Wednesday, May 21, 2014

Sai Charita -8


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 8 


மானிடப் பிறவியின் சிறப்பு - ஸாயிபாபா உணவுப் பிச்சையெடுத்தல் - பாயஜாபாயியின் சேவை- ஸாயிபாபாவின் படுக்கை - குசால் சந்திடம் அவருக்கு உள்ள பிரேமை
***************

எவ்விதம்பாபா உணவினைஇரந்தார் எவ்விதம்பாயஜாபாயி சேவைசெய்தார்
எவ்விதம்பாபா மசூதியில்தினமும் மஹால்ஸாபதியுடனும் தாத்யாபாடீலுடனும்

உறக்கம்கொண்டார் எவ்விதம்குசால்சந்தை அவரும்விரும்பினார் என்பதைச்சொல்லிடும்
கதைகளையிங்கே இவ்விலம்பகத்தில் ஹேமாத்பந்த்தும் சுவைபடச்சொல்கிறார்.

'மானிடப் பிறவியின் சிறப்பு' ::

அண்டத்தில் உருவான ஜீவராசிகள் கோடானுகோடி
ஆண்டவன் படைப்பினில் இவையெல்லாம் தனைநாடிச்

செய்கின்ற புண்ணியங்கள் மேலுலகு இட்டுச்செல்லும்
மகிழ்ச்சியெனும் சொர்க்கத்தில் சிலகாலம் தங்கச்செய்யும்

புரிந்திட்ட பாவங்கள் நரகத்தில் தள்ளிவிடும்
தீவினையின் பயனாக வருத்தத்தைத் தந்துவிடும்

இருவினையும் சமமாக வருகின்ற பொழுதினிலே
மீண்டுமொரு பிறப்பெடுத்து முக்திக்கு வாய்ப்புவரும்

நல்வினையும் தீவினையும் முற்றிலுமாய் அகன்றிடவே
முக்தியெனும் பெருநிலையில் சுதந்திரமாய்த் திகழ்ந்திடுவார்

'மானிட உடம்பின் தனிச்சிறப்பு' ::

'உணவுறக்கம் பயம்புணர்ச்சி' என்னுமொரு நாலுவகைக்
குணங்களுமே அனைவருக்கும் இவ்வுலகில் பொதுவாகும்

மானிடராய்ப் பிறந்தவரே ஞானமெனும் தனிச்சிறப்பால்
ஆண்டவனின் தரிசனத்தைப் பெரும்பேறு பெற்றவராம்

தேவர்களும் மனிதரிடம் பொறாமைகொள்ளும் விஷயமிது
மோட்சத்தைப் பெறவெனவே மானிடராய்ப் பிறப்பெடுப்பார் [360]

பலவிதமாய் அழுக்குகளைத் தாங்கிவரும் இவ்வுடலைக்
கேவலமாய்ச் சிலரிங்கு கூறுவதைக் கேட்டிடலாம்

ஓரளவு உண்மையிது யென்றாலும் ஞானத்தை
அடைவதற்கு இவ்வுடலே காரணமாம் என்றுணர்வீர்

நிலையில்லா வுடல்மூலம் விலையில்லா இவ்வுலகின்
நிலையில்லாத் தன்மையினை நாமுணர முடிகிறது

இவ்வுலக வாசனையை வெறுக்கின்ற எண்ணமும்
புலனடக்கம் என்னுமொரு மேலான செய்கையும்

இறைவனையே காட்டிவிடும் காரணமாய் இவ்வுடலே
இங்கெமக்குப் பயன்நல்கிப் பேருதவி புரிகிறது

புலன்வழியே ஓடவிட்டுப் பாழ்நரகம் அடையாமல்
முறையாகப் பராமரிக்கும் வழியினையே சொல்லுகிறேன்

குதிரைமீது செல்லுகின்ற பயணியவன் தன்குதிரை
நலமாக எவ்வண்ணம் பாதுகாத்து வருவானோ

அவ்வண்ணம் இவ்வுடம்பை நாமுமிங்கே காக்கவேண்டும்
இறைதரிசனம் எனுமொன்றே குறிக்கோளாய்க் கொளல்வேண்டும்

பல்வேறு பிராணிகளை ஆண்டவனும் படைத்தாலும்
யாதொன்றும் அவனுக்கு மனவமைதி தரவில்லை

ஆதலினால் அவர்படைத்த அற்புதமே மானிடராம்
ஞானமெனும் துணைகொண்டு இறையவனின் லீலைகளை [370]

மனிதனிங்கே சொல்லுகையில் பேராளன் மகிழ்கின்றார்
எக்குலத்தில் பிறந்தாலும் பாபாவின் பாதத்தில்

தஞ்சமெனச் சரணடைந்த அடியாரே இவ்வுலகில்
பெறற்கரியப் பேறிதனைப் பெற்றவராம் என்றுணர்வீர்!

