Friday, May 23, 2014

Sai Charita - 10


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 10


[ஸாயிபாபாவின் வாழ்க்கை நடைமுறை - அவர் படுக்கும் பலகை - ஷீர்டியில் அவரின் வாசம் - அவரின் அறிவுரைகள் - அவரின் பணிவு - மிகவும் எளிய வழி.]

**************

அன்புடன் பாபாவை அனுதினமும் நினைத்திடுக
அனைவர்க்கும் நன்மையே செய்திடும் பண்பாளரை

பிறப்பு இறப்பெனும் புதிரினின்று விடுபட
பாபாவை நினைப்பதொன்றே நாளும் நல்லவழி

செலவில்லாச் சாதனையிது பயிலுவதும் எளிதே
சிறிதளவு முயற்சியே பெரும்பேற்றைத் தந்துவிடும்

குருவெனும் ஒருவரே கண்கண்ட தெய்வமாம்
திருவடி நினைவே நல்வழியும் காட்டிடுமே

உளமுடன் பணிந்திட விலகிடும் பந்தமே
வேறொரு தத்துவமும் பயின்றிடத் தேவையில்லை

கவலையும் துன்பமும் நிறைந்திடும் வாழ்வெனும்
கடலினைக் கடந்திடச் சிறந்ததோர் வழியாம் [510]

கடலினைக் கடந்திட உதவிடும் மாலுமியாய்
குருவிவர் நம்மைக் கரைசேர்த் திடுவார்

தீவிர பக்தி உணர்வினை உணர்ந்திவர்
ஞானம் நல்கிப் பேரின்பம் தருவார்

பிச்சை யெடுத்ததும் பக்தரின் அனுபவமும்
பார்த்தப் பின்னர், வாழ்வின் முறையும்

எவ்விதம் உறங்கினார் ஏதெல்லாம் கற்பித்தார்
என்னும் செய்தியை இனிநாம் காண்போம்

'பாபாவின் அற்புதமான படுக்கும் பலகை'

எங்குறங் கினார்பாபா எவ்விதம் படுத்தார்
என்பதை இங்கே நாமும் பார்ப்போம்

நான்குமுழநீளமும் ஒருமுழவகலமும் கொண்டதோர் பலகையொன்றினை
பாபா உறங்கவென 'நானாஸாஹேப் டேங்லே' கொணர்ந்தார்

தரையில்வைத்துப் படுக்காமல் உத்தரத்தில் உயரக்கட்டி
கந்தல்துணிகளால் ஊஞ்சலெனத் தொங்கவிட்டு உறங்கினார்பாபா

பலகையும் கந்தலும் எவ்விதம் ஸாயியின்
உடல்பளு தாங்கிய தென்பதும் அவரதுலீலையே!

மூலைக்கொரு மண்விளக்கினை இரவுமுழுதும் எரியச்செய்து
பாபாஉறங்கிய காட்சியைக்கண்டவர் பெற்றபேறுதான் என்னேஎன்னே!

எவ்விதமேறினார் எவ்விதமிறங்கினார் எவருமிதுவரைக் கண்டதுமில்லை
காணவேண்டி வந்தகூட்டம் அதிகமாகிப்போயிடவே

பலகையைஉடைத்துவிட்டார் [520]

அட்டமாசித்தியும் அவர்வசமிருந்தது ஆயினும்அவரதைப் பயின்றதுமில்லை
எட்டாசித்திகளும் தாமேஓடிவந்து அவரதுஅடியினில் பணிந்துநின்றதே!

'பிரம்மத்தின் உருவ வெளிப்பாடு'::

ஐந்தேகாலடி மனிதனாய்வாழ்ந்தும் அனைவருள்ளும் அவரேவாழ்ந்தார்
தமக்கெனவேண்டாத் தன்மையிருந்தும் அடியார்நலமே அவரும்விழைந்தார்

உள்ளிலார்வம் ஏதுமில்லாதிருந்தும் அடியார்க்கெனவே ஆசைகள்கொண்டார்
சாந்தம்ததும்பும் உள்ளமிருந்தும் இருப்புக்கொள்ளாமல் பாபாதவித்தார்

பிரம்மானந்தம் நிரம்பியிருந்தும் பிசாசுபோல வெளியில்நடந்தார்
உள்ளிலொன்றாய் உணர்ந்திருந்தும் பந்தம்கொண்டவர்போல் பாசாங்குசெய்தார்

பாசம்ததும்பிடும் பார்வைவீசியும் கற்களையெறிந்தும் கடிந்துகொண்டார்
அன்புடனணைத்தும் பல்வேறுநிலையிலும் ஆத்மாவிலேயே என்றும்உறைந்தார்

