Monday, April 2, 2012

Rama Vijaya- Chapter-3





ராம விஜயம் -- 3




இலங்கைக்குத் திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு, வாலி என்னும் வானர அரசனைச் சிறைப்பிடிக்க ராவணன் புறப்பட்டான். ராவணனை அப்படியே ஒரு பூச்சி பிடிப்பதுபோலத் தூக்கிக்கொண்டு, தனது மகன் அங்கதன் உறங்கிக் கொண்டிருந்தத் தொட்டிலின் மேலே கட்டித் தொங்கவிட்டான் வாலி. மீண்டும் வைஸ்ரவர் வந்து வாலியிடம் கெஞ்ச, அவரது வேண்டுகோளை ஏற்று வாலி அவனை விடுவித்தான்.ராவணனின் முகங்களில் சேற்றினைப் பூசி, அவனை இலங்கைக்கு அனுப்பி வைத்தான் வாலி.
ஒருநாள் ராவணன் பிரம்மதேவரைப் பார்த்து, 'எனக்கு யார் கையால் மரணம் சம்பவிக்கும்?' எனக் கேட்க, 'அஜபாலன் என்பவரின் பேரனும், தஸரதன் என்பவரின் மகனுமான ராமன் என்பவனின் கையால் அது நிகழும்' என பிரமன் பதிலிறுத்தார். அதைக் கேட்டு ஆவேசமுற்ற ராவணன், எப்படியாவது ராவணனையும், அவனது மனைவியையும் தான் கொல்லப் போவதாக சூளுரைத்தான்.
இது இப்படி இருக்க, அஜபாலன் தனது மகனான தஸரதனுக்குக் கௌஸல்யா என்பவளை மணம் செய்ய ஏற்பாடுகள் செய்தான். அப்போது நாரதர் அஜபாலனிடம், 'ராவணன் எப்படியாவது இவர்கள் இருவரையும் கொல்ல முடிவெடுத்திருப்பதால் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்குமாறு எச்சரித்தார். இதைக் கேட்ட அஜபாலன், தஸரதனையும், கௌஸல்யாவையும் ஒரு கப்பலில் ஏற்றிக்கொண்டு கடலில் வெகுதூரம் சென்று, தனது புரோஹிதரிடம் அவர்கள் திருமணத்தை நடத்தச் சொல்லும் நேரத்தில், ஒரு பெரும் அசுரப் படையுடன் ராவணன் அந்தக் கப்பலைத் தாக்கி அதைச் சுக்குநூறாக்கினான். தஸரதன், கௌஸலை இவர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் அங்கேயே மாண்டனர்.
கௌஸலையைச் சிறைபிடித்த ராவணன் அவளை ஒரு ஒரு பெட்டியில் அடைத்து, அந்தப் பெட்டியை ஒரு மீனிடம் கொடுத்தான். அந்த மீன் அதை ஒரு ஒதுக்குப்புறமான தீவிற்குக் கொண்டுசென்று பாதுகாப்பாக அங்கே வைத்தது. தப்பிப் பிழைத்துக் கடலில் தத்தளித்த தஸரதன் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு,ஒரு உடைந்துபோன கப்பலில் தஞ்சமடைந்தான். அந்தக் கப்பல் கௌஸலை இருந்த அந்தத் தீவுக்கே அவனைக் கொண்டு சென்றது.
கடற்கரையில் ஒதுங்கிய தஸரதன், அங்கே ஒரு பெட்டியைக் கண்டு, தன் களைப்பு தீர்வதற்காக அதன் மீது உட்கார்ந்தான். இளைப்பாறியபின், ஒரு ஆர்வத்தில் அந்தப் பெட்டியைத் திறந்துபார்க்க, கௌஸல்யா அதில் இருந்ததைக் கண்டு ஆச்சரியம் அடைந்தான். அப்போது நாரதர் அங்கே வந்து அவர்களது திருமணத்தை நடத்திக் கொடுத்து, அவர்களுக்கு தெய்வமே ராமன் என்ற ஒரு மகனாகப் பிறப்பார் என ஆசி கூறினார்.
அங்கே இலங்கையில், ராவணன் பிரம்மதேவரிடம் அவர் சொன்ன ஆரூடத்தைக் கேலி செய்து, 'எங்கே தஸரதன்? அவன் கடலில் சிக்கி அழிந்த சேதி தெரியுமா?' எனச் சீண்டினான். பிரம்மதேவர் அமைதியாக, ' தஸரதனுக்கும் கௌசலைக்கும் திருமணம் நடந்தாகி விட்டது. ராமன் விரைவிலேயே அவர்களுக்குப் பிறக்கப் போவதை விரைவிலேயே காண்பாய்' என மறுமொழி சொன்னார்.
'அப்படியானால் அவ்விருவரையும் உடனே இங்கு கொண்டு வாருங்கள்' என ராவணன் கேட்க, 'அப்படி நான் அவர்களைக் கொண்டுவந்தால், நீ எனக்கு என்ன தருவாய்?' என பிரம்மா கேட்டார். 'நீங்கள் என்ன கேட்டாலும் அதைத் தருகிறேன்' என ராவணன் உறுதியளித்தான்.
பிரம்மதேவர் உடனே சென்று அந்தத் தீவில் இருந்த பெட்டியைக் கொண்டுவந்து, அதைத் திறந்து அதற்குள் மணமகனும், மணமகளுமாக இருந்த தஸரதனையும், கௌசல்யாவையும் காட்டினார். அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அளவில்லாக் கோபமடைந்த ராவணன், அவர்களது தலைகளை வெட்டப் போனான். அப்போது, பிரம்மா முன்னே வந்து அவனைத் தடுத்து, 'இவர்களைக் கொண்டுவந்தால் நான் என்ன கேட்டாலும் தருவதாகச் சொன்னாய் அல்லவா? இப்போது கேட்கிறேன். இவர்களைக் கொல்லக் கூடாது என்னும் வரமே அது!' எனச் சொன்னார். 'இந்த இழிபிறவிகளைக் கொல்லக்கூடாது என்பதைத் தவிர நீங்கள் வேறு என்ன கேட்டாலும் நான் தருகிறேன்' என ராவணன் ஆத்திரப் பட்டான். பிரம்மனோ, 'எனக்கு வேறெந்த வரமும் வேண்டாம். இதுவே நான் கேட்கும் வரம். இவர்களது உயிரைக் காப்பாற்று' என உறுதியாக நின்றார். தான் கொடுத்த சத்தியத்தை மீற முடியாமல், வேறு வழியின்றி, ராவணனும் அவர்களைக் கொல்லாமல் விட்டான்.அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு அயோத்தி சென்ற பிரம்மதேவர் கோஸல நாட்டுக்கு மன்னனாக தஸரதனுக்கு முடி சூட்டினார்.

[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.