'மனிதனின் முயற்சி' ::

அருமையான இப்பிறப்பின் மகிமையினை நாமுணர்ந்து
மரணமிங்கு நிச்சயமே என்பதனைப் புரிந்துகொண்டு

சிறிதளவும் நேரத்தை வீணாக்க முனையாமல்
எப்போதும் விழிப்பாக விரைவாகச் செயல்படுவோம்

மனையாளை இழந்தவனும் மறுமணமே புரிவதுபோல்
மகனிழந்த வேந்தனும் அக்கறையாய்த் தேடுதல்போல்

ஊக்கமுடன் இலக்கடைய வேகமுடன் செயல்புரிவோம்
சோம்பலைத் தள்ளிவிட்டுத் தூக்கத்தைத் துறந்துவிட்டு

அல்லும் பகலுமே ஆத்மத்யானம் செய்துவந்து
நமைநாமே தாழ்த்தாமல் மேலுயர்ந்து சென்றிடுவோம்

'எவ்வாறு செல்வது?' ::

இறைக்காட்சி கண்டிருக்கும் ஞானியரை அணுகுவதே
குறிக்கோளை அடைவதற்குச் சிறந்தவோர் மார்க்கமாகும்

பலநூலைப் பயின்றாலும் கிட்டாத பேருணர்வு
ஆன்மஞானி அருகினிலே செல்லுவதால் எளிதாகும்

நூறாயிரம் தாரகைகள் அளிக்கவொண்ணாப் பேரொளியை
ஆதவனின் கிரணங்கள் நமக்களிக்கும் தன்மையைப்போல் [380]

எதனாலும் தரவியலா விவேகத்தை நாமடைய
குருவருளின் அடிநாடிச் செல்லுதலே பயனாகும்

அவர்காட்டும் அசைவுகளும் அவர்காட்டும் வழிமுறையும்
அடியவரை வழிப்படுத்தி ஆன்மீக ஒளிகாட்டும்

ஸாயிபாபா இத்தகைய ஸத்குருவே என்றுணர்க
பக்கிரியாய் நடித்தாலும் ஆத்மாவில் நிலைத்திருந்தார்

படைத்திருக்கும் ஜீவராசி அனைத்திலுமே இறைகண்டு
அதன்மீது அன்புடனே எப்போதும் அருள்செய்தார்

சுகதுக்கம் ஏதுமின்றி ஏழைசெல்வர் பேதமின்றி
சகலரையும் அன்புடனே நேசித்து அவர்வாழ்ந்தார்

எவருடைய பார்வையினால் ஆண்டியும் உயர்வானோ
அவரிங்கே ஷீர்டியில் நாள்தோறும் பிச்சைகேட்டார்

அரசர்க்கும் அரசரிவர் வீடுவீடாய்ச் சென்றுவந்து
பிச்சைகேட்ட விவரத்தை இப்போது கவனிப்போம்

'பாபா உணவை இரத்தல்'

'ஓ லாஸி, ஏதேனும் ரொட்டித்துண்டு கொடுத்திடுக'
என்றெவரின் இல்லத்தின் வாசலிலே தாம்நின்று

ஸாயிபாபா கேட்டாரோ அவரெல்லாம் புண்ணியவான்
கையிலோர் தகரக்குவளை ஜோலியெனும் சிறுதுண்டு

இதையேந்தி தினந்தோறும் ஷீர்டியின் தெருக்களிலே
குறிப்பிட்ட சிலரில்லம் தனைநாடி பாபாசென்றார் [390]

திரவப்பொருளைக் குவளையிலும் திடவுணவைத் துண்டினிலும்
ஒன்றாகக் கூட்டியவர் பகிர்ந்துண்டு வாழ்ந்திருந்தார்

ஒன்றாகக் கலந்ததிலே சுவையேதும் இருக்காது
இப்படித்தான் பாபாவும் தம்நாவை அடக்கிவைத்தார்

மதியம்வரை சிலநாளும், சிலசமயம் சிலவீடே
சென்றங்கே சேர்த்ததெல்லாம் ஒன்றாகச் சட்டியிலிட்டு

நாயுடனும் பூனையுடனும் சமமாகச் சாப்பிட்டார்
வேறுசிலர் அங்குவந்து ரொட்டிகளை எடுத்தாலும்

பாபாவும் அவர்களையே ஓர்நாளும் கடிந்ததில்லை
சுடுசொல்லே அறியாத பாபாவின் குணமிதுவே

பிச்சையுண்டு வாழ்ந்தவொரு பக்கிரியே இவரென்று
ஊர்மக்கள் தொடக்கத்தில் உதாசீனம் செய்தனரே

பார்வைக்குப் பக்கிரிபோல் தெரிந்தாலும் உள்ளத்தில்
தானம்தயை நிறைந்தவராய் பாபாவும் தெரிந்தாரே

பலரிங்கு இகழ்ந்தாலும் ஓர்சிலரும் பாபாவின்
உன்னதத்தை அறிந்தகதை இப்போது சொல்லுகிறேன்

'பாயஜாபாயியின் உன்னத சேவை'