அடியவர்வேண்டிடும் அனைத்துச்செயலையும் அக்கறைகொண்டே அவரும்முடித்தார் ஓரிடமர்ந்தார்; வேறிடம்செல்லாமல் ஷீர்டியிலேயே பாபாவாழ்ந்தார்

துறவிகள்கைக்கொளும் 'தண்டம்'போலொரு 'ஸட்கா'ஒன்றே அவரும்கொண்டார்

அனைத்தும்துறந்தும் பிச்சையெடுத்தும் ஆண்டியைப்போலவே அவரும்வாழ்ந்தார்

'அல்லாமாலிக்'எனுமொரு மந்திரம் எப்போதுமவர் சொல்லியிருந்தார்
அடியவர்மீது அளவிலாஅன்பினை எப்போதுமவர் கொண்டேநிறைந்தார்

புல்லினில்தொடங்கிப் பிரபஞ்சம்வரைக்கும் விரிந்திடுமனைத்துமே பாபாவடிவம்

நல்லூழ்கொண்டவர் ஸாயியென்னும் அருட்பெரும்புதையலைக் கண்டுமகிழ்ந்தார்

'பாபாவின் ஷீர்டி வாசமும், பிறந்த ஆண்டு பற்றிய அனுமானமும்'

என்றுபிறந்தார் எங்குபிறந்தார் யாரிவர்பெற்றோர் எவருமறியார்
ஷீர்டிவாசம் கொண்டேயவரது பிறந்தவிவரம் ஊகித்தறியலாம் [530]

பதினாறுவயதுப் பாலகனாய்அவர் ஷீர்டிகிராமம் முதலில்வந்தார்
வந்தவர்ஆங்கே மூன்றாண்டுகள் தங்கியபின்னர் மறைந்துபோனார்

மீண்டும்நைஜாம் ஔரங்காபாத் அருகினில்தெரிகையில் வயதோயிருபது
சாந்த்படீலின் திருமணக்குழுவுடன் ஷீர்டிவந்தவர் அங்கேதங்கினார்

அறுபதாண்டுகள் ஷீர்டியில்வாழ்ந்து ஆயிரத்துத்தொளாயிரத்துப் பதினெட்டாமாண்டில்

மஹாஸமாதி அடைந்ததைவைத்து ஆயிரத்தெண்ணூற்று முப்பத்தெட்டெனலாம்

'பாபா மேற்கொண்ட பணியும், உபதேசமும்'

ஹிந்துமுஸ்லீம் இணைப்பைவளர்க்க இராமதாசர் அவதரித்தார்
'ஆ'மறைகாத்து அவர்செய்தபணியை மீண்டும்தொடர்ந்திட பாபாவந்தார்

ராமனும்ரஹீமும் இருவருமொன்றே; வேற்றுமையதனில் ஏதுமேயில்லை
இப்படியிருக்க அடியவர்தம்முள் சண்டையிடுதலால் பயனேதுமில்லை

இருவருமொன்றாய் இணைந்துநடந்திட நாட்டினொற்றுமை நிறைவாய்நிகழும்

விவாதமின்றி போட்டிகளின்றி தத்தம்நலனை மட்டுமேகருதுக
'யோகம்தியாகம் தவம்ஞானம்' கடவுளையறிந்திடும் நல்வழியாகும்

இவற்றுளொன்றினைத் தமக்கெனக்கொண்டு வெற்றிகொள்வதே பிறப்பின்பயனாம்

தீங்கிழைத்தவரைப் பழிக்குப்பழியெனத் தீர்த்துக்கட்டுதல் செய்திடவேண்டாம்
நம்மாலியன்ற நன்மையொன்றையே இயன்றவரையினில் செய்திடப்பழகுக

இதுவேபாபா பொதுவாயருளிய உபதேசச் சாரம். இதனைநன்றாய்
மனதினில்கொண்டு முறையாய்ச் செய்திட நலங்கள்யாவும் தாமேசூழும்.

'ஸத்குருவாக ஸாயிபாபா':

பலரிங்கு குருமார்கள்! பலவிதமாய் வேடங்கள்!
வாத்தியமிசைத்து படாடோபம்காட்டி மந்திரமோதும் குருமாருண்டு
கடவுட்பற்றையும் காட்டுதற்போல சீடரிடத்தில் பணத்தைக்கறப்பர் [540]

இறைவனையறியா இவராலெங்ஙனம் இறைதரிசனத்தைக் காட்டிடவியலும்?
பாபாஇத்தகு முயற்சிகளெதையும் ஒருபோதுமவர் கொண்டிடவில்லை

தாமேதம்மை நியமித்தவரெலாம் 'நியத்'தெனும்பெயருடைக் குருமாராவர்
அனைவர்க்கும்பொதுவாய் அன்பைக்காட்டிடும் 'அநியத்'தென்னும் குருமாருண்டு

