான்களை வேட்டையாடிக் கொன்று ஒரு தவம் செய்வாயாக என வஸிஷ்டர் அவனுக்கு அறிவுரை சொன்னார். குருவின் அறிவுரைக்கிணங்க, தஸரதனும் மான்களைக் கொல்லவெனக் காட்டிற்குச் சென்றான். நாள் முழுதும் அலைந்து திரிந்து தேடியும், அவனது கண்களில் ஒரு மான் கூடத் தென்படவில்லை.
மாலைவேளையில், சூரிய அஸ்தமனத்தின் போது, ஒரு ஏரியின் அருகில் மறைந்திருந்து, மான்கள் நீர் குடிப்பதற்காக வருமென நினைத்துக் காத்திருந்தான். ஆனால், அந்த நேரத்தில் ஷ்ரவணன் என்னும் ஒரு சிறுவன், மிகவும் நலிவுற்ற, வயதான தனது தாய் தந்தையரை ஒரு காவடியில் சுமந்தபடி அந்தப் பக்கமாக வந்தான். மிகவும் தாகமாக இருந்த அவனது பெற்றோர், குடிக்கத் தண்ணீர் கொண்டுவரும்படி, மகனைக் கேட்ட்க, ஷ்ரவணனும் தான் சுமந்திருந்த காவடியைத் தரையில் மெதுவாக இறக்கி வைத்துவிட்டு, ஒரு குடுவையை எடுத்துக்கொண்டு நீர் கொணரச் சென்றான். அருகிலிருந்த ஏரியில், அவன் நீர் மொண்டு கொண்டிருக்கும்போது, அந்தச் சத்தத்தைக் கேட்ட தஸரதன், அது ஒரு மான் நீர் அருந்தும் ஓசை என எண்ணி, சத்தம் வந்த திசைப் பக்கமாக ஒரு அம்பை எய்தான். அது நேராக ஷ்ரவணனின் இதயத்தில் பாய்ந்து தைத்தது. மானைத் தேடி ஓடிவந்த தஸரதன் வீழ்ந்து கிடக்கும் சிறுவனைப் பார்த்து, தன் செயலுக்காக மிகவும் வருந்தினான்.
ஷ்ரவணன் தசரதனைப் பார்த்து, 'இனி நான் அதிக நேரம் உயிரோடு இருக்க மாட்டேன். எனவே, உடனே இந்தக் குடுவையில் இருக்கும் நீரைக் கொண்டுபோய், அங்கே தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனது தாய் தந்தையருக்குக் கொடுங்கள். அவர்களது தாகம் தணிந்த சத்தத்தைக் கேட்டதும்நான் நிம்மதியாக இறப்பேன். அவர்கள் இருவரும் மிகுந்த தள்ளாமையாய் இருப்பவர்கள். நடக்கக்கூட அவர்களால் முடியாது. அவர்களை நான் ஒரு காவடியில் சுமந்து சென்று கொண்டிருந்தேன். ஓ, எனது நல்ல அரசனே, அந்த வயதான ஏழைகளைக் காப்பாற்றுங்கள். அவர்களுக்கென இனி யாருமே இல்லை' என வேண்டினான்.
துக்கத்தால் தஸரதன் தவித்தான்; அழுதான்; ஆனால் அவனால் இந்த இழப்பைச் சரி செய்ய இயலவில்லை. நீர்க்குடுவையை எடுத்துக்கொண்டு, காவடி இருந்த இடத்திற்குச் சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் நின்றான் தஸரதன். பார்வையிழந்த ஷ்ரவணனின் தாய், எதிரே நிற்பவனைத் தன் மகன் என எண்ணிக்கொண்டு, 'மகனே, ஏன் ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்? இந்த நேரத்தில் உன்னை ஏரிக்கு அனுப்பியதால், எங்கள் மீது கோபமா? நீ எப்போதும் எங்கள் சொல்பேச்சுக் கேட்பவனாயிற்றே, மகனே! இன்று உன்னை எரிச்சலுறச் செய்ததன் காரணம் என்ன?' என வினவினாள்.
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் துக்கம் தாளமுடியாத தஸரதன், தனது மௌனத்தைக் கலைத்து, நடந்த துக்கநிகழ்வை அவர்களிடம் தெரிவித்தான். ஓலமிட்டுக் கதறிய அவ்விருவரும், 'ஷ்ரவணா, உன்னைப் போல் ஒரு பிள்ளையை இந்த உலகில் எவரால் பெற முடியும்? உன் பிரிவால் எங்கள் உள்ளம் வாடுகிறதே. நாங்களும் உன்னுடனேயே மாண்டு போகிறோம். எங்களால் இந்தத் துயரைத் தாங்க முடியவில்லையே! .....ஏ....எங்களது அருமைக் குழந்தையை இரக்கமின்றிக் கொன்ற கொலையாளியே, நாங்கள் அனுபவித்தது போலவே நீயும் இந்தப் புத்திர சோகத்தால் மாண்டுபோவாய் என உன்னைச் சபிக்கிறோம்' எனச் சாபமிட்டபடி அந்தக் கணமே மாண்டனர்.
தன்னால் நிகழ்ந்த இந்தத் துயரச் சம்பங்களுக்காக மிகவும் மனம் வருந்திய தஸரதன் அவர்களுடைய ஈமச் சடங்குகளைத் தானே செய்துமுடித்து, அயோத்திக்குத் திரும்பி நடந்தவனைத்தையும் வசிஷ்டரிடம் தெரிவித்தான்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.