காடுகளில் வேலைசெய்யும் பெண்ணொருத்தி பாபாவைக்
கண்டஅந்த நாள்முதலாய் மஹானிவர் என்றுணர்ந்து

நாள்தோறும் உணவினையேத் தன்தலையில் சுமந்துவந்து
காட்டிடையே அலைந்திருந்து பக்கிரியைத் தேடிடுவார் [400]

அசைவின்றி அமர்ந்திருக்கும் அவர்முன்னே அமுதுபடைத்து
ஆகாரம் உண்ணவைக்க அரும்பாடு பட்டிடுவார்

தாத்யாவின் தாயிவரின் நற்பெயரும் பாயஜாபாயி
சேவையெனச் சொன்னாலும் தவமெனவேக் கொண்டாலும்

பாயஜா பாயிஇவரின் அருங்குணத்தை ஒருபோதும்
பாபாவும் மறக்காமல் தாயெனவேக் கொண்டிட்டார்

தம்மிறுதி மூச்சுவரைத் தாயிவரின் சேவையினை
அன்புடனே நினைத்திருந்து அருளாசி வழங்கிட்டார்

சிலகாலம் சென்றபின்னர் மசூதிக்கு வந்தபின்னர்
பாயஜாவின் அலைச்சலுக்கோர் முடிவங்கே வந்தது

'மூவரின் படுக்கையிடம்'

வாஸுதேவர் உறைகின்ற ஞானியரே மேலோராம்
அவரடியைப் பணிகின்ற அடியாரும் மேலோரே

'தாத்யா'வும் 'மஹால்ஸாபதி'யும் இவ்வண்ணம் பேறுபெற்றார்
பாபாவின் கூட்டுறவில் இவர்க்கென்றும் சமபங்கே

கிழக்குமேற்கு வடதிசையில் தலைவைத்துப் படுத்திருந்து
கால்களெல்லாம் சந்திக்க மூவருமே உறங்கிடுவார்

படுத்தபடி பலவிஷயம் அரட்டையெனத் தொடர்ந்திருந்து
நள்ளிரவு வரும்வரைக்கும் மசூதியில் களித்திருந்தார்

முன்னதாக யாரேனும் தூங்கவங்கே முற்பட்டால்
அவரருகே சென்றுபாபா உலுக்கிவிட்டு விழிக்கச்செய்வார் [410]

பதினான்கு ஆண்டுகளாய் தாத்யாவும் உறவைவிட்டு
பாபாவின் அருகினிலே தினந்தோறும் படுத்திருந்தார்

யாருக்குக் கிட்டுமிந்த அன்பான ஆசிகளே!
ஆனந்த நாட்களன்றோ இவர்க்கெல்லாம் கிட்டியது!

தந்தையார் காலமாக தாத்யாவும் வீடுசென்று
பொறுப்பாகத் தன்வீட்டில் அதன்பின்னார் உறங்கிவந்தார்

'ராஹாதாவைச் சேர்ந்த குஷால்சந்த்'

'கண்பத்கோதே பாடீலெ'னும் நல்லவரை நேசித்தார்
ராஹாதாவில் வசித்துவந்த மார்வாடியின் நேசம்கொண்டார்

'சந்த்ரபன் சேட்'டென்னும் மார்வாடியின் சகோதரர்
புத்திரனாம் 'குஷால்சந்தை' மிகவுமே நேசித்தார்

மாட்டுவண்டி டாங்காவில் சிலசமயம் ஏறிவந்து
நண்பருடன் விஜயம்செய்து குஷால்வீடு சென்றிடுவார்

ஊர்வலமாய் உள்ளேசென்று குஷால்சந்தின் அன்பான
உபசரிப்பில் மனமகிழ்ந்து உணவருந்தி உரையாடி

நல்லாசி நல்கிவிட்டு பாபாவும் திரும்பிடுவார்
குஷால்சந்தின் மீதிருந்த அன்புணர்வே காரணமாம்

நிம்காங்வும் ராஹாதாவும் ஷீர்டியின் இருபுறமும்
இவைதவிர வேறெங்கும் ஸாயிபாபா சென்றதில்லை

ரயில்வண்டி எதனையுமே பாபாவும் பார்த்ததில்லை
என்றாலும் தவறாமல் நேரத்தை அறிந்திடுவார் [420]

அன்பர்க்கு இவ்விதமே கட்டளையும் கொடுத்திடுவார்
அவர்சொல்லைக் கேட்டவர்க்கு நலமொன்றே நிறைந்துவிடும்

மதியாமல் சென்றவர்க்கோ பலதுன்பம் வந்ததுண்டு
இதுபற்றிய கதைபலவும் அடுத்ததிலே கண்டிடுவோம்
__________________

'குறிப்பு'

குஷால்சந்த் பற்றியதோர் அருமையான நிகழ்வொன்றை
முப்பதாம் இலம்பகத்தில் விரிவாகச் சொல்லிடுவேன். [423]

ஸ்ரீ ஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.