தன்னுள்ளிருக்கும் பண்பினைவளர்த்து நல்வழிசெலுத்தும் உபதேசத்தால்
நமக்குநற்கதி கிடைத்திடும்வழியில் நாமேசென்றிட பின்னவருதவுவர்

முன்னவரோநம் இயல்பினையழித்து 'நீயேயது'வென நம்பிடச்செய்வர்
பல்வகைகுருமார் பலபேரிருந்தும் அவர்களனைவரும் குருமாராகார்

எம்மிலிருக்கும் இயற்கையையுணர்ந்து உலகபந்தமெனும் கடலைக்கடந்து
அப்பாலுமெமைக் கூட்டிசென்றிடும் வல்லமையுடையார் ஸத்குருஆவார்.

ஸாயிபாபா செய்திடும்வழியால் அவருமிங்கொரு ஸத்குருஆவார்
தரிசனம்கண்டிட அனைத்தையும்கூறி அனைவருள்ளும் தெய்வீகம்கண்டார்

நண்பரும்பகைவரும் ஒன்றெனக்கொண்டு ஆசையற்றவர் சமநிலைகொண்டார்
தீதும்நன்றும் வேறெதுவரினும் அவற்றாலவரும் கலங்கிடவில்லை

உலகியல்வாழ்வில் இருந்தபோதிலும் பற்றினையறுத்து யோகியாய்வாழ்ந்தார்

உருவமிருந்தும் அருவரூபமாய் இவ்வுலகைவிட்டவர் தனித்தேயிருந்தார்
இத்தகுஸாயியை வணங்கிடும்பேறு ஷீர்டிமக்கள் செய்தபெரும்புண்ணியம்

எவ்வகைச்செயலை செய்திட்டபோதிலும் ஸாயியையவர்கள் மறக்கவேயில்லை

அவர்புகழ்பாடி பிறிதொருகடவுளை அறியாவண்ணம் நாளும்வாழ்ந்தனர்
எளிதொருமொழியில் இனிமைநிறைந்த கிராமியப்பாடலால் ஷீர்டிமாதர் [550]

பாடியபாடலில் இலக்கணமின்றியும் இனிமைநிறைந்து உணர்வினைத்தந்தது
அன்பின்முழுமையைச் சொல்லிடும்பாடலின் அர்த்தங்களனைத்தும் அறிவோரறிவர்

'பாபாவின் பணிவுடைமை':

'புகழும்செல்வமும் ஆசையறுத்தலும் ஞானமும்ஆற்றலும் கொடுத்தலுமாகிய

ஆறுகுணங்களே' பரமாத்மாவெனும் கடவுளின்குணங்கள் என்றேசொல்லுவர்
ஆறும்நிரம்பிய பேரறிவாளராய் பாபாதம்மிடம் கொண்டவர்திகழ்ந்தார்

அடியார்க்கெனவே அவதாரம்செய்தவர் அவர்களைத்தம்பால் அவரேயிழுத்தார்

எளிமைநிறைந்த பண்புடையாளர் தாமேயொருநாள் கூறியகூற்றிது:
'அடிமையுளடிமை; கடன்பலபட்டவன்; நும்முடைதரிசனம் என்றன்மனநிறை;

அடியார்திருவடி தரிசனம்செய்திடும் பேறினைப்பெற்றவன்; அவர்தம்மலத்திடை

நானொருபுழுவாய்க் கிடந்திடும்பேற்றினைப் பெற்றவனாவேன்'என்றவர்சொன்னதை

இங்கேயெழுதிடும் என்னைமன்னித்து ஸாயியின்புகழைப் பாடியேபணிவோம்.
பாபாயெதையும் உண்டபோதிலும் அதனாலவரும் மகிழ்ந்திடவில்லை

அனுமனைப்போன்றே பிரம்மச்சரியராய் தூயவுணர்வின் திரளாய்த்திகழ்ந்தார்
அமைதியின்பிறப்பிடம் ஆசைகோபம் அனைத்தும்விடுத்த நிகழ்ச்சியின்கதையிது!

'நானாவலி'::

தன்னுடைப்போக்கில் நித்தமும்வாழ்ந்திடும் விசித்திரமனிதன் 'நானாவலி'யெனும் பாபாவின்பணியாள் ஒருநாள்ஸாயியை ஆசனத்தினின்றும் எழுகவென்றான்

'தானதில்அமர்ந்திடும் தேவையிருப்பதால் உடனேயெழுக' என்றேகத்தினான்
பாபாஉடனே அவன்சொல்கேட்டிட நானாவலியும் ஆங்கேஅமர்ந்தான்

சற்றுநேரமவன் அதிலேயமர்ந்துப் பின்னரெழுந்து ஸாயியையழைத்து
மீண்டுமதிலே அவரையமர்த்தி ஸாயியைவணங்கித் தன்வழிசென்றான் [560]

இவ்வகைநிகழ்ந்ததில் எள்ளளவேனும் பாபாவருத்தம் கொள்ளவேயில்லை
அன்பன்நானாவலியும் பாபாமறைந்த பதின்மூன்றாம்நாளில் தானும்மரித்தான்

'மிகவும் எளிய வழி':

குருகதைகேட்பதும் அடியார்நிழலில் கூடியிருப்பதும் எளிதொருவழியாம்
தாமொருமனிதராய்க் காட்டியபோதிலும் அவர்தம்செய்கைகள் திறமையைக்காட்டின

செய்திடும்செயலெலாம் அடியவர்நலனைக் கருதியேநிகழ்ந்தன என்பதேஉண்மை

மூச்சினைப்பழக்கிடக் கற்றுத்தரவில்லை; வழிபடும்முறைமைகள் எதுவுமேயில்லை

அனைத்தையும்விடுத்து அல்லும்பகலும் ஸாயிஸாயி எனுமொருநினைவினைக்

கொன்டவர்செய்திடின் கட்டுக்களனைத்தும் விட்டவர்விடுதலை அடைவாரென்றார்

அந்தணர்செய்திடும் யாகமும்யோகமும் மற்றவர்செய்திடல் கடினமாய்ப்போகும்

மனதின்செயலதும் நினைப்பதுவொன்றே; எண்ணங்களின்றி இருத்தலும்கடினம்

புலனைச்சார்ந்த நினைவுகள்கொண்டால் மனமுமதையே நினைத்துயிர்வாழும்

குருவைப்பற்றிய எண்ணக்கொண்டால் குருவைச்சுற்றியே வட்டமிட்டாடும்
ஸாயியின்பெருமையைக் கூறிடும்கதைகளைக் கேட்டிடலொன்றும் கடினமேயில்லை

உலகியல்தாண்டி பயத்தையழித்து ஆன்மீகப்பாதையில் நடத்திச்செல்லும்
மனத்துடனொன்றிக் கதைகளைக்கேட்டதை நினைவில்கொண்டே செரித்திடச்செய்தால்

ஆண்பெண்னனைவரும் தூய்மையடைந்து நற்கதியடைந்திடும் எளிதொருவழியிது!

உலகக்கடமைகள் செய்திட்டபோதும் மனத்தைமட்டும் ஸாயிக்குத்தருக
இப்படிச்செய்திடும் அடியார்களைஸாயி ஆசீர்வதிப்பது திண்ணமேயாகும்

இத்தகுஎளிதொரு வழியிதுவிருந்தும் அனைவரும்ஏனிதைச் செய்திடவில்லை?

இறையருளின்றி கதைகளைக்கேட்டிடும் ஆர்வம்நம்முள் உதிப்பதுமில்லை? [570]

பெரியோர்கதைகளைக் கேட்டிடலென்பது அவர்தம்உறவினைப் பெறுதலையொக்கும் உடலுணர்வகற்றி ஆணவமடக்கி பிறப்பிறப்பென்னும் சங்கிலியறுக்கும்

தூயவுணர்வினை நாளும்பெருக்கிப் புலன்களின்நாட்டம் அற்றிடச்செய்து
ஆன்மிகப்பாதையில் தொடர்ந்துநடந்திடும் வல்லமையளித்து விடுதலைகொடுக்கும்

எவ்வொருசாதனை செய்திடாவிடினும் நல்லோரடியில் சரணம்புகுந்திட
இவ்வுலகத்து ஆசைகளகற்றி விடுதலைப்பாதையில் இட்டுச்செல்வர்

உயர்ந்தோர்பிறந்திட இதுவேகாரணம்! உலகோர்பாவம் அடித்துச்சென்றிடும்
புண்ணியநதிகளும் நல்லோர்வந்து புனிதப்படுத்தவே நாளுமேங்குது

சேர்த்துவைத்திட்ட புண்ணியப்பேற்றால் நாமும்ஸாயியின் திருவடியடைந்தோம்

ஸாயிரூபத்தை மனதினில்கொண்டே இலம்பகமிதனை இத்துடன்முடிப்போம்!

சுந்தரஸாயி மசூதிவிளிம்பின் அருகேநின்று திருக்கரம்நீட்டி
அவரவர்நன்மையைக் கருத்திற்கொண்டு 'உதி'யையள்ளித் தந்துநிற்கிறார்

உலகினைவெறுத்து பேரானந்தத்தில் என்றுமேதிளைக்கும் ஸாயியின்முன்னால்

நாமும்பணிந்து திருவடிவணங்கி ஸாயியைநினைந்து தொழுதிடுவோமே! [577]

